யோகம்

From Tamil Wiki
சிந்து சமவெளி முத்திரை
யோகநரசிம்மர்
யோக தக்ஷிணாமூர்த்தி

யோகம்: இணைவு, தியானம், உடலைப் பயிற்றுவிக்கும் பயிற்சிகள், யோக தரிசனம்

தீர்த்தங்காரர்
புத்தர்

சொற்பொருள்

யோகினி

யோகம் என்னும் சொல்லின் வேர்ச்சொல் யுஜ். அது இணைவது, ஒன்றாவது, ஆள்வது, நடத்துவது, வண்டியோட்டுவது, ஏர்பூட்டுவது என்னும் பொருள் கொண்டது. போன்ற யோக என்னும் சொல்லில் இருந்து ஆங்கிலச்சொல் yoke உருவானது எனப்படுகிறது.

பதஞ்சலி

ஆய்வாளர்கள் யோக என்னும் சொல் ரிக்வேதத்தில் சூரிய உதயத்தை விவரிக்கையில் சூரியன் உலகை ஆள்கிறது அல்லது ஏர்பூட்டி உழுகிறது என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதுவே அச்சொல்லின் முதல் இலக்கியப் பயன்பாடு என்றும் சொல்கிறார்கள்

சம்ஸ்கிருத அகராதியியலாளரான பாணினி (பொமு 4 நூற்றாண்டு) யோகம் என்னும் சொல் யுஜிர் (நுகம்) யுஜ் சமாதௌ ( அமைதல்நிலை) என்னும் இரு வேர்ச்சொற்களில் இருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறார். பொதுவாக இரண்டாவது பொருளைத்தான் யோக ஆசிரியர்கள் கொள்கிறார்கள். ஆனால் வேத மரபின்படி புருஷன் பிரகிருதியைச் செலுத்துவோன் ஆகையால் முதல்பொருளும் சரியானதே

யோக என்னும் சொல் இன்றைய மொழிவழக்கில் ஒன்றுசேருதல், இணைந்திருத்தல், முரணியக்கம், பொதுகூட்டம், கூட்டமைப்பு என்னும் பொருட்களில் பயன்படுத்தபடுகிறது

வரலாறு

யோகத்தின் வரலாறு தொடர்ச்சியாக அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. பல வரலாற்றுக் காலகட்டங்களிலாக யோகத்தின் வளர்ச்சி நிகழ்ந்துள்ளது என ஊகிக்கப்படுகிறது. யோகத்தின் பரிணாமத்தை ஒன்பது காலகட்டங்களாக பகுக்கலாம். இவை காலlவரிசையின் அடிப்படையிலான பகுப்புகள் அல்ல. யோகத்தின் உள்ளடக்கத்தில் உருவான மாற்றம் சார்ந்த பகுப்புகள். இவற்றில் சில காலகட்டங்கள் ஒரே கால அளவில் நிகழ்ந்தவை.

சிந்து நாகரீகக் காலகட்டம் (பொமு 2600)

மொகஞ்சதாரோவில் கிடைத்த பசுபதியின் சிலை மூலபந்தனம் என்னும் யோகநிலையில் இருப்பதாகவும், யோகத்தின் வேர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தில், வேதநாகரீகத்திற்கு வெளியே உள்ளன என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இது ஊகம் மட்டிலுமே என்றும், சிந்து சமவெளி எழுத்துக்கள் படிக்கப்படும் வரை இந்த ஊகம் நிறுவப்படாத ஒன்றாகவே இருக்கும் என்றும் பிற ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.

வேதகாலகட்டம் (பொமு 15 ஆம் நூற்றாண்டு)

வேத காலகட்டத்தில் யோக மரபு ஏதோ ஒருவகையில் இருந்துள்ளது என்றும் வேதங்களில் யோக என்னும் சொல் உழுவது, ஆள்வது என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் யோக மரபின் புருஷன் என்னும் உருவகத்தின் முதன்மையான கவிதைவடிவமாக உள்ளது. புருஷன் என்னும் கருதுகோளின் இன்னொரு வடிவமான ஒரு மரக்கிளையில் இரு பறவைகள், ஒன்று பழம் தின்கிறது இன்னொன்று பார்த்திருக்கிறது என்னும் உருவகம் வேதங்களிலுள்ளது.

உபநிடத காலகட்டம் (பொமு 9 ஆம் நூற்றாண்டு)

ஐதரேயம், கதா உபநிடதம் போன்ற தொடக்ககால உபநிடதங்களிலேயே யோக முறை குறித்த விவரணைகள் உள்ளன.

பகவத்கீதை (பொமு 8 ஆம் நூற்றாண்டு )

பகவத் கீதை சாங்கிய தரிசனங்களை தன்னுள் இணைத்துக்கொண்டு தனக்கான முறையில் விளக்குகிறது. பகவத்கீதையின் அத்தியாயங்கள் யோகம் என விளக்கப்படுகின்றன. பரம்பொருளான கிருஷ்ணன் பரமபுருஷன், புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறான். கிருஷ்ணன் யோகத்திலமர்ந்தவன் என்றும், அர்ஜுனன் செயலூக்கம் கொண்டவன் என்றும் பகவத்கீதை கூறுவது வேதத்தின் இரு பறவைகள் உவமையின் இன்னொரு வடிவம்

பதஞ்சலி யோகசூத்திரம் (பொமு 4 ஆம் நூற்றாண்டு)

பதஞ்சலி யோக சூத்திரம் அதுவரையிலான யோகம் சார்ந்த எல்லா வழிமுறைகளையும் ஒருங்கிணைத்து, சாங்கிய தரிசனத்தின் பிரகிருதி -புருஷ தத்துவப்பார்வையை விரிவாக்கிக்கொண்டு யோகத்தை ஒரு வரையறுக்கப்பட்ட தரிசனமாகவும் வழிமுறையாகவும் ஆக்கியது.

சமணம், பௌத்தம் (பொமு 3 முதல்)

யோகம் சமணத்திலும் பௌத்ததிலும் ஏற்படைந்து அவர்களுடைய யோகமுறைமைகளாக வளர்ச்சி அடைந்தது. பௌத்தத்தில் யோகாசார மரபு உள்ளது. பௌத்ததிலுள்ள வஜ்ராயன மரபு யோகத்தையும், தாந்த்ரீக முறைமைகளையும் இணைத்துக்கொண்ட ஒன்று.

யோக பாஷ்யங்கள் (பொயு 9 முதல் )

ஈஸ்வர கிருஷ்ணரின் சாங்கிய காரிகை கபிலரின் சாங்கிய சூத்திரங்களின் விரிவாக்கம். அதன் பின் வியாசர், வாசஸ்பதி மிஸ்ரர், போஜராஜன், விக்ஞானபிக்ஷு என தொடர்ச்சியாக பதஞ்சலி யோகத்திற்கு உரை எழுதினர். இந்த உரைகளின் வழியாக யோகம் மெல்ல மெல்ல வேதாந்தம் மற்றும் இந்து மதப்பிரிவுகள் நோக்கி நகர்ந்தது.

இந்து மதப்பிரிவுகளில் இடம்பெறுதல் (பொயு 9 முதல்)

சைவ, வைணவ, சாக்த மதங்கள் பெருமதங்களாக நிலைபெற்றபோது அவற்றில் யோகம் குறிப்பிடத்தக்க இடம் பெற்றது.

சைவம்

சைவத்தில் பலவகையான யோக மரபுகள் முக்கியத்துவம் பெற்றன. சிவன் யோகீஸ்வரன் என்று அழைக்கப்பட்டார். தக்ஷிணாமூர்த்தி யோக வடிவில் அமர்ந்தவராக வழிபடப்பட்டார். சைவ ஆகமங்களில் யோகம் இணைக்கப்பட்டது.

வைணவம்

வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானஸம் இரண்டிலுமே யோகம் வழிபாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. பாஞ்சராத்ரத்தின் பஞ்சகால பிரகிரியைகளில் யோகம் உள்ளது. வைகானஸத்தின் நான்கு வழிபாடுகளில் (ஜபம், ஹூத, அர்ச்சனை, யோகம்) யோகம் உள்ளது. விஷ்ணு புருஷோத்தமன் என வழிபடப்பட்டார். யோக நரசிம்மர் போன்ற வழிபாட்டுருவங்கள் உருவாயின.

சாக்தம்

இந்துசாக்த மரபிலும் யோக முக்கியமான இடத்தை அடைந்தது. தேவியின் தோற்றம் யோகத்திலமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டது. இந்தியாவில் பல இடங்களில் 63 யோகினி ஆலயங்கள் உள்ளன.

பிற யோகங்களுடன் இணைப்பு (பொயு 10 முதல்)

பதஞ்சலி யோக முறையானது தனித்த பிற யோகமுறைகளாக நீடித்துவந்த ஹட யோகம் , வாசி யோகம், குண்டலினி யோகம் ஆகியவற்றுடன் உரையாடி அவற்றில் பலவற்றை ஏற்றுக்கொண்டது.

நவீன மறுமலர்ச்சி (பொயு 18 முதல்)

பொயு 18 க்குப்பின் யோகம் ஒரு ஆளுமைப் பயிற்சியாக மதங்களில் இருந்தும், சாங்கியத்தின் தரிசன அடிப்படையில் இருந்தும் விடுவிக்கப்பட்டு ஒரு தனித்த செயல்முறையாக மறுவரையறை செய்யப்பட்டது. உலகமெங்கும் ஏற்பு பெற்றது

யோகத்தின் நோக்கம்

பதஞ்சலியோகம் பற்றிய விரிவான ஆய்வுகளைச் செய்த டேவிட் கோர்டான் வைட் யோகமுறைமையின் அறுதி நோக்கம் என நான்கைக் குறிப்பிடுகிறார்

  • பயிற்சிகள் வழியாக தன்னுணர்வை மெல்ல மெல்ல இல்லாமலாக்கி, அதன் வழியாக அகத்தை அமைதியாக்கி இருத்தலின் துயர்களை வெல்லுதல். இந்த வழியானது பகவத் கீதையிலும் யோகசூத்திரங்களிலும் மகாயான பௌத்த நூல்களிலும் சமணநூல்களிலும் குறிப்பிடப்படுகிறது
  • பிரக்ஞையை விரிவாக்கி அனைத்து உயிர்களுடனும் அனைத்து இருப்புகளுடனும் இணைத்து முழுமைநோக்கி கொண்டுசெல்லுதல். இது மகாபாரதத்திலும் பிற வைதிக நூல்களிலும் பௌத்த நிகாயங்களிலும் கூறப்படுகிறது
  • பிரக்ஞையை தெளிவாக்கி நிலையற்றவை எவை நிலையானவை எவை என்னும் தன்னுணர்வை அடைதல். இதை நியாய வைசேஷிக நூல்களும் மகாயான பௌத்த நூல்களும் குறிப்பிடுகின்றன
  • தன் உடலே தான் என்னும் உணர்வில் இருந்து விடுபடுதல். பிற உடல்களிலும் பிரக்ஞை திகழ்தல். இவை பிற்கால இந்து, பௌத்த தாந்த்ரீக நூல்களில் குறிப்பிடப்படுகின்றன.

யோகத்தின் பிரிவுகள்

யோகத்தின் வழிமுறைகளை அவை பரிந்துரைக்கும் பயிற்சிகளின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம்.

உள்ளம் சார்ந்தவை

இருத்தல் என்பது உள்ளமே என நினைப்பவை இந்த மரபுகள். யோகம் என்பது உள்ளத்தை பயிற்றுவித்தல் என வரையறைச் செய்பவை. உள்ளத்தைப் பயிற்றுவிப்பதற்கு தேவையான அளவுக்கு உடலையும் பயிற்றுவிக்கின்றன. பதஞ்சலி யோகம் அதில் முதன்மையானது. வைதிக யோக முறைகளும், யோகாசார பௌத்த, சமண யோகமுறைகளும் இந்த வழிமுறைகொண்டவை.

உடல் சார்ந்தவை

உடலே இருப்புக்கு ஆதாரம் என நினைப்பவை இம்மரபுகள். இவை உடலைப் பயிற்றுவித்து, உடல்வழியாகவே முழுமையான ஞானத்தையும் விடுதலையையும் அடையமுடியுமென வரையறை செய்கின்றன. ஹடயோகம், வாசியோகம், குண்டலினி யோகம் போன்றவை இவ்வகையானவை.

பயன்பாடுகள்

உசாத்துணை