under review

நளவெண்பா: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 66: Line 66:
*[https://www.imayavaramban.com/nalavenba/ நளவெண்பா-கதையும், கருத்தும்]
*[https://www.imayavaramban.com/nalavenba/ நளவெண்பா-கதையும், கருத்தும்]
*[https://www.tamilvu.org/library/l5E10/html/l5E10001.htm நளவெண்பா மூலமும், செ.ரெ.இராமசாமிபிள்ளை உரையும், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]
*[https://www.tamilvu.org/library/l5E10/html/l5E10001.htm நளவெண்பா மூலமும், செ.ரெ.இராமசாமிபிள்ளை உரையும், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|04-Nov-2023, 01:59:53 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:24, 13 June 2024

நளவெண்பா.jpg

நளவெண்பா(பொ.யு. 12-ம் நூற்றாண்டு) மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான நளன்- தமயந்தி கதையைக் கூறும் சிறுகாவியம். வெண்பா என்னும் பா வகையில் எழுதப்பட்டது. இலக்கியச் சுவையும் , உவமை நயமும் நிறைந்த நூல்.

ஆசிரியர்

நளவெண்பாவின் ஆசிரியர் பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்று கருதப்படுகிறது. இதே பெயரில் இருந்த 13-ம் நூற்றாண்டுப் புலவர் ஒருவர் மகாபாரதம் தொடர்பான அம்மானைப் பாடல்கள் பாடியுள்ளார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகவல் பற்றிய பல ஊகங்களும் தொடர்விவாதங்களும் உள்ளன.

நூல் அமைப்பு

மகாபாரத காவியத்தில் கௌரவர்களுடன் சூதாட்டத்தில் தோற்று நாட்டை இழந்த பாண்டவர்கள் திரௌபதியுடன் காட்டில் வாழ்கின்றனர். அவர்களை பிரகதசுவர் என்னும் முனிவர் சென்று காண்கிறார். தங்களுக்கு நிகழ்ந்தவற்றால் கவலையுடன் இருந்த தருமரைத் தேற்றும் விதமாக முனிவர் அவருக்கு நளனின் கதையைக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. மூன்று காண்டங்களில் 427 வெண்பாக்களைக் கொண்டது.

  • பாயிரம் , நூல்வரலாறு-(7 பாட்ல்கள்)
  • சுயம்வர காண்டம் (171 பாடல்கள்)
  • கலித்தொடர் காண்டம் (155 பாடல்கள்)
  • கலிநீங்கு காண்டம் (94 பாடல்கள்)
பாத்திரங்கள்
  • நளன்
  • தமயந்தி
  • வீமன் (தமயந்தியின் தந்தை)
  • இந்திரன்
  • கலி
  • கார்கோடகன் (நாகம்)
  • இருதுபன்னன் (அயோத்தி மன்னன்)
  • புட்கரன்
  • இவர்களுடன் அன்னப் பறவை ஒன்றும் முதன்மைப் பாத்திரமாக உள்ளது.

கதைச் சுருக்கம்

நிடத நாட்டு மன்னாகிய நளன் அறநெறி தவறாமல் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வந்தான். அவன் வேனில் காலத்தில் ஒருநாள் இளைப்பாறுவதற்கு ஒரு பூஞ்சோலைக்குச் சென்றான். அங்குள்ள குளத்தில் அன்னப் பறவையொன்றைக் கண்டான். அந்த அன்னம், நளனிடம் தமயந்தி என்னும் அழகிய மங்கையைப் பற்றி கூறி, அவன் மணம் புரிய ஏற்றவள் என்றும் சொல்லிற்று. அன்னம் கூறிய சொற்களால் தமயந்தியிடம் காதல் வயப்பட்ட நளன் அந்த அன்னத்தை தமயந்தியிடம் தூதாக அனுப்பினான். அது தமயந்தியிடம் சென்று நளனைப் பற்றி தெரிவித்தது. பின் அவளது காதலை நளனிடம் வந்து தெரிவித்தது.

தமயந்தியின் தந்தையான விதர்ப்ப நாட்டரசன் வீமன் தன் மகளது சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான். இந்திரன் முதலிய தேவர்களும் நளன் உருவத்திற்கு மாறி அந்தச் சுயம்வர மண்டபத்தில் இருந்தனர். மன்னர்கள் பலரும் திரண்டு அங்கு வந்திருந்தனர். ஆயினும், தமயந்தி மெய்யான நளனுக்கே மாலை சூட்டி மணவாளனாகக் கொண்டாள்.

சுயம்வரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த தேவர்கள் வழியில் கலியைக் கண்டனர்; அவனிடம் திருமண நிகழ்ச்சியைப் பற்றி உரைத்தனர். தமயந்தியை மணம்கொள்ளும் விருப்பத்துடன் வந்த கலி அதைக் கேட்டு பெருங்கோபம் கொண்டு, தான் நளனைக் கீழ்மைப்படுத்தப் போவதாகவும், நளனையும் தமயந்தியையும் பிரித்துவிடப் போவதாகவும் சபதம் செய்தான்.

சபதத்தை நிறைவேற்ற சரியான காலத்தை எதிர் நோக்கியிருந்த கலி நளனுடன் சூதாட புட்கரன் என்னும் மன்னனை அனுப்பினான். அவனுடன் சூதாடிய நளன் தன் நாட்டையும், அனைத்து செல்வங்களையும் இழந்தான். பின்னர் தன் மகன்கள் இருவரையும் தன் மாமன் வீமனின் நாட்டுக்கு அனுப்பிவிட்டு தன் மனைவி தமயந்தியுடன் காட்டில் வசித்துவந்தான்.

ஒரு நாள் காட்டில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் நளனும் தமயந்தியும் உறங்கினர். அப்போது விழித்தெழுந்த நளன் கலியின் சூழ்ச்சியினால் அந்தக் காட்டில் தமயந்தியைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு நீங்கினான். உறக்கம் நீங்கி எழுந்த தமயந்தி நளனைக் காணாமல் பதறி, வணிகன் ஒருவனின் துணையுடன் தன் தந்தையின் விதர்ப்ப நாட்டுக்குச் சென்றாள். தன் தந்தை வீமனிடம் நளனைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி வேண்டினாள். அதே நேரத்தில், அவளைப் பிரிந்து சென்ற நளன், கார்க்கோடகன் என்னும் நாகத்தை காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றும்போது அந்த நாகத்தினால் கடிபட்டு தன் மேனி கறுத்தான். தன் பழைய உருவத்தை மீண்டும் பெற நினைத்தால் உடுத்திக் கொள்ளும்படி அந்த நாகம் இரண்டு ஆடைகளை நளனுக்குக் கொடுத்தது. அந்த ஆடைகளைப் பெற்றுக்கொண்ட நளன் அயோத்தி நகர் சென்றான். அந்த நாட்டு மன்னன் இருதுபன்னனிடம் வாகுகன் என்னும் பெயரில் பணிக்குச் சேர்ந்து சமையல்காரனாகவும் தேரோட்டியாகவும் பணிபுரிந்து வந்தான்.

நளனைத் தேடுவதற்காக தமயந்தியின் தந்தை வீமனால் நியமிக்கப்பட்ட அந்தணன் ஒருவன் அயோத்தியில் நளன் இருப்பதை அறிந்து வந்து தமயந்தியிடம் தெரிவித்தான். அவள் சொற்படி, தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் நிகழ்வதாக அந்த அந்தணன் இருதுபன்னனுக்கு மணவோலை கொடுத்து அழைப்பு விடுத்தான். இருதுபன்னனும், வாகுகனாக இருந்த நளன் தேரை ஓட்ட, வீமனின் தலை நகரமான குண்டினபுரத்தை அடைந்தான்.

இந்த இருவரும் தேரில் வருவதைக் கண்ட தமயந்தி, தேரோட்டி உண்மையில் நளன் தானா என்பதைக் கண்டறிய தன் மகன்களை வாகுகனிடம் அனுப்பி, அங்கு நிகழ்ந்ததை தோழியின் மூலம் அறிந்து தேரோட்டி நளனே என்பதைத் தெளிந்தாள். தன் தந்தையுடன் வாகுகனிடம் சென்று அவனுடைய உண்மையான உருவத்தைக் காட்டும்படிக் கேட்டுக் கொண்டாள். வாகுகன் உருவம் மாறி நளனாகத் தோன்றினான்.

அதன் பின்னர் நளமன்னன் தன் மனைவி மக்களுடன் தன் நாடான நிடத நாட்டுக்குச் சென்று, புட்கரனுடன் மறுபடியும் சூதாடி, வெற்றி பெற்று, தன் நாடு நகரமெல்லாம் மீண்டும் கைப்பற்றி, முடிசூடி, நல்லாட்சி செய்து இனிது வாழ்ந்தான்.

இலக்கிய இடம்

நளவெண்பா இலக்கியச் சுவைக்காகவும் உவமை நயத்துக்காகவும் விரும்பிப் பயிலப்படுகிறது. "நளவெண்பா, தமிழ் நயத்தோடு மனவமைதியையும் தருவது. தமிழ்ப் பயிற்சிக்கு ஒரு தெளிந்த ஊற்றுக்கால் போன்றது. கற்கக் கற்கத் தமிழ் நயத்திலே திளைத்து மகிழ்கின்ற ஓர் களிப்பை ஊட்டுவது. காலத்தை வென்று நிற்பது. கவிஞராக விரும்புவோர் இந்நூலை மனப்பாடம் செய்துவிட்டாலே போதும். கவிதை ஊற்றெடுத்துப் பொங்கிப் பெருகி வருவதைக் காண்பார்கள்" என்று புலியூர்க் கேசிகன் குறிப்பிடுகிறார்.

பாடல் நடை

மாலைக்காட்சி

வையம் பகல்இழப்ப வானம் ஒளிஇழப்ப
  பொய்கையும் நீள்கழியும் புள்இழப்பப் - பையவே
  செவ்வாய் அன்றில் துணைஇழப்பச் சென்றடைந்தான்
  வௌவாய் விரிகதிரோன் வெற்பு (நளவெண்பா 104)

மாலையில் பகற்பொழுதும் வானத்து ஒளியை இழக்க, பொய்கை கடற்கரை உப்பங்கழிகள் பறவைகளை இழக்க(அவை கூடடைந்ததால்) அன்றில் பறவைகள் பிரிவை இழக்கக்(தத்தம் துணையோடு கூட்டினை அடைய) காரணமாய் இருந்த சூரியன், தன் கதிர்களை மறைத்து மேற்கு மலையை அடைந்து மறைந்தான்

நளனின் தேரோட்டும் திறன்

மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதின்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.

வெற்றி மிக்கவனான இருதுபன்னன் ஏறிவருவதற்கு, கொடுமை பொருந்திய கலியின் வஞ்சமுள்ள சூதாட்டத்தின்மீது, மயக்கங் கொண்டவாகுகனாகிய நளன் முட்கோல் கொண்டு முடுக்கி ஓட்டிய குதிரைகள், (இருதுபன்னன்) தன் மேலாடை கீழே விழுந்துவிட்டது அதனை எடுவென்று வாகுகனை நோக்கிக் கூறினான், அது சொல்லி முடிப்பதற்குள், தேர் பத்துக்காத தூரம் பறந்து சென்றது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Nov-2023, 01:59:53 IST