under review

வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added: Link Created: Proof Checked.)
(No difference)

Revision as of 22:28, 15 May 2024

வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ் (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சு. தாமஸ்.

வெளியீடு

வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ், ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சு. தாமஸ்.

நூல் அமைப்பு

வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ், பெண் பாற் பிள்ளைத் தமிழ் இலக்கணத்திற்கேற்பப் பத்துப்பருவங்களில் அமைந்துள்ளது. முதல் பருவமான காப்புப் பருவத்தில் கீழ்க்காணும் துதிகள் இடம்பெற்றன.

இறைவன் துதி

இறை மகன் துதி

தூய ஆவி துதி

திரித்துவ வணக்கம்

மாதவன் துதி

வானவர் துதி

பிதாக்கள் துதி

அர்ச்செயர் துதி

திரிச்சபை துதி

குரு முனிவர் துதி

தொடர்ந்து தாலப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊஞ்சல் பருவம் ஆகியன இடம்பெற்றன. பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் வேளை மரியன்னை பிள்ளைத் தமிழில் நூறு பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ் நூலில், ஆசிரியர் சு. தாமஸ், வேளை அன்னையை பத்து பருவங்களில் பாடினார். ஒவ்வொரு பருவமும் இலக்கிய நயமும் கருத்தாழமிக்கதாகவும் அமைந்துள்ளது. வேளாங்கண்ணி அன்னையைக் குழந்தையாகச் சித்திரித்து தமிழ்நாட்டின் தன்மைக்கேற்ப அன்னையைப் புகழ்ந்துரைத்துள்ளார். வேளாங்கண்ணி அன்னையின் குழந்தைப் பருவச் செயல்பாடுகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

பாடல் நடை

திரித்துவ வணக்கம்‌

ஆடியுள்‌ தோன்றுவடி வங்கள்‌ பல வாயினும்‌

அனல்மயச்‌ சொரூபம்‌ ஒன்றே

அரிகொண்ட வாறுபோல்‌ முத்தொழிற்‌ றன்மையால்‌

அந்தமில்‌ தந்தை மகவாய்க்‌

கூடிவரு நேசமாய்‌ ஆள்வசையில்‌ மூன்றெனக்‌

கொள்ளினும்‌ எள்ளல்‌ செல்லாக்‌

குணங்குறியி லொன்றுமாய்‌ நின்றொளிர்‌ திரித்துவக்‌

கோதில்‌ பரனைத்‌ துதிப்பாம்‌.

பாடியும்‌ தீயநெறி கூடியு மொருத்தர்கைப்‌

பாராத வண்ணம்‌ இனிய

பல்வளம்‌ படுதமிழ்ச்‌ சொல்வளந்‌ தந்‌தெனைப்‌

பாரிற்‌ புரந்த செல்வி

தேடியும்‌ காணரிய கல்வியும்‌ செல்வமுஞ்‌

சேரப்‌ படைத்த சலமோன்‌

திகழுற்ற நற்குலப்‌ புகழுற்ற வேளையில்‌

தேவியைக்‌ காக்க வென்றே

சப்பாணிப் பருவம்

அடியவர்‌ மிடிபொடி படவருள்‌ நோக்கம்‌

அளிக்கு மகா நதியே!

அறிவினில்‌ அறிவரு மொருபெரு ஞானம்‌

அமைந்த கலா நிதியே!

கடிமலர்‌ கெடும்வடி வுடைய முகம்பொதி

கமல விலோ சனியே!

கதிதரு மிருபத மதில்மதி சூடிய

கனகசிம்‌ மா சனியே!

இடிபடு கனைகுரல்‌ மதகய மெனவரும்‌

இருளல கைக்‌ கரியே!

இருவீழி தனிலருள்‌ ஒழுக எமக்கருள்‌

இணையில்‌ தயா பரியே!

குடியினில்‌ உயர்தவி தன்குல மரியே!

கொட்டுக சப்‌ பாணி

குலவிய சமய வளம்பதி கொண்டவள்‌

கொட்டுக சப்‌ பாணி

வருகைப் பருவம்

வானே வருக பெருங்கருணை

வடிவே வருக வையகத்தார்‌

வாழ்வே வருக நறுந்தண்பூ

வனமே வருக மாமலர்ச்‌ செந்‌

தேனே வருக தெள்ளமுதத்‌

தெளிவே வருக திவ்ய மறைத்‌

திருவே வருக திருவளன்றன்‌

தேவீ வருக செகம்புரக்கும்‌

பானே வருக மங்கலஞ்சேர்‌

பாவாய்‌ வருக பயிற்றுமிசைப்‌

பண்ணே வருக பண்‌ கனிந்த

பயனே வருக பைந்தமிழ்தேர்‌

மானே வருக தவச்சோலை

மயிலே! வருக வருகவே!

மருவும்‌ புகழ்சேர்‌ ஈகர்வேளை

மரியே! வருக வருகவே

அம்மானை

ஒழிவற்ற நிறைகருணை வடிவுற்ற முகமதியின்

ஒளிபட் டிருண்ட கங்குல்

உருவுற்ற சென்மவினை வெருவுற்று விட்புலத்து

உறுபொழிற் கோடி விடல் போல்

தெளிவற்ற மறைமகளின்‌ அருள்பெற்‌ றிடற்கமரர்‌

செகமுற்‌ றிழிந்‌ திறங்கும்‌

செயல்போலு மம்மனைக்‌ காய்திகழ வீசியும்‌

திரும்பப்‌ பிடித்தும்‌ மிடியால்‌

நலிவுற்ற பழவடியர்‌ இதயத்‌ தடத்துறையும்‌

நளினப்‌ பதம்‌ பெயர்த்து

நடைகொண்டு மடமாதர்‌ புடைகொண்டு சூழ்ந்திலகு

நலங்கொண்‌ டரங்கில்‌ மேவி

அழிவற்ற கன்னிமையின்‌ எழிலுற்ற தூயமகள்‌

அம்மானை யாடி யருளே

அண்டமா னதில்மகிமை கொண்ட வேளைக்கிறைவி

அம்மானை யாடி யருளே

மதிப்பீடு

வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ், இனிய எளிய நடையில் இயற்றப்பட்டது. இலக்கியச் சுவையுடன் அமைந்த இந்நூலில் வேளாங்கண்ணி அன்னையின் பெருமை, சிறப்பு, அவரது அருள் புரியும் திறம் ஆகியன விரிவாக விளக்கப்பட்டுள்ளன. கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்களுள் குறிப்பிடத்தகுந்த நூலாக வேளை மரியன்னை பிள்ளைத் தமிழ் நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.