முத்தம்பெருமாள் (கணியான்): Difference between revisions
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
(Corrected Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள் to Category:நாடகக் கூத்துக் கலைஞர்) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 60: | Line 60: | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:38:02 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:நாடகக் கூத்துக் | [[Category:நாடகக் கூத்துக் கலைஞர்]] |
Latest revision as of 14:13, 17 November 2024
கலைமாமணி வா. முத்தம்பெருமாள் (பிறப்பு: ஏப்ரல் 1, 1970) கணியான் கூத்துக் கலைஞர். முத்தம்பெருமாள் கணியான் குழுவின் அண்ணாவி[1]. நாங்குனேரி பி. வானமாமலை கணியானின் மகன். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள்[2] நலச்சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
பார்க்க: கணியான் கூத்து
பிறப்பு, கல்வி
வா. முத்தம்பெருமாள் ஏப்ரல் 1, 1970 அன்று நாங்குனேரியில் நாங்குனேரி பி. வானமாமலை, கோமதியம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். முத்தம் பெருமாளுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். மூன்று தம்பி, மூன்று தங்கை. முத்தம் பெருமாளின் பூர்வீகம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி. பத்மனேரி கொம்பு மாடன் இவரது குடும்பக் குலதெய்வம்.
தாத்தா பெருமாள் தாஸ் நாடகக் கலைஞர். நாங்குனேரியில் தனியாக நாடகக் கம்பெனி ஒன்றை நடத்தினார். சுதந்திரப் போராட்டம் தொடர்பாக நாடகங்கள் அரங்கேற்றியதால் இவரது நாடகக் கம்பெனி தீ வைக்கப்பட்டது.
முத்தம்பெருமாள் நாங்குனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக அவரால் மேலே படிக்க இயலவில்லை.
தனி வாழ்க்கை
முத்தம் பெருமாள் 1988-ம் ஆண்டு பத்தொன்பதாம் வயதில் பானுமதியை திருமணம் செய்தார். முத்தம்பெருமாள், பானுமதி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் சிவராமகிருஷ்ணன் பி.இ முடித்து ஹெ.டி.எப்.சி வங்கியில் கிளை நிர்வாகியாக பணியாற்றுகிறார். இரண்டு மகள்கள், கோகிலாதேவி (வழக்கறிஞர்), கார்த்திகேயாயினி (முதுகலை).
முத்தம் பெருமாளின் தந்தை பி. வானமாமலை கணியான் அண்ணாவியாகப் பாடுபவர். 1987-ம் ஆண்டு இந்திய தேசிய ஒற்றுமை கலை விழாவிற்காக ஒரு மாத காலம் டெல்லியில் தங்கி கூத்து நடத்தினார். அங்கிருந்து நாங்குனேரி திரும்பிய போது அவரது சாரீரம் பழுதடைந்திருந்தது. தன் ஐம்பத்திரண்டாவது வயதில் குரலை இழந்த வானமாமலை அதன்பின் கூத்துக் கட்டுவதை நிறுத்திக் கொண்டார். வானமாமலை குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையால் நாங்குனேரியில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்றுக் குடும்பத்துடன் வள்ளியூருக்குக் குடிபெயர்ந்தார்.
முத்தம் பெருமாள் 1989-ம் ஆண்டு குடும்ப வறுமை நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து அரசு ரயில்வே பணியில் வாகனம் ஓட்டும் பொருட்டு கோவா சென்றார். 1991 முதல் 1994 வரை முழு நேர வாகன ஓட்டியாக கோவாவில் இருந்தார். ரயில்வே அதிகாரிகள் பழுதடைந்த வாகனத்தை ஓட்டச் சொன்னபோது அதனை மறுத்து வேலையை ராஜனாமா செய்து வள்ளியூர் திரும்பினார்.
முத்தம்பெருமாள் தற்போது குடும்பத்துடன் சேரன்மகாதேவியில் வசித்து வருகிறார்.
கலை வாழ்க்கை
முத்தம்பெருமாள் பதிநான்கு வயதில் தந்தை பி. வானமாமலை அண்ணாவியாகப் பாடும் கூத்தில் பின்பாட்டுக்காரராகப் பாடத் தொடங்கினார். ஐந்து வருடம் தந்தையுடன் இணைந்து கூத்து நடத்தினார். பின் ஆறு வருடம் பணி காரணமாக எந்தக் கூத்திலும் பங்கேற்கவில்லை.
1994-ல் கோவாவில் இருந்து வள்ளியூர் திரும்பிய போது நேஷனல் பர்மிட் லாரி ஓட்டும் வேலையில் சேர எண்ணினார். அப்போது நாகர்கோவில் தரிசனங்கோப்பு அருகே உள்ள மத்தியூர் சுடலைமாடன் சுவாமி கோவிலில் கூத்துக் கட்ட வேண்டி வானமாமலையை அழைக்க வந்திருந்தனர். வீட்டில் வானமாமலை இல்லாததால் வந்தவர்கள் முத்தம்பெருமாளை விசாரித்தனர். முத்தம்பெருமாள், "நான் வானமாமலையின் மூத்த மகன். இப்போது நான் கூத்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" எனக் கூறினார். மத்தியூரில் இருந்து வந்தவர்கள் வானமாமலையின் சாரீரம் பற்றி முன்னர் அறிந்திருந்ததால் முத்தம்பெருமாளைப் பாடும் படி வேண்டி முன் பணம் கொடுத்துச் சென்றனர். வீடு திரும்பியதும் விஷயம் அறிந்த வானமாமலை, "நீ தனியா பாடியது இல்லையே. உன்னால பாட முடியுமா?" எனக் கேட்டார். முத்தம்பெருமாள் "நான் பாடுவேன்" எனச் சொல்லி சித்திரை மாதம் கடைசி வெள்ளி அன்று மத்தியூர் சுடலைமாடன் சுவாமி கோவிலில் முதல் முறையாக அண்ணாவியாக நின்று பாடினார். அதுவே அவர் பாடிய முதல் கூத்து.
பின்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்களில் உள்ள கோவில் கொடை, பங்குனி உத்திரம், சித்திரை, ஆடி திருவிழாக்களில் முத்தம் பெருமாளைப் பாட அழைத்தனர். கணியான் முத்தம்பெருமாள் சுடலைமாடன் சுவாமி கதை, அரிச்சந்திரன் கதை, மகிஷாசுரமர்த்தினி கதை, உஜ்ஜைனி மாகாளி கதை, சந்தன மாரியம்மன் கதை, பிரம்ம சித்தி கதை, அஷ்ட கன்னிகள் கதை எனப் பாடும் கோவிலுக்குத் தகுந்தார் போல் கதை அமைப்பார்.
கோவில் திருவிழாக்கள் இல்லாமல் அரசு விழாக்களிலும் பாடியுள்ளார். சினிமாவிலும் சில பாடல்கள் எழுதியுள்ளார்.
திரைத்துறை
சத்ரபதி, வெந்து தணிந்தது காடு என இரண்டு திரைப்படங்களுக்கு சுடலை மாடனைப் பற்றிய பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். அதற்கான இசை மெட்டுகளுக்கும் உதவியுள்ளார்.
கலைத்துறையில் இடம்
முத்தம்பெருமாள் சமகாலக் கணியான் கூத்துக் கலைஞர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர். இவரது தந்தை பி. வானமாமலை அவரது காலத்தில் தலைசிறந்த கணியானாக இருந்தார். நாட்டார் வழக்கில் இருக்கும் கதைகளில் நவீன விஷயங்களை (அரசியல், செய்தி, பொது நிகழ்வு) சேர்த்துப் பாடுவது முத்தம்பெருமாளின் இயல்புகளுள் ஒன்று.
"முத்தம்பெருமாளின் கம்பீரமான குரலும், தொய்வில்லாமல் சொல்லும் கதைத் திறமும், வசன உச்சரிப்பில் இருக்கும் நேர்த்தியும் தான் அவரை கணியான் கூத்து கலைஞர்களுள் முதன்மையானவராக ஆக்குகிறது" என முனைவர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.
கணியான் குழு
முத்தம்பெருமாளின் கணியான் குழுவில் பிரதானமாக ஆறு பேர் இடம்பெற்றிருப்பர்.
- மகுடம் வாசிப்பது – சங்கரன், மந்திரமூர்த்தி, முருகன், சித்திரநாராயணன்
- வேஷம் கட்டி ஆடுவது – சித்திரவேல்[3] , சிவகுமார்
- பின்பாட்டுக்காரர் – பரமசிவம் (முத்தம்பெருமாளின் மாமா)
- தாளம் - இசக்கிமுத்து
1994 முதல் முத்தம்பெருமாளுக்கு பதினோரு பேர் பின்பாட்டுக்காரர்களாக இருந்துள்ளனர். அதில் காடங்குளம் பிச்சைய்யா,மணப்பாறை நடராஜன், தென்காசி ராமசந்திரன், துணைமாலை, திருவடி நயினார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சங்கம்
முத்தம்பெருமாள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள் நலச்சங்கத்திலும், கணியான் சங்கத்திலும் துணைத் தலைவராக உள்ளார்.
விருதுகள்
- 2005 - திருநெல்வேலி மாவட்டக் கலைச்சுடர்மணி விருது
- 2019 - சர்வதேச முத்தமிழ் விருது
- 2020 - தமிழக அரசின் கலைமாமணி விருது
உசாத்துணை
- சுடலை சுவாமி வரத்து, கணியான் கூத்து, முத்தம் பெருமாள் கணியான், ’கிராமத்து ஆன்மீகம்’, யூடியூப்.காம்
- நாங்குநேரி இறைப்புவாரி கோவில் கொடை, 2019, முத்தம் பெருமாள் மகுடம் கலை இசை, 'முத்துமாரி வில்லிசை', யூடியூப்.காம்
- திரு முத்தம் பெருமாள் கணியான் கூத்து மகுட ஆட்டம் கஞ்சிபுர சுடலை மாடசாமி திருக்கோவில் தோவாளை, 2022, யூடியூப்.காம்
- Magudam: Rural Rhythms, The Hindu, youtube.com
- முத்தம்பெருமாள் புகைப்படக் காணொளி, முத்தம்பெருமாள் குழுவுடன், யூடியூப்.காம்
- தோவாளை சீவலப்பேரியான் சுடலைமாடன் கோவில் கணியான் கூத்து, முத்தம்பெருமாள் கணியான் குழு, யூடியூப்.காம்
- On 'kaniyan koothu', an art form dedicated to the graveyard god, The Hindu, June 30, 2018
அடிக்குறிப்புகள்
- ↑ அண்ணாவி - கணியான் கூத்தில் கதை சொல்லிப்பாடுபவர், ஆசான், குழுத்தலைவர்
- ↑ கணியான் கூத்து மகுடாட்டம் என்றும் அழைக்கப்படும்.
- ↑ சித்திரவேல் கணியான் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் தோல்பாவைக் கூத்துக் கலைஞர். தோல்பாவைக் கூத்து நலிவடைந்து வருவதால் முத்தம்பெருமாளுடன் இணைந்து கூத்துக் கட்டி வருகிறார். 2008 முதல் சித்திரவேல் முத்தம்பெருமாள் குழுவில் வேஷம் கட்டி ஆடி வருகிறார்.இவரைப் போல் முப்பத்தைந்து தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் கணியான் கூத்திற்கு மாறியுள்ளனர்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:02 IST