under review

திருப்பாணாழ்வார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 70: Line 70:
* [http://www.tamilsurangam.in/literatures/divya_prabandham/amalanaathibiraan.html திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் -தமிழ்ச்சுரங்கம்]
* [http://www.tamilsurangam.in/literatures/divya_prabandham/amalanaathibiraan.html திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் -தமிழ்ச்சுரங்கம்]
* [https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2021/dec/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3752156.html திருப்பாணாழ்வார்-தினமலர், டிசம்பர் 10, 2021]
* [https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2021/dec/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3752156.html திருப்பாணாழ்வார்-தினமலர், டிசம்பர் 10, 2021]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Jan-2023, 10:12:07 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வைணவ அறிஞர்கள்]]
[[Category:வைணவ அறிஞர்கள்]]

Latest revision as of 16:45, 13 June 2024

Dinamalar.com

திருப்பாணாழ்வார் (பாண்பெருமாள், முனிவாகனர்) (எட்டாம் நூற்றாண்டு) வைணவ நெறியைப் பின்பற்றி திருமாலைத் தமிழ்ப் பாசுரங்களால் போற்றிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். தாழ்த்தப்பட்ட (பஞ்சமர்) குலத்தில் பிறந்தவர். 'அமலனாதிபிரான்' எனத் தொடங்கும் பதிகத்தால் திருவரங்கனின் அழகை அடி முதல் முடி வரை பாடியவர். ராமானுஜரின் இறைவன் முன்பு அனைவரும் ஒன்றே என்ற நிலைப்பாட்டிற்கு திருப்பாணாழ்வாரின் வரலாறும் ஓர் காரணம்.

பிறப்பு, இளமை

திருப்பாணாழ்வார் திருச்சிக்கு அருகில் உள்ள உறையூரில் எட்டாம் நூற்றாண்டு துன்மதி வருடம் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பாணர் குலத்தில் பிறந்தார். (நெற்பயிருக்கு நடுவே ஓர் பாணரால் கண்டெடுக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது)

கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்!
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள்.
உபதேசரத்தினமாலை , மணவாள மாமுனிகள்

ஆழ்வார்களில் சிலர் திருமாலின் ஆயுதம், வாகனம் போன்றவற்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கைகளில் ஒன்று. அதன்படி திருப்பாணாழ்வார் விஷ்ணுவின் மார்பிலுள்ள ஶ்ரீவத்ஸம் என்னும் மருவின் அம்சமாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. யாழிசைப்பதிலும், பாடுவதிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும் அம்மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார். பாணர் குலத் தலைவர் என்பதால் 'திருப்பாணர்'என அழைக்கப்பட்டார்.

அரங்கன் கோவிலுக்குள் செல்லல்-குருபரம்பரைக் கதை

திருப்பாணர் ஓரு நாள் காவிரியின் தென்கரையில் அரங்கன் ஆலயம் இருக்கும் திக்கை நோக்கித் தொழுது பாடிக்கொண்டிருக்கும் போது திருவரங்கக் கோவிலில் ஆராதனை செய்பவரான லோகசாரங்க முனிவர் காவிரியில் நீராடித் திருமண் தரித்து, துளசிமணி மாலையும், தாமரை மணிமாலையும் கழுத்தில் அணிந்துகொண்டு, திருவரங்கநாதனின் திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு செல்ல, பொற்குடத்தோடு காவிரிக் கரைக்கு வந்தார். அவர் திருப்பாணரைக் கண்டு கைதட்டிக் கூவி, ஓஅப்பால் செல் என்று சத்தமாகக் கூறினார். பக்திப் பரவசத்தில் மெய் மறந்திருந்த திருப்பாணருக்கு அது கேட்கவில்லை. லோகசாரங்க முனிவர் கோபம் கொண்டு, ஒரு கல்லை எடுத்து திருப்பாணரை நோக்கி வீசினார். அது பாணரின் நெற்றியைத் தாக்க, நெற்றியிலிருந்து குருதி வழிந்தது. லோகசாரங்கர் காவிரி நீரை முகந்துகொண்டு சென்றார். கருவறையில் திருவரங்கன் நெற்றியில் குருதி வழியக்கண்டார்.

அரங்கன் அன்று இரவில் லோகசாரங்கருடைய கனவில் தோன்றி "திருப்பாணரை இழி குலத்தவர் எனக் கருதாமல் உம் தோள் மீது எழுந்தருளச் செய்து, திரு முன்பு கொண்டு வருவீராக" என்று கட்டளையிட்டார். லோக சாரங்கரும் அடுத்த நாள் அதிகாலையில் காவிரிக்கரையில் திருப்பாணரைக் கண்டு பணிந்து அவரை தன் தோளில் ஏற்றிக்கொண்டு அரங்கன் சன்னிதிக்கு வந்தார். லோகசாரங்கரின் தோளிலேறி அரங்கனைக் காண வந்ததால் 'முனிவாகனர்' என்ற பெயர் பெற்றார் திருப்பாணாழ்வார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் 'இசைகாரர்' என்று திருப்பாணாழ்வாரைக் குறிப்பிடுகிறார்.

அரங்கனை தரிசித்தல், அமலனாதிபிரான்

லோகசாரங்க முனிவர், திருப்பாணரைத் தோளிலேற்றிக் கொண்டு சென்று அரங்கநாதனது திரு முன்பே இறக்கிவிட்டார். திருப்பாணாழ்வார் அரங்கனின் திருவடி முதல் தலைவரையில் ஓவ்வொரு அவயமாகக் கண்டு சேவித்தார். அரங்கனின் பாதாதி கேச வர்ணனையாக (திருவடி முதல் தலை வரை)

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

என்று திருவடிகளில் தொடங்கி பீதம்பரம், உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் 10 பாசுரங்களில் பதிகமாகப் பாடினார். இப்பதிகம் தன் முதலடியையே பெயராகக் கொண்டு 'அமலனாதிபிரான்' என அழைக்கப்படுகிறது. (பார்க்க: அமலனாதிபிரான்)

நிறைவாக, இப்பேர்ப்பட்ட அழகைக் கண்ட தன்னுடைய கண்களால் வேறெதையும் காண விருப்பமில்லை என்பதால்

கொண்டல் வண்ணனை, கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன், என் உள்ளம் கவர்ந்தானை,
அண்டர்கோன், அணி அரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

என மக்கள் பலரும் காண திருப்பாணர், பெரிய பெருமாளின் திருவடிகளை அணுகிக் கீழே விழுந்து வணங்கி, அரங்கனுடன் கலந்து மறைந்தார். ஆழ்வார்களுள் ஒருவராகி திருப்பாணாழ்வார் எனப் பெயர் பெற்றார்.

பாசுரங்கள்

திருப்பாணாழ்வார் இயற்றிய அமலனாதிபிரான் எனத் தொடங்கும் 10 பாசுரங்கள் நாலாயிர திவ்யப் புரபந்தத்தின் முதலாயிரம் தொகுப்பில் ஒன்பதாவது பிரபந்தமாக இடம்பெறுகின்றன. திருவரங்கனின் அழகைப் பாடும் இப்பாசுரங்கள் வைணவர்கள் தினமும் பாராயணம் செய்யும் நித்தியானுசந்தானத் தொகுப்பில் இடம்பெறுகின்றன.

பார்க்க: அமலனாதிபிரான்

சிறப்புகள்

திருப்பாணாழ்வார் சன்னதி உறையூர் (திருக்கோழி) அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ளது. ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கவிலாஸ மண்டபத்திலும் திருப்பாணாழ்வார் சன்னதி உள்ளது.

வைணவக் கொள்கைகளின்படி திருமால் பரம் (பரம்பொருள்), வியூகம் (பாற்கடலில் பள்ளிகொண்ட நிலை), விபவம் (அவதாரங்கள்), அந்தர்யாமி (இதயத்துள் உரைபவன்), அர்ச்சை( கோவிலுள் உள்ள தெய்வச்சிலைகள்) என்ற ஐந்து நிலைகளில் இருந்து அருள்பாலிக்கிறார்.

மற்ற ஆழ்வார்கள் பரத்திலும், விபவத்திலும், அர்ச்சையிலும் மாறி மாறி தம் மனத்தைச்செலுத்திய போது "திருப்பாணாழ்வாரோ பெரியபெருமாளின் அர்ச்சையிலேயே ஊன்றி, கடவல்லி போலே அர்ச்சையை ஆதரித்துப் போந்தார்" என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருப்பாணாழ்வாரின் பெருமையைக் கூறுகிறார்.

ராமானுஜரின் இறைவன் முன்பு அனைவரும் ஒன்றே என்ற நிலைப்பாட்டிற்குத் திருப்பாணாழ்வாரும் ஓர் காரணமாக அமைந்தார். திருக்கச்சி நம்பிகளுடனான உரையாடலின் போதும் ராமானுஜர் திருப்பாணாழ்வாரின் பெருமையை எடுத்துக்கூறி குலம், பிறப்பு அனைத்தையும் விட பக்தியே பெரிது என்று அவரை உதாரணம் காட்டினார்.

திருவரங்கம் கோயிலில் ராமானுஜர் சந்நிதியில் முன் மண்டப விதானத்தில் காணப்படும் ஓவியங்களில் நெற்றியில் திருமண் அணிந்து காவிரியாற்றின் தென்கரையில் யாழை மீட்டி திருப்பாணாழ்வார் பாடும் காட்சியும் அடுத்து லோகசாரங்கருடன் சன்னதியில் அரங்கனைக் கண்டு மகிழும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவில் ஐந்தாம் நாள் திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் பாசுரங்கள் அரையர் சேவையில் இடம்பெறுகின்றன.

மங்களாசாசனம் செய்த தலங்கள்

திருப்பாணாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (போற்றிப் பாடப்பட்ட) தலங்கள் திருவரங்கம், திருவேங்கடம், பரமபதம் (திருப்பாற்கடல்) முதலியன.

திருப்பாணாழ்வாரின் வாழி திருநாமம்

உம்பர் தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே
உரோஹிணிநாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறு ஒன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிள் அரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 10:12:07 IST