நா. இளங்கோ: Difference between revisions
(Corrected typo errors;) |
(Added: Category:கவிஞர்) |
||
| Line 82: | Line 82: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்]] | |||
Latest revision as of 00:34, 21 December 2025
- இளங்கோ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இளங்கோ (பெயர் பட்டியல்)
நா, இளங்கோ (மலையருவி; மலையருவி இளங்கோ, பேராசிரியர் நா. இளங்கோ, முனைவர் நா. இளங்கோ) (பிறப்பு: ஏப்ரல் 29, 1959) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அண்ணா விருது, பாரதிதாசன் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
நா. இளங்கோ, ஏப்ரல் 29, 1959 அன்று, புதுச்சேரியில், நாகமுத்து - நா.வர்ணமுத்து இணையருக்குப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை புதுச்சேரி அக்காசாமி மடம் அரசுத் தொடக்கப்பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியை புதுச்சேரி குருசுகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்றார். மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பி.லிட். பட்டம் பெற்றார். புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் 'முதல் குறள் ஆய்வு' எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில், நாட்டுப்புறவியல் துறையில், 'நாட்டுப்புற வாழ்வியலில் மலடியர் பற்றிய மதிப்பீடுகளும் குழந்தைப்பேறு தொடர்பான நம்பிக்கைகளும் வழக்காறுகளும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, நாட்டுப்புறவியல் பட்டத்திற்கான ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். 'நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
நா. இளங்கோ மணமானவர். மனைவி இ.சாந்தி. மகன்: மாறன். மகள்: மலர்.
கல்விப் பணிகள்
நா. இளங்கோ, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் ஒன்பது ஆண்டுகள் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். 22 ஆண்டுகளுக்கும் மேல் புதுவை அரசு தாகூர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், இணைப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
நா. இளங்கோ, 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பட்டிமன்றம் மூலம் தமிழ் பரப்பினார். பல்வேறு ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். 'மலையருவி' என்ற கவிதையை எழுதியதன் மூலம் 'மலையருவி இளங்கோ' என்றும், 'மலையருவி' என்றும் அழைக்கப்பட்டார். 2012-இல் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் சிறப்பு அழைப்பாளராகச் சென்று அங்குள்ள தமிழாசிரியர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்புப் பயிற்சி அளித்தார். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று சிறப்புரையாற்றினார்.
இதழியல்
நா. இளங்கோ, 'ஓடை', 'ஊற்று' என்ற இரு இதழ்களைத் தொடங்கி நடத்தினார்.
பொறுப்புகள்
- புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர்
- புதுச்சேரி சமூக நீதிப் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர்
விருதுகள்
- நண்பர்கள் தோட்டம் அளித்த மண்ணுரிமைக் கல்வியாளர் விருது - 2006
- புதுவைத் தமிழ்க்கலை மன்றம் வழங்கிய செந்தமிழ் ஞானச் செம்மல் விருது - 2007
- கிங்பிஷர் இளைஞர் விளையாட்டு மன்றம் அளித்த தமிழ்ப்பணிச் செம்மல் விருது - 2007
- தமிழ்ப்பொழில் இலக்கியக் கழகம் அளித்த ஆய்வுரைச் செல்வர் விருது - 2007
- தமிழ்நாடு, இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகம் வழங்கிய தமிழ் மாமணி விருது - 2008
- நண்பர்கள் தோட்டம் அளித்த நற்றமிழ் நாவலர் விருது - 2009
- சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்கள் பேரவை அளித்த இலக்கியச் செம்மல் விருது - 2009
- புதுச்சேரி பாத்திர வியாபாரிகள் சங்கம் அளித்த செம்மொழிச் செம்மல் விருது - 2011
- சிங்கப்பூர் தமிழிலக்கியக் களம் அளித்த இலக்கிய மாமணி விருது - 2011
- தமிழ்த் தொண்டன் பாரதி கழகம் அளித்த தமிழ்ச் செவ்வி அறிந்தோர் விருது - 2011
- குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் வழங்கிய பேரறிஞர் அண்ணா விருது -2011
- மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம் அளித்த சிங்கார வேலர் சுடர் விருது - 2012
- கர்மவீரர் காமராசர் நற்பணி மன்றம் வழங்கிய காமராசர் விருது - 2012
- பாரதிதாசன் விருது
- பேரறிஞர் அண்ணா விருது
ஆவணம்
நா. இளங்கோவின் வாழ்க்கைக் குறிப்பை முனைவர் மு. குமரகுரு எழுதினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலேசியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நூலாக வெளியிட்டது.
மதிப்பீடு
நா. இளங்கோ மொழி, ஆய்வு, நாட்டுப்புறவியல், கவிதை எனப் பல் துறைகளில் செயல்பட்டார். பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்க் கவிதை உலகில் 'மலையருவி இளங்கோ' என்ற பெயரால் அறியப்படுகிறார்.
நூல்கள்
- காலடியில் தலை
- மலடியும் மழலையும்
- நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும்
- மொழிபெயர்ப்பும் மொழிப் பயிற்சியும்
- இணர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு
- தமிழ் இணர்
- படர்க்கை
- பொருநராற்றுப்படை மூலமும் உரையும்
- மலர் நீட்டம்
- ஊடகங்களின் ஊடாக
- உள்ளதன் நுணுக்கம்
- மனிதத் தின்னிகள்
உசாத்துணை
- நா. இளங்கோ, வாழ்க்கைக் குறிப்பு
- நா. இளங்கோ இணையதளம்
- நா. இளங்கோ வலைத்தளம்
- மலையருவி கவிதைகள், நா. இளங்கோ
- உள்ளதன் நுணுக்கம், நூல் விமர்சனம், கீற்று தளம்
- நா. இளங்கோ, ஃபேஸ்புக் பக்கம்
- நா. இளங்கோ வாழ்க்கை வரலாறு, எழுத்தாக்கம்: முனைவர் கு. குமரகுரு, கலைஞன் பதிப்பக வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2024, 20:22:39 IST