மைத்ரேயி தேவி: Difference between revisions
Added: Category:கவிஞர் |
Normalized selected wikitext line breaks; |
||
| Line 37: | Line 37: | ||
மைத்ரேயி தேவி ஜனவரி 29, 1989-ல் காலமானார். | மைத்ரேயி தேவி ஜனவரி 29, 1989-ல் காலமானார். | ||
==நூல் பட்டியல்== | ==நூல் பட்டியல்== | ||
*It Does Not Die | *It Does Not Die | ||
*Tagore by Fireside (1943) | *Tagore by Fireside (1943) | ||
Latest revision as of 23:57, 11 October 2026


மைத்ரேயி தேவி (செப்டம்பர் 10, 1914 - ஜனவரி 29, 1989) இந்தியாவின் வங்காளத்தைச் சேர்ந்த கவிஞர், நாவலாசிரியர், சமூக சேவகர். வங்க இலக்கியத்தில் கற்பனாவாதக் கவிஞராக முக்கிய இடம் வகித்தவர். ரபீந்திரநாத் தாகூரின் மாணவி. தாகூரைப்பற்றி அவர் எழுதிய நினைவுக்குறிப்புகள் செவ்வியல் ஆக்கங்களாக கருதப்பட்டன. 'நா ஹன்யதே' என்ற வங்கமொழி நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
மைத்ரேயி தேவி இந்திய சுதந்திரத்திற்கு முன்னரான வங்க மாகாணத்தில் (தற்போதைய பங்களாதேஷ்) அமைந்த சிட்டகாங்கில் சுரேந்திரநாத் தாஸ்குப்தா, ஹிமானி மாதுரி ராய் இணையருக்கு செப்டம்பர் 10, 1914-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். தந்தை சமஸ்கிருத மொழி அறிஞர், இந்திய தத்துவ அறிஞர். மைத்ரேயி தேவி புனித ஜான்ஸ் டையோசியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி கற்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பெண்கள் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
மைத்ரேயி தேவி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தன் தந்தையின் மாணவரான ரோமானியாவைச் சேர்ந்த மிர்சா எலியத்துடன் காதல் வயப்பட்டார். ஆனால் பெற்றோர்களின் தலையீடால் அக்காதல் முறிந்தது.
இருபது வயதில் முப்பத்தி நான்கு வயதான மன்மோகன் சென்-ஐ மணந்தார். இரு பிள்ளைகள். 1938 மற்றும் 1939 ஆகிய காலகட்டங்களில் ரபீந்திரநாத் தாகூர் முங்போவிலுள்ள இவர்களின் வீட்டில் தங்கினார். அந்தவீடு பின்னர் ரபீந்திர நாத் தாகூர் அருங்காட்சியகமாக ஆனது.

அமைப்புச் செயல்பாடுகள்
- மைத்ரேயிதேவி 1964-ல் 'Council for the Promotion of Communal Harmony' என்ற சமூக நல்லிணக்க அமைப்பை நிறுவினார்.
- அனைத்து இந்திய பெண்கள் ஒருங்கிணைப்பு சபையின் (All-India Women's Coordinating Council) துணைத்தலைவராக இருந்தார்.
- பல அனாதை இல்லங்களை நிறுவினார்.
இலக்கிய வாழ்க்கை
மைத்ரேயிதேவி ரபீந்திரநாத் தாகூரின் மாணவி.1930-ல் தன் பதினாறு வயதில் ரபீந்திரநாத் தாகூரின் முன்னுரையுடன் தன் முதல் கவிதை நூலை வெளியிட்டார். 'Tagore by Fireside' என்பது ரபீந்திரநாத் தாகூர் மைத்ரேயி தேவியின் வீட்டிற்கு வந்த நிகழ்வை சித்தரிக்கும் நூல். தாகூரைப் பற்றி இவர் எழுதிய நினைவுக்குறிப்புகள் செவ்வியல் ஆக்கங்களாகக் கருதப்பட்டன.
1933-ல் மிர்சா எலியத் 'மைத்ரேயி' என்ற பேரில் எழுதிய நாவலுக்கு மறுமொழி கூறும் விதமாக 1974-ல் மைத்ரேயி தேவி 'நா ஹன்யதே' என்ற நாவலை வங்க மொழியில் எழுதினார்.
விவாதம்
பிரெஞ்சு இயக்குநர் நிக்கோலஸ் க்லோட்ஸ் (Nicholas Klotz) என்பவருக்கு மிர்சா தன் நாவலை விற்றார். மிர்சா 1986-ல் இறந்த பின் 1987-ல் கல்கத்தாவில் 'லெ நைட்ஸ் பெங்காலி'(Les Nuits Bengali) என்ற அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஹூ க்ராண்ட் (Hugh Grant) சுப்ரியா பதக் ஆகியோர் நடித்த அப்படம் மைத்ரேயி தேவியின் உண்மையான காதல்கதை என்று இல்லஸ்ட்ரேட்டட் வீக்லில் பெரிய அளவில்செய்தி வெளிவந்து பரபரப்பை உருவாக்கியது.
ஆழமாக மனம் புண்பட்ட மைத்ரேயி தேவி தொடர்ந்து பல நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்தார். மையக்கதாபாத்திரத்தின் பெயர் காயத்ரி என்று மாற்றப்பட்டது. வங்காளப்பெண்ணைப்பற்றிய ஆபாசப்படம் எடுப்பதாக வங்கப்பத்திரிகைகள் எழுதியதைத் தொடர்ந்து வங்க மக்களின் அனுதாபம் மைத்ரேயி தேவி மீது குவிந்தது. இந்திய அரசு படத்துக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. படத்தை இந்தியாவில் திரையிடுவதில்லை என்ற வாக்குறுதியை அரசுக்கு தயாரிப்பாளர் பிலிப் டயஸ் (Philippe Diaz) கொடுத்தார். 1989-ல் இந்தியத்திரைப்படவிழாவில் இப்படம் ஒரே ஒருமுறை இந்தியாவில் காட்டப்பட்டது.
மதிப்பீடு

"காதல் எப்போதுமே இலக்கியத்தில் அழியாத இடம் கொண்டதாக உள்ளது. நவீனத்துவ இலக்கியமரபு மட்டுமே காதலை ஐயத்துடன் நோக்கி விலக்கியது. இலக்கியத்தில் காதலின் இடம் என்ன? மானுடன் தன்னை முற்றாக இழந்து பிறிதொன்றில் கரையும் பெருநிலை அது. பேரியற்கையனுபவம் இறையனுபவம் ஆகியவற்றுக்கு நிகரானது. அவற்றின் குறியீடாக நிற்கும் தகுதி கொண்டது. காதல் ஒரு மீட்பு. மண்ணில் எளிய வாழ்வே விதிக்கப்பட்டுள்ள மானுடனுக்கு தன் உணர்வுகளினாலேயே மகத்தான வாழ்க்கை ஒன்றை கற்பிதம் செய்துகொள்ள இயற்கை அருளிய வாய்ப்பு. அதை உயிரியல் எப்படி விளக்கினாலும் யதார்த்தபோதம் எப்படி கட்டுப்படுத்தினாலும் இலக்கியத்திலும் கலையிலும் அதன் இடம் அழியாதது. மைத்ரேயிதேவியின் 'கொல்லப்படுவதில்லை' அத்தகைய தகுதி கொண்ட ஆக்கம் என்று சொல்லமுடியும்" என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

விருது
- 'நா ஹன்யதே' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
மறைவு
மைத்ரேயி தேவி ஜனவரி 29, 1989-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- It Does Not Die
- Tagore by Fireside (1943)
- Rabindranath - The Man behind His Poetry (1973)
- It Does Not Die: A Romance (1974)
- Rabindranath at home and in the world
- Rabindranath at Mangpu
தமிழில்
- கொல்லப்படுவதில்லை (சு.கிருஷ்ணமூர்த்தி) (சாகித்திய அகாதெமி)
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Apr-2025, 10:26:17 IST