மாணிக்கவாசகர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 89: Line 89:


ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த கலைக்களஞ்சியமான  "அபிதான சிந்தாமணி" பக் 851- 853.                                                            தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30
ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த கலைக்களஞ்சியமான  "அபிதான சிந்தாமணி" பக் 851- 853.                                                            தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30
[[Category:நாவலாசிரியர்கள்]]

Revision as of 19:48, 3 April 2022

The page is being created by Ka. Siva

திருவாசகமும் திருக்கோவையாரும் பாடிய மாணிக்கவாசகர், சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர்.

பிற பெயர்கள்

மாணிக்கவாசகருக்கு அருள்வாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

வரலாறு

ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த கலைக்களஞ்சியமான "அபிதான சிந்தாமணி"யில் தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக,ய மாணிக்கவாசகரின் வரலாறு கீழ்க்காணுமாறு விவரிக்கப்பட்டுள்ளது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

நரியைப் பரியாக்கியது

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான்.

மாணிக்கவாசகர், பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே, இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அன்று)

'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்குப் போதித்துத் திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரி கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.

'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்துக் 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெயிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனைத் தஞ்சம் அடைந்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களைக் குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே, இறைவனுக்குப் பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கிக் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

வைகை வெள்ளமும் வந்தியும்

சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருத்தி மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா ? என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.

கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய்க் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.

இறைவன் எழுதியவை

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.

'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.

'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.

முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டுத் திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

படைப்புகள்

மாணிக்கவாசகரின் படைப்புகள்;

  • திருவாசகம்
  • திருக்கோவையார்

வாழ்ந்த காலகட்டம்

மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் மூவருக்கும் பிற்பட்டவர். மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. பெரும் சிவபக்தனான பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன்தான் (காலம் 863-911) மாணிக்கவாசகரின் வரலாற்றில் குறிப்பிடப்படும் அரிமர்த்தன பாண்டியன் என்ற ஆய்வின்படி மாணிக்கவாசகரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

அற்புதங்கள்

  • சிவபெருமானே நரியைக்  குதிரையாக்கிக்  கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
  • பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.
  • தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
  • எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

சிறப்பு

மாணிக்கவாசகரின் பாடல்கள் பன்னிரு திருமுறைகள் தொகுப்பில் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைவு

ஞான நெறியைப் பின்பற்றிய மாணிக்கவாசகர் 32 ஆண்டுகள்  வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில்  சிவனடி சேர்ந்தார்.

உசாத்துணை

http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar3.htm

http://www.tamilvu.org/library/l4180/html/l4180an1.htm

http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202135.htm

http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021203.htm

ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த கலைக்களஞ்சியமான  "அபிதான சிந்தாமணி" பக் 851- 853. தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30