under review

ரஞ்சகுமார்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 31: Line 31:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|16-Jun-2022, 02:05:09 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 16:33, 13 June 2024

ரஞ்சகுமார்

ரஞ்சகுமார் ( 17 டிசம்பர் 1959) இலங்கைத் தமிழ் எழுத்தாளர். ஈழச் சிறுகதை வரலாற்றின் ஒரு கட்டத்தில் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் எழுதி அறிமுகமானவர். ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து வசிக்கிறார்

பிறப்பு, கல்வி

ரஞ்சகுமார் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கரவெட்டி என்ற ஊரில் சோமபால மற்றும் அம்மா தம்பதிகளுக்கு 1959-ம் ஆண்டு டிசம்பர் 17,1959 அன்று பிறந்தார். ரஞ்சகுமார் தனது ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்யாலயம், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிலுல் முடித்தார். மேற்படிப்பை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கற்றார். ரஞ்சகுமாரின் தந்தையாரான முருகேசு சோமபால தென்னிலங்கையின் குளியாப்பிட்டிய என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் - சிங்களக் கலப்பினத்தவர்.

தனிவாழ்க்கை

தனது பதினெட்டாவது வயதில் கொழும்புக்கு வேலைத் தேடிச் சென்ற ரஞ்சகுமார், நாட்டில் நிலவிய இனமுரண்பாட்டுக் கலவரம், யுத்தம் என்பன காரணமாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மாறி மாறி வசித்து, இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தின் மத்தியில், நிரந்தரமாக கொழும்பிற்கு இடம்பெயர்ந்து வசிக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக கொழும்பில் 31 வருடங்கள் வசித்த ரஞ்சகுமார், 2010 -ல் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, தற்போது சிட்னியில் வசித்து வருகிறார்.ரஞ்சகுமாரின் மனைவியின் பெயர் சுமதி. இவர்களது ஒரே மகளின் பெயர் சாம்பவி. அவரும் திருமணமாகி சிட்னியில் வசிக்கிறார். ரஞ்சகுமார்,1979-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அச்சகத் தொழிலில் ஈடுபட்டுவருபவர்.

இலக்கிய வாழ்க்கை

யாழ்ப்பாணத்தில் வசித்த காலத்தில் 1989-ம் ஆண்டு தனது கதைகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிட்டார். ரஞ்சகுமார் எழுதிய "மோகவாசல்" சிறுகதைத் தொகுப்பு இலங்கை வாசகர்கள் மத்தியில் மட்டுமன்றி வெளிநாடுகளிலுள்ள தமிழ் வாசகர்கள் மத்தியிலும்கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. மோகவாசலின் இரண்டாவது பதிப்பு சென்னை சவுத் ஏசியன் புக் பலஸ் வழியாகவும் மூன்றாவது பதிப்பு கொழும்பு மீரா பதிப்பகத்தின் ஊடாகவும் வெளியாகின.

மோகவாசல் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், அவை வெளிவந்த காலகட்டத்தில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்களச் சிறு சஞ்சிகைகளில் வெளியாகின. பின்னர், அவை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன.

ஜனனி, அம்மன், முருகேசு சம்பரன், ஆழ்வார்க்குட்டி ஆகிய புனைபெயர்களில் ரஞ்சகுமார் எழுதிய கதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் 'அலை', 'புதுசு', 'திசை', 'சரிநிகர்', 'வீரகேசரி', 'நந்தலாலா', 'ஞானம்', 'உயிர் எழுத்து', 'இருக்கிறம்' ஆகியவற்றில் வெளிவந்தன. ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், 'எதிரொலி' பத்திரிகையிலும் அவர் எழுதிய சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இதழியல்

கொழும்பிலிருந்து 90-களில் வெளிவந்து குறிப்பிடத்தக்க அரசியல் கருத்துக்களின் களமாக நிலைகொண்டிருந்த இடதுசாரிப் பார்வைகொண்ட சரிநிகர் இதழில் ரஞ்சகுமார் பங்களிப்பாற்றினார்.

விருதுகள், பரிசுகள்

1988-ம் ஆண்டு திசை பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் ரஞ்சகுமார் எழுதிய 'கோளறுபதிகம்' முதற்பரிசுக்குத் தேர்வானது.

2010-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தமிழ் கலை இலக்கியச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ரஞ்சகுமாரின் "நவகண்டம்" என்ற கதைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

ரஞ்சகுமார் எழுதிய ஒரே நூலான 'மோகவாசல்’ வாசகர்கள் மத்தியில் ஈழ இலக்கியத்தின் முக்கியமான புனைவுப்பிரதியாக தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் தீவிர சமூகச்சிக்கல்களான சாதியம் மற்றும் வர்க்கப்பிரச்சினைக்கு தீர்வைப் பெறுவதற்கான வழியாக சோஷலிச யதார்த்தவாதத்தினை இலக்கிய வழிமுறையாகப் பின்பற்றிய ஈழ இலக்கியத்தின் முற்போக்கு முகாம், எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ்த் தேசியப்பிரச்சினையையும் உள்வாங்கி, அதற்கு முதன்மை இடம் வழங்கியது. எண்பதுகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு ரஞ்சகுமார் போன்றவர்களின் எழுத்தும் முக்கியமான காரணம் . முற்போக்கு இலக்கிய அம்சங்களின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியாகவும் ரஞ்சகுமாரின் எழுத்துக்கள் கருதப்படுகின்றன.

ரஞ்சகுமார் எழுதவந்த காலத்தில் ஈழ இலக்கியத்தின் முதன்மை விமர்சகர்களாகத் திகழ்ந்த க.கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி ஆகியோரால்பாராட்டப்பட்ட மல்லிகை இதழ் சார்ந்து ரஞ்சகுமார் எழுதாமையால் அவர் முதலில் கவனிக்கப்படவில்லை. ரஞ்சகுமார், சேரன், உமா வரதராஜன் போன்றவர்கள் அலை சிற்றிதழ் சார்ந்தவர்களாக கருதப்பட்டனர். காலப்போக்கில் சிவத்தம்பியை மையமாக்கிய முற்போக்கு அணியும் இவர் படைப்புகளை ஏற்றுக்கொண்டது.

'தமிழ்த் தேசியக்கருவினை இலக்கியத்தில் எடுத்தாளும் பலர் வெறும் வாய்பாட்டுக்கதைகளாக எழுதிக்கொண்டிருக்கும்போது, ரஞ்சகுமார் அதனைக் கலையாக்க் கொண்டுவரும் திறன் பெற்றிருக்கிறார்" - என சிவத்தம்பியால் ரஞ்சகுமார் பாராட்டப்பட்டார். 'நாட்டாரியல் தன்மை ததும்பும் தன் கதைமொழியில் அவர் தீட்டிய போர்க்கால மானுடச் சிதைவுகளின் அழியாச் சித்திரமே ஈழத்தின் தவிர்க்க முடியாத படைப்பாளி என்ற இடத்தில் அவரை இன்னமும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது’ என்று ஜிஃரி ஹாஸன் குறிப்பிடுகிறார். (அகழ் மின்னிதழ்)[1]

நூல்கள்

மோகவாசல் (இணையநூலகம்)[2]

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2022, 02:05:09 IST