under review

ஷோப்பனோவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 73: Line 73:


இயற்பியலாளர்களான ஐன்ஸ்டீன், ஷ்ரோடிங்கர், வுல்ஃப்கேங் பெளலி, இசை மேதை ரிச்சர்ட் வாக்னர், எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், தாமஸ் மன், தாமஸ் ஹார்டி ஆகியோரிடம் ஷோப்பனோவரின் தாக்கம் இருந்தது.
இயற்பியலாளர்களான ஐன்ஸ்டீன், ஷ்ரோடிங்கர், வுல்ஃப்கேங் பெளலி, இசை மேதை ரிச்சர்ட் வாக்னர், எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், தாமஸ் மன், தாமஸ் ஹார்டி ஆகியோரிடம் ஷோப்பனோவரின் தாக்கம் இருந்தது.
== மறைவு ==
ஷோப்பனோவர் செப்டம்பர் 21, 1860-ல் காலமானார். அவருடைய கல்லறை ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட்டில் உள்ளது.
== மதிப்பீடு ==
== மதிப்பீடு ==
”தூய தத்துவம் என்பது ஐரோப்பிய வரலாற்றிலேயே இரண்டு நூற்றாண்டுகள்தான் இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்தான் மதம், அறிவியல் ஆகிவற்றிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு தத்துவத்தை மட்டுமே கையாண்ட தத்துவ ஞானிகள் தோன்றினர். உதாரணம்: ஷோப்பனோவர்” என [[ஜெயமோகன்]] மதிப்பிட்டார்.
”தூய தத்துவம் என்பது ஐரோப்பிய வரலாற்றிலேயே இரண்டு நூற்றாண்டுகள்தான் இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்தான் மதம், அறிவியல் ஆகிவற்றிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு தத்துவத்தை மட்டுமே கையாண்ட தத்துவ ஞானிகள் தோன்றினர். உதாரணம்: ஷோப்பனோவர்” என [[ஜெயமோகன்]] மதிப்பிட்டார்.
== மறைவு ==
ஷோப்பனோவர் செப்டம்பர் 21, 1860-ல் காலமானார். அவருடைய கல்லறை ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட்டில் உள்ளது.
== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
* On the Fourfold Root of the Principle of Sufficient Reason (1813)
* On the Fourfold Root of the Principle of Sufficient Reason (1813)

Revision as of 09:22, 15 June 2024

ஷோப்பனோவர்

ஷோப்பனோவர் (ஆர்த்தர் ஷோப்பனோவர்) (Arthur Schopenhauer) (பிப்ரவரி 22, 1788 - செப்டம்பர் 21, 1860) ஜெர்மனியைச் சேர்ந்த சிந்தனையாளர், தத்துவவியலாளர், தத்துவ ஆசிரியர், எழுத்தாளர். ஷோப்பனோவர் தன் தத்துவத்தை இம்மானுவேல் காண்ட்டின் நீட்சியாக முன் வைத்தார். இவரின் தத்துவச் சிந்தனை இந்திய மெய்யியலில் பெளத்த தத்துவத்துடன் முயங்கக்கூடியது. ஷோப்பனோவரின் தாக்கம் ஐன்ஸ்டீன், டால்ஸ்டாய், தாமஸ் மன், ரிச்சர்ட் வேக்னர் ஆகியோரிடம் காணப்பட்டது.

ஷோப்பனோவர்

பிறப்பு, கல்வி

பிறப்பு

ஆர்த்தர் ஷோப்பனோவர் போலந்தின் டான்சிக்கில் (Danzig) ஜோஹன்னா ஷோப்பனோவர், ஹென்ரிச் ஃப்ளோரிஸ் ஷோப்பனோவர்(Heinrich Floris Schopenhauer) இணையருக்கு மகனாக பிப்ரவரி 22, 1788-ல் பிறந்தார். தங்கை அடிலி ஷோப்பனோவர்.

குடும்பம்

ஷோப்பனோவரின் பெற்றோர்கள் இருவரும் செல்வந்தர்களான ஜெர்மன் பாட்ரிசியன் குடும்பங்களின் வழித்தோன்றல்கள். புராட்டஸ்டன்ட் பின்னணியில் இருந்து இருவருமே வந்தாலும் மத நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை. இருவரும் பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சியினர், காஸ்மோபாலிட்டன்கள், இங்கிலாந்தின் மீது பற்று கொண்டவர்கள். 1793-ல் டான்சிக் ப்ருஷ்யாவின் ஒரு பகுதியாக மாறியபோது ​​ஹென்ரிச் ஹாம்பர்க்கிற்கு குடிபெயர்ந்தார். அவரது நிறுவனம் டான்சிக்கில் வர்த்தகத்தைத் தொடர்ந்தது. அங்கு அவர்களது உறவுகள் பெரும்பாலோர் இருந்தனர்.

1797-ல் ஷோப்பனோவர் தனது தந்தையின் வணிகக் கூட்டாளி க்ரெகோயர் டி பிளெசிமெய்ரின் குடும்பத்துடன் லேஹவ்ரேவில் இரண்டு வருடங்கள் தங்க அனுப்பப்பட்டார். அங்கு பிரெஞ்சு மொழி பேசக் கற்றுக்கொண்டார். ஷோப்பனோவருக்கு ஜீன் ஆன்டைம் க்ரெகோயர் டி ப்ளெசிமெய்ருடனான (Jean Anthime Grégoire de Blésimaire) வாழ்நாள் நட்பு அப்போது தொடங்கியது. 1799-ல் ஷோப்பனோவர் புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினார்.

1803-ல் ஷோப்பனோவரின் பெற்றோர் வணிகச் சுற்றுப்பயணமாக ஹாலந்து, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ப்ருஷ்யா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர். ஷோப்பனோவர் அவர்களுடன் சென்றார். பயணத்தை துவங்கும் முன் தந்தை ஹென்ரிச், ஷோப்பனோவரிடம் வீட்டிலேயே தங்கி பல்கலைக்கழகத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்கலாம் அல்லது தன்னுடன் வணிகப் பயணம் செய்யலாம் என்ற இரு தேர்வுகளை வழங்கினார். ஷோப்பனோவர் பயணம் செய்வதையே தேர்ந்தெடுத்தார். பயணத்தில் தந்தை தனது வணிகக் கூட்டாளிகளைச் சந்தித்தார். மகனுக்கு வணிகப்பயிற்சியும் அளித்தார். ஷோப்பனோவருக்கு வணிகப்பயிற்சி கடினமாக இருந்தது.

சுற்றுப்பயணத்துக்குபின் ஷோப்பனோவர் ஒரு வருடம் விம்பில்டன் பள்ளியில் படித்தார். அங்கு அவர் கண்ட, தட்டையான ஆங்கிலேய மதக் கொள்கையின் மேல் வெறுப்பு கொண்டார்.

1805-ல் ஷோப்பனோவரின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். ஷோப்பனோவரிடமும் தந்தையின் பிறழ்வுப் பிரச்சனைகள் தென்பட்டன. தந்தையின் குடும்பச் சொத்து இருந்ததால் ஷோப்பனோவரின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. அவரது தாய் தந்தையின் மரணத்துக்குப்பின் வணிகத்தை கவனித்துக் கொண்டார். ஷோப்பனோவருக்கு தாயுடனான உறவு பெரும்பாலும் முரண்பாடுகளுடனேயே அமைந்தது. தங்கையின் இறுதிக்காலத்தில் ஷோப்பனோவருக்கு அவருடனான நெருக்கம் அதிகரித்தது.

கல்வி

ஷோப்பனோவர் தனது இறந்த தந்தையின் நினைவுக்காக வணிகராக இரண்டு ஆண்டுகள் கழித்தார். பின்னர் வணிகத்தில் ஈடுபடவிரும்பாமல் தாயின் ஊக்கத்துடன் சாக்ஸ்-கோதா-ஆல்டன்பர்க்கில் உள்ள எர்னஸ்டின் ஜிம்னாசியம், கோதாவில் (The Ernestine Gymnasium, Gotha) படித்தார். அங்கு அதிக அளவு பணத்தை செலவழித்தார். ஆசிரியர் ஒருவரைப் பற்றிய நையாண்டிக் கவிதையை எழுதியதால் ஜிம்னாசியத்தை விட்டு வெளியேறினார். அவரது தாயின் கடிதம் ஒன்றிலிருந்து அவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

ஷோப்பனோவரின் தாய், மகள் அடிலியுடன் ஜெர்மனியின் இலக்கியத்தின் மையமாக அமைந்த வீய்மருக்கு சென்றார். தாயுடன் எப்போதும் முரண்படுபவராக இருந்த ஷோப்பனோவர் தனித்து வாழ்ந்தார். அவரது தாய் ஜோஹன்னாவின் இல்ல வரவேற்பறை பல இலக்கியவாதிகளின் கூடும் இடமாக இருந்தது. கதே (Goethe) அங்கு அடிக்கடி வந்தார். அவரைக் காணவே ஷோப்பனோவர் சமயங்களில் தன் தாய் வசித்த வீட்டுக்கு வந்தார்.

ஷோப்பனோவர் அறிவியல் மீது கொண்ட ஆர்வத்தால் 1809-ல் கோட்டிங்டன்(University of Gottingen) பல்கலைக்கழகத்தில் இணைந்து மருத்துவம் பயின்றார். ஜெர்மன் தத்துவவியலாளர் காட்லோப் எர்ன்ஸ்ட் ஷூல்ஸிடம் (Gottlob Ernst Schulze) மீபொருண்மை (metaphysics), உளவியல் மற்றும் தர்க்கவியல் பயின்று, அவரின் தூண்டுதலால் பிளேட்டோ, இம்மானுவேல் காண்ட் இருவரின் தத்துவச் சிந்தனைகள் மீது கவனம் செலுத்தினார். 1810-ல் மருத்துவத்திலிருந்து தத்துவத்திற்கு மாற முடிவு செய்து கோட்டிங்டனை விட்டு வெளியேறி பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இமானுவேல் காண்ட் காலத்துக்குப் பிந்தைய தத்துவத்தை பயிற்றுவிப்பவரான ஜோஹான் காட்லீப் ஃபிட்ஷேயின் (Johann Gottlieb Fichte) விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவர் முன்வைத்த 'விஸ்சென்சாஃப்ட்ஸ்லேஹ்ரே' (Wissenschaftslehre)(Foundations of the Science of knowledge) குறித்த கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார்.

ஷோப்பனோவர் புராட்டஸ்டன்ட் இறையியலாளர் ஃபிரெட்ரிக் ஷ்லேயர்மேக்கரின் (Friedrich Schleiermacher) விரிவுரைகளிலும் கலந்து கொண்டு அவற்றிலிருந்தும் தன் முரண்பாடுகளைக் கண்டறிந்தார். அதன்பின் தானே சுயமாக வாசித்து கற்றறிய ஆரம்பித்தார். பிளேட்டோ, இம்மானுவேல் காண்ட், ஃபிட்ஷே தவிர ஷெல்லிங்(Friedrich Wilhelm Joseph Schelling), ஃப்ரைஸ்(Jakob Friedrich Fries), ஜேகோபி(Friedrich Heinrich Jacobi), பேக்கன்(Francis Bacon), லாக்கி (John Locke) போன்றோரின் படைப்புகளையும், மற்றும் பல அறிவியல் துறை சார்ந்த படைப்புகளையும் படித்தார். அகஸ்ட்பாக்(August Böckh) மற்றும் ஃபிரெட்ரிக் ஆகஸ்ட் வுல்ஃப்(Friedrich August Wolf) ஆகியோரின் மொழியியல் வகுப்புகளுக்குச் சென்றார். மார்ட்டின் ஹென்ரிச் கிளப்ரோத்(Martin Heinrich Klaproth), பால் எர்மன்(Paul Erman), ஜோஹான் எலர்ட் போடே(Johann Elert Bode), எர்ன்ஸ்ட் காட்ஃபிரைட் பிஷ்ஷர்(Ernst Gottfried Fischer), ஜோஹான் ஹார்கெல்(Johann Horkel), ஃப்ரெட்ரிச் க்ரிஸ்டியன் ரொசென்தல்(Friedrich Christian Rosenthal), ஹின்ரிச் லிச்டென்ஸ்டெயின்(Hinrich Lichtenstein) ஆகியோரின் வகுப்புகளுக்கும் சென்றார்.

ஷோப்பனோவர் ஃப்ரெட்ரிட்ஜ் மேஜரிடம் கீழைத்தேய தத்துவத்தைப் பயின்றார். உபநிடதங்கள், பெளத்த கோட்பாடுகள், பகவத் கீதை ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்டார். அவற்றை பிளேட்டோ, காண்ட் ஆகியோரின் சிந்தனைக்கு முன் ஒருபடி மேலாக வைத்தார். அவருடைய பெளத்தம் பற்றிய அறிவு தேரவாத பெளத்ததைச் சார்ந்து இருந்தது..

தனிவாழ்க்கை

ஷோப்பனோவர் ஒருதார மணத்தில் நம்பிக்கையற்றவர். ஆனால் அவர் பலதாரமணத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர் அல்ல. ஒரே சமயத்தில் பலருடன் உறவு கொள்ளும் (Polyamory) உறவு நிலையில் விருப்பம் கொண்டிருந்தார் என அவரின் எழுத்துக்கள் வழி அறிய முடிகிறது.

இளமையில் கார்ல் அகஸ்ட்டின் மனைவியான கரோலின் ஜகமென்னின் மேல் காதல் கொண்டார். அதன்பின் தன்னைவிடக் குறைந்த சமூக அந்தஸ்திலுள்ள பெண்களுடன் (பணிப்பெண்கள், நடிகைகள், பாலியல் தொழிலாளிகள்) உடல்சார்ந்த தொடர்பில் இருந்தார். அந்தத் தொடர்புகள் வழியாக இரு பெண் குழந்தைகள் பிறந்து குழந்தையிலேயே இறந்ததாக ஷோப்பனோவர் குறிப்பிட்டார். 1818-ல் வீட்டில் பணிசெய்த பெண்ணுடனான உறவில் தவறுதலாக ஏற்பட்ட கர்ப்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு வருடகாலம் இத்தாலியில் பயணத்தில் இருந்தார். தன் பயணங்களில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

ஷோப்பனோவர் பெர்லினில் கரோலின் ரிட்சர் என்ற நடன மங்கையுடன் அவ்வபோது தொடர்பில் இருந்தார். 1831-ல் பெர்லினில் பரவிய காலராவின் போது பெர்லினைவிட்டு வெளியேறுவதற்கு முன் அவளைத் தன்னுடன் வருமாறு கேட்டுக் கொண்டார். பிள்ளையை விட்டு வர வேண்டும் என்ற ஷோப்பனோவரின் கட்டளையால் அவள் அதற்கு இணங்கவில்லை. பின்னாளில் தன்னுடைய உயிலில் அவளுக்கு குறிப்பிடத்தக்க அளவு தொகையை ஒதுக்கியிருந்தார்.

பணி

ஷோப்பனோவர் ஆரம்பத்தில் தந்தையின் நினைவாக அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக வணிகத்தில் ஈடுபட்டார். அதன்பின் குடும்பச்சூழல் காரணமாக 1820-களில் தத்துவ ஆசிரியராக ஹெய்டல்பெர்க், கொடிங்டன், பெர்லின் ஆகிய நகரங்களில் வேலை செய்தார். பெர்லினில் ஹெகல் ஆசிரியராக வேலையில் இருந்த கல்லூரியில் ஆசிரியராக சில மாதங்கள் பணியாற்றினார்.

எழுத்து

ஆர்த்தர் ஷோப்பனோவர் போர்ச்சூழல் காரணமாக ராணுவம் நுழைய வாய்ப்பில்லை என்று தான் கருதிய ருடோல்ஸ்டாட்டில் 1813-களில் சிறிது காலம் குடியேறினார். அங்கு தனிமையில் இருந்தார். துரிங்கியன் காடுகளில் பயணம் மேற்கொண்டார். 'On the Fourfold Root of the Principle of Sufficient Reason' என்ற தன் ஆய்வுக்கட்டுரையை எழுதினார். கதே(Gothe) அவரின் இந்த ஆய்வுக்கட்டுரையின் மேல் மதிப்பு கொண்டார். இருவருக்கும் பல சந்திப்புகளும் உரையாடல்களும் நிகழ்ந்தன. அப்போது கதே எழுதிக்கொண்டிருந்த 'color theory' நூலைக் குறித்த உரையாடலில் இருந்தனர். அதன்பின் முரண்பாடுகளால் இருவரும் பிரிந்தனர். இந்த உரையாடல் வழியாக 'On Vision and Colors' என்ற நூலை ஷோப்பனோவர் எழுதினார்.

'The World as Will and Representation' என்ற தத்துவ புத்தகத்தை 1814-ல் எழுதத் துவங்கி 1818-ல் நிறைவு செய்தார். 1836-ல் 'On the Will in Nature' என்ற நூலை வெளியிட்டார். அதே ஆண்டு 'On the Freedom of the Will' என்ற கட்டுரையை 'Royal Norwegian Society of Sciences' -க்கு அனுப்பி பரிசு வென்றார். 'On the Basis of Morality' என்ற இன்னொரு கட்டுரையை அனுப்பியபோது அது வெற்றி பெறவில்லை. இவ்விரு கட்டுரைகளையும் 1841-ல் 'The Two Basic Problems of Ethics' என்ற பெயரில் வெளியிட்டார். அவருக்கான மாணவர்களை (பெரும்பாலும் வழக்கறிஞர்கள்) தனி வகுப்புகளின் வழியே கண்டடைந்தார். அவரின் மாணவரான ஜூலியல் ப்ருயின்ஸ்டாட் ஷோப்பனோவரின் தத்துவத்தைப் பற்றி பல கட்டுரைகள் எழுதி பிரபலப்படுத்தினார். 'Parerga and Paralipomena' என்ற ஷோப்பனோவரின் புத்தகத்தைப் பதிப்பிக்க புதிய பதிப்பாளரைக் கண்டறிந்தார். பின்னாளில் ஜூலியஸ் தன் கருத்துகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை என அவருடனான் உறவை முறித்துக் கொண்டாலும் தொடர்ந்து ஜூலியஸ் ஷோப்பனோவரை விளம்பரப் படுத்திக் கொண்டே இருந்தார். 1859-ல் ஷோப்பனோவர் அவருடனான உறவைப் புதுப்பித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவரை தன் வாரிசாகவும் அறிவித்தார். 1851-ல் 'Parerga and Paralipomena' என்ற நூல் அவரின் முந்தைய புத்தகளுக்குத் துணை நூலாக வெளியானது.

தத்துவம்

இலட்சியவாதம் அல்லது கருத்துமுதல்வாதம் பற்றி ஜெர்மனியில் பல்வேறு தத்துவ விவாதங்கள் உருவாகி வந்தன. பல்வேறு தத்துவவியலாளர்களின் நிரை ஜெர்மனியில் எழுந்துவந்தது. இம்மானுவேல் காண்ட், ஹெகல், ஷோப்பனோவர் போன்றவர்கள் அவர்களுள் முக்கியமானவர்கள். பெரும்பாலான தத்துவ விவாதங்கள் மனித இருப்பு, மரணம், கடவுள் பற்றிய கேள்விகளை ஆராயத் துவங்கின. அவற்றை விளக்க முற்பட்டன. ஷோப்பனோவர் இம்மானுவேல் காண்ட்டின் நீட்சியாகத் தன்னைக் கருதினார். தன் முதல் காலகட்டத்தில் ஷோப்பனோவர் ஒழுக்கம் மற்றும் அறம் (morality & ethics)தொடர்பான கேள்விகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தன் இறுதி காலத்தில் சமய மறுப்பாளராக, ஐயவாதம் (Skepticism) நோக்கிச் சென்றார்.

  • மதம்: கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்.
  • மாயம்: மாயங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். பெர்லினில் காலாரா பரவியபோது அந்த நகரத்தை விட்டு வெளியேறும்படி அவருக்குக் கனவுகள் தென்பட்டதாகவும், அதன் பின்னர் தனக்கு வந்த அமானுஷ்ய கனவுகளாலும் உந்தப்பட்டு மாயங்கள், அறிவியல் தளத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மீது நம்பிக்கை கொண்டு அது சார்ந்த தேடலில் இருந்தார். ஆனால் அத்தேடல் வழி கிடைக்கும் தகவல்களின் மேல் ஏற்பு மறுப்புகளை வெளிப்படுத்தினார்.
  • பெளத்தம்: பெளத்தத்தின் நான்கு உண்மைகளில் மூன்று உண்மைகள் தன் சிந்தனைகளுடனும், வேதாந்தத்துடனும் முயங்குவதை ஷோப்பனோவர் கண்டறிந்தார்.
  • மரணம்: மரணம் என்பது மீட்சியில்லை, வீடுபேறு இல்லை; மரணம் என்பது விழைவுகளில் இருந்து துயரங்களில் இருந்து வெறும் விடுதலை மட்டுமே என்ற சிந்தனையை ஷோப்பனோவர் கொண்டிருந்தார். மகிழ்ச்சியே கூட ஒரு எதிர் நிலைதான் என்றார்.
பிரதிநிதித்துவம்

'The world is my representation' என்ற தன் நூலின் வழியாக உலகத்தில் நம் அறிவெல்லைக்குட்பட்ட ஒவ்வொரு பொருளின் இருப்பும் இன்னொரு பொருளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் வழியாக உயிர்ப்புடன் இருக்கிறது என்றார்.

விழைவு

ஷோப்பனோவர் மனிதனை முற்றுப்பெறாத விழைவுகளின் தொகுதியாக உருவகித்தார். இந்தக் கருத்து கீழைத்தேய பெளத்த மெய்மைக்கு அணுக்கமானது. ஷோப்பனோவர் 'Will' என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து, அதனை அடிப்படை விழைவு, இச்சை, ஆசை என்று வரையறுத்தார்.

ஷோப்பனோவர் தனது ‘The world as will and representation’ என்ற புத்தகத்தில் “தூய பெரும் பாவம் என்பது மனிதனின் இருப்பே” என்றார். இம்மானுவேல் காண்ட்டின் மீறுநிலை இலட்சியவாதத்தை தனது விழைவு(Will) என்ற கருதுகோளை முன்வைத்து விளக்கி ஷோப்பனோவர் மறுத்தார். காண்ட்டின் 'அது அதுவாகவே' கருத்தை ஷோப்பனோவர் வேறுவிதமாக மறுத்தார். 'அது அதுவாகவே' இருக்கும் நிலையை மனிதன் உணர்ந்துகொள்ள (அறிந்துகொள்ள) முடியாது என்கிற இம்மானுவேல் காண்டின் கருத்தை, “இல்லை, அப்படி இல்லை. அறிந்துகொள்ள முடியும்” என்ற தனது வாதத்தை ‘The world as will and representation’ என்கிற நூலில் நிறுவினார்.

காண்ட்டின் 'அது அதுவாகவே' இருக்கும் இருப்பென்பது இத்தகைய விழைவுகளால் நிறைந்த ஒன்று என்றும், அவ்விழைவின் வெவ்வேறுபட்ட பிரதிநிதிகள்தான் நாம் என்றும் விளக்கினார். இந்த உலகத்தின் அத்தனை பொருட்களுமே அந்த விழைவின் பிரதிநிதிகளாய் (Representation) இருக்கின்றன எனவும் மனிதனின் காமம், குரோதம், மோகம் எல்லாம் இந்த விழைவுகளின் விளைவுதான் என்றும் விவரித்தார்.

ஷோப்பனோவர் மனிதனின் துயரத்தை தனது 'விழைவு' என்னும் கருத்தாக்கம் வாயிலாக விரித்தார். விழைவு காரணமாக இச்சையும் ஆசையும் பெருகுகிறது. அதன் காரணமாய் துயரம் நேர்கிறது. வாழ்க்கையே வெறும் துயரக் களஞ்சியம், துயரத்திற்கும் வெறுமைக்குமான ஊசல். ஏனென்றால், அது அடிப்படையில் இச்சை வெளியில் இயங்குவது என்ற அவநம்பிக்கைக் கோட்பாட்டுக்கு வந்தடைகிறார்.

பார்வைக் கோணம்

ஷோப்பனோவர் ஒருவரின் பார்வைக் கோணம் (Perspective) என்பது எல்லைக்குட்பட்டது எனவும், அவர் அறிந்த எல்லைக்குட்பட்டவைகளையே உலகின் பார்வைக்கோணமாக விரித்துக் கொள்கிறார் என்றும் கருதினார்.

கலை, பேரன்பு
  • இந்த வாழ்க்கையின் துயரங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள 'கலை, பேரன்பு' இவற்றை ஷோப்பனோவர் முன்வைக்கிறார். கலையில் தொலைந்து போதல் நம் விழைவின் இயக்கவிசையில் இருந்து நம்மை ஆற்றுப்படுத்தும் என்கிறார். தூயஅறிதலின் கிளர்ச்சியும் நிறைவும் மட்டுமே மானுடனுக்குரிய உண்மையான இன்பம் என்கிறார். ஆனால் தூய அறிதலின் உவகை மானுடரில் அனைவருக்கும் உரியதல்ல என்றும் அதற்கு இயல்பிலேயே அறிவாற்றலும் நுண்ணுணர்வும் தேவை என்றும் சொல்லும் ஷோப்பனோவர் அவற்றைப் பெற்றவர்கள் அவர்கள் அடையும் அந்த இன்பத்தின் மறுபக்கமாக அந்த அறிவும் நுண்ணுணர்வும் அளிக்கும் பலவகை சோர்வுகளையும் துன்பங்களையும் அடையவேண்டியிருக்கும் அதைத் தவிர்க்கமுடியாது என்கிறார்.
  • கலைகளில் இசையையே ஷோப்பனோவர் முதன்மையாகக் கருதினார். “விழைவின் வேற்றுருவே இசை” என்றார். இசை என்பது நகலெடுக்கவியலாத தூய கலை வடிவம். ஆனால் ஓவியம் என்பது ஒன்றை பிரதியெடுப்பது என்று கூறி இசையை ஏற்று ஓவியத்தை நிராகரிக்கிறார்.
  • சக உயிர்களிடம் காட்டும் அன்பு, நம்மில் சமநிலையைப் பேணும் என்றும் சிறிது காலத்திற்கேனும் நம் விழைவு கொள்ளும் வீரியத்தைக் கட்டுப்படுத்தி வைக்கும் என்றார்.
  • இலக்கியவாதியும் கலைஞனும் சமகாலச்சிக்கல்கள், உணர்வுகள் ஆகியவற்றிலிருந்து முழுமையாகவே விலகிவிட்டிருக்கவேண்டும் என மிக ஆழமாக ஷோப்பனோவர் வலியுறுத்தினார்.

ஷோப்பனோவர் மரபு

முதல் உலகப்போருக்கு முன் வரை ஷோப்பனோவர் மிக முக்கியமான தத்துவவியலாளராக விளங்கினார். ஷோப்பனோவரின் தத்துவச் சிந்தனை புதிய தத்துவவியல் அறிஞர்கள் உருவாவதற்கான அடித்தளத்தை அமைத்தது. ஜூலியஸ் பன்சென் , பால் டியூசென் , லாசர் வான் ஹெலன்பாக், கார்ல் ராபர்ட் எட்வார்ட் வான் ஹார்ட்மேன், எர்ன்ஸ்ட் ஓட்டோ லிண்ட்னர், பிலிப் மெயின்லேண்டர், ஃபிரிட்செல்ஸ் ப்ரீட்ரிச், நில்செர்ட் ஆகியோர் அவரின் மரபின் நீட்சியாக ஒரு அறிவார்ந்த உரையாடல் தளத்தை உருவாக்கினர். இது ஷோப்பனோவரை முற்றிலும் எதிர்த்த நியோ-காண்டியனிசம், நேர்மறைவாதம் ஆகிய கருத்துவாதங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. நீட்சே தன் தத்துவச் சிந்தனையின் தொடக்கமாக 'The World as Will and Representation' என்ற புத்தகத்தையே குறிப்பிட்டார்.

இயற்பியலாளர்களான ஐன்ஸ்டீன், ஷ்ரோடிங்கர், வுல்ஃப்கேங் பெளலி, இசை மேதை ரிச்சர்ட் வாக்னர், எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், தாமஸ் மன், தாமஸ் ஹார்டி ஆகியோரிடம் ஷோப்பனோவரின் தாக்கம் இருந்தது.

மறைவு

ஷோப்பனோவர் செப்டம்பர் 21, 1860-ல் காலமானார். அவருடைய கல்லறை ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட்டில் உள்ளது.

மதிப்பீடு

”தூய தத்துவம் என்பது ஐரோப்பிய வரலாற்றிலேயே இரண்டு நூற்றாண்டுகள்தான் இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்தான் மதம், அறிவியல் ஆகிவற்றிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு தத்துவத்தை மட்டுமே கையாண்ட தத்துவ ஞானிகள் தோன்றினர். உதாரணம்: ஷோப்பனோவர்” என ஜெயமோகன் மதிப்பிட்டார்.

நூல்கள் பட்டியல்

  • On the Fourfold Root of the Principle of Sufficient Reason (1813)
  • On Vision and Colors (1816)
  • Theory of Colors (1830)
  • The World as Will and Representation (vol. 1, 1818)
  • The World as Will and Representation (vol. 2, 1844)
  • The Art of Being Right (1831)
  • On the Will in Nature (1836)
  • On the Freedom of the Will (1839)
  • On the Basis of Morality (1840)
  • The Two Basic Problems of Ethics: On the Freedom of the Will, On the Basis of Morality (1841)
  • Parerga and Paralipomena (2 vols, 1851)
  • An Enquiry concerning Ghost-seeing and what is connected therewith (1851)
  • Arthur Schopenhauer, Manuscript Remains

உசாத்துணை


✅Finalised Page