ஹரிஹரசுதன் தங்கவேலு

From Tamil Wiki
Revision as of 06:00, 26 June 2024 by Editorgowtham (talk | contribs)
ஹரிஹரசுதன் தங்கவேலு (2023)

ஹரிஹரசுதன் தங்கவேலு ஓர் எழுத்தாளர், இணைய மோசடிகளை கண்டறியும் தொழில்நுட்ப ஆய்வாளர்.

சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார்.[1] எட்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் , தினசரி மற்றும் வார இதழ்களில் கதைகள் மற்றும் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் அளிப்பது, கௌரவ விருந்தினராக பங்கேற்பது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

சென்னை தமிழ்ச் சங்கத்தின் 2018-ம் ஆண்டிற்கான சேக்கிழார் விருதினை பெற்றவர். இவரது ‘இஸ்ரோவின் கதை’ நூல் 2021-ம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றது.

பிறப்பு, கல்வி & திருமணம்

ஹரிஹரசுதன் தங்கவேலு கோவையில் பிறந்தார். வணிக மேலாண்மையில் முதுநிலை பயின்றார். அதன் பின்னர், கணிப்பொறி ஹேக்கிங் துறையில் நிபுணத்துவம் பெற்றார். தற்போது தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளை கண்டறியும் நிபுணராக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) துறையில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் இணைய குற்றங்கள் வாரியத்தின் நடவடிக்கைகளில் பங்களிக்கிறார்.

மனைவி ஐஸ்வர்யா நல்லமுத்து. இவர்களுக்கு ஆர்யா என்ற ஒரு மகன் உள்ளார்.

படைப்புலகம்

சென்னை, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2023)

2018-ம் ஆண்டு மின்னம்பலம் இணைய இதழில், நிழல் உலக தாதா ’தாவூத் இப்ராஹிம்’ பற்றி ஹரிஹரசுதன் எழுதிய கட்டுரைத்தொடர் நல்ல வரவேற்பைப்பெற்றதுடன் கணிசமான இணைய வாசகர்களையும் பெற்றுத்தந்தது.[2]

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) வளர்ச்சியைப்பற்றிய ஹரிஹரசுதனின் ‘எங்கள் கனா’ என்ற கட்டுரைத்தொகுப்பு, 2019 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா நடத்திய எழுத்தாளர்களுக்கான (Pen to Publish) போட்டியில் கிண்டில் பதிப்பாக (Kindle Version) வெளியாகி வாசகர்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது[3]. இதன் விளைவாக, 2021-ம் ஆண்டு 'இஸ்ரோவின் கதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் அச்சுப்பிரதியாக வெளியானது[4]. இந்நூலை வெளியிட்டவர் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் திரு. மயில்சாமி அண்ணாதுரை. இந்நூல் இந்து திசை இதழின் கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் பட்டியலில் இடம் பெற்றது.[5]

ஹரிஹரசுதன் A.I (Artificial intelligence) தொழில்நுட்பம் குறித்து 2023-ம் ஆண்டு குமுதம் வார இதழில் முப்பது வாரமாக எழுதிய 'A.I எனும் ஏழாம் அறிவு‘ கட்டுரைத்தொடர், 2024-ம் ஆண்டு புத்தகத்திருவிழாவையொட்டி வெளியாகி வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.[6]

இவர் தற்போது ஆனந்த விகடன் வார இதழில் ‘இருள் வலை வில்லன்கள்’ என்ற பெயரில் தொலைதொடர்பு சாதனங்கள் வழியே நிகழும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுக்கட்டுரைகளைத்தொடர்களை எழுதி வருகிறார்.[7]

படைப்புகள்

பா. ராகவன் வெளியிட ஜா. தீபா பெற்றுக்கொண்ட ’A.I எனும் ஏழாம் அறிவு’ நூல் வெளியீடு (2023)

கட்டுரைத் தொடர்கள்

  • 2018 - தாவூத் இப்ராஹிம் - மின்னம்பலம்
  • 2022 - ஹாக்கிங் மோசடிகள் - அருஞ்சொல்[8]
  • 2023 - A.I எனும் ஏழாம் அறிவு - குமுதம்
  • 2024 - இருள் வலை வில்லன்கள் - ஆனந்த விகடன்

புத்தகங்கள்

  • 2021 - இஸ்ரோவின் கதை - கிழக்கு பதிப்பகம்[9]
  • 2023 - A.I எனும் ஏழாம் அறிவு - ஜீரோ டிகிரி பதிப்பகம்[10]

விருதுகள்

  • 2018 - சேக்கிழார் தமிழ் விருது - அளித்தவர் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித்.
  • 2021 - தமிழக அரசின் சிறந்த தொழில்நுட்பவியல் நூல் விருது - 'இஸ்ரோவின் கதை’ (2024ம் ஆண்டு பெற்றது)

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்