first review completed

நம்பியகப்பொருள்

From Tamil Wiki

நம்பியகப்பொருள் (பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தின் அகத்திணையையை விளக்கிக் கூறும் நூல். அகப்பொருள் இலக்கணத்துக்கென்று உள்ள ஒரு தனிப்பெரும் நூல். 'அகப்பொருள் விளக்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இலக்கண விளக்கம் அகப்பொருள் இலக்கணம் கூறும்போது பெரிதும் இந்நூலின் நூற்பாக்களைக் கொண்டே இலக்கணம் வகுத்தது.

ஆசிரியர்

நம்பியகப்பொருளின் ஆசிரியர் நாற்கவிராசநம்பி. இவர் புளிங்குடி என்ற ஊரைச்சேர்ந்த உய்யவந்தான் என்வரின் மகன். சமண சமயத்தவர். நம்பி என்பது இயற்பெயர். தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். ஆசுகவி - மதுரகவி - சித்திரக்கவி - வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் உடையவராதலால் ‘நாற்கவிராசன்’ எனப் பெயர் பெற்றார்.

இந்நூல் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றப்பட்டது.

நூல் அமைப்பு

நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு 'அகப்பொருள் விளக்கம்' என்று பெயரிட்டுள்ளார். இந்நூலுக்கு பழைய உரை உள்ளது. இவரே நூலுக்கு உரையும் எழுதியுள்ளார் என்றும் உரையை எழுதியவர் பிற்காலத்தவர் எனவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. தமது உரையில் பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைச் செய்யுள்கள் உதாரணம் காட்டப்பட்டதால் அப்பகுதிகள் பிற்சேர்க்கையாகவோ இருக்கலாம் அல்லது முழு உரையும் பிற்காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்நூல் சிறப்புப்பாயிரத்தோடு தொடங்குகிறது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் 5 பகுதிகளில் 252 நூற்பாக்களைக் கொண்டது.

நாற்கவிராச நம்பி தொல்காப்பியத்துள் விரித்துக் கூறிய அகப்பொருள் இலக்கணத்தைச் சுருக்கியும், இறையனார் களவியலுரை கூறியவற்றை விரித்தும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டிய செய்யுட்களைத் தழுவியும் , இறையனார் களவியலுரையில் வரும் பாண்டிக் கோவை , திருக்கோவை முதலிய கோவை நூல்களின் நாடக அமைப்பினைக் கொண்டும் இந்நூலை எழுதினார். தொல்காப்பியம் கூற்று அடிப்படையில் அகப்பொருள் இலக்கத்தைக் கூறுகிறது. நம்பியகப்பொருள் அக்கூற்றுக்களைத் துறைப்படுத்திக் கதை நிகழ்ச்சி போல கோவை செய்து கிளவித்தொகை, வகை, விரி என மூவகையாக வகுத்துரைத்துள்ளது; அதுவே இந்நூலின் புதுமை. அகப்பொருள் துறைகளாகிய கிளவிகள் தொகை, விரி என்னும் யாப்பினால் கூறப் பெற்றுள்ன.

நம்பியகப்பொருள் களவுக்கும் கற்புக்குமிடையே வரைவியல் என ஓரியியலையும் வகுக்கிறது.

அகத்திணையியல் (116 பாடல்கள்)
  • கைக்கிளை, பெருந்திணை ஆகியவை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
  • பெரும்பொழுது, சிறுபொழுது - தொல்காப்பியம் 6 பெரும்பொழுதுகளையும் 6 சிறுபொழுதுகளையும் கூறும். நம்பியகப்பொருள் ஆறு பெரும்பொழுதுகளையும், 12 சிறுபொழுதுகளையும் கூறுகிறது
  • கருப்பொருள் -தொல்காப்பியம் எட்டுவகைக் கருப்பொருள்களை கூறுகிறது. இதர கருப்பொருள்களும் இருக்கலாம் என்ற தொல்காப்பியத்தின் கூற்றைத்தழுவி, கருப்பொருள் வகை பதினான்கென விரித்து மேலும் ஒவ்வொரு திணைக்கும் தனி நூற்பாவில் கருப்பொருள்கள் தொகுத்துரைக்கப்படுகின்றன
  • அறத்தொடு நிற்றல்-13 நூற்பாக்களில் நிற்றல் நிகழுமிடம், நிற்றற்குரியர், நிற்கும்நெறி, தலைமகள் , பாங்கி , செவிலி , நற்றாய் முதலியோர் அறத்தொடு நிற்கும் திறம் , உடன் போக்கில் அறத்தொடு நிற்றற்குரியர் யார் ? அறத்தொடு நிற்றலின் வகை இவை கூறப்படுகின்றன.
  • கற்பின் வகை: நம்பியகப்பொருள் கற்பினைக் களவின் வழிவந்த கற்பு , களவின் வழிவாராக் கற்பு என இருவகைப் படுத்துகிறது
  • பிரிவு- களவிற்குரியன இவைம் கற்பிற்குரியன இவையென பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டன.
  • வாயில்கள்- 14 வாயில்கள் விவரிக்கப்படுகின்றன(தொல்காப்பியத்தில் 12 வாயில்கள்)
  • பரத்தயரைக் காமக்கிழத்தியர், காதற்பரத்தையர் எனப் பிரித்துக்கொண்டு அவர்களுக்குரிய இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன
களவியல் (54 பாடல்கள்)

தொல்காப்பியமும், இறையனார் அகப்பொருளும் களவிற்குரிய இலக்கணத்தை மட்டும் வகுத்தன. நம்பியகப்பொருள் பதினேழு கிளவித்தொகைகள் எடுத்துக் காட்டப்படுகிறன (123). நம்பியார் கூறிய கிளவித்தொகைகளில் சில தொல்காப்பியத்தில் கூற்று வகைகளாகச் சுட்டப்பட்டுள்ளன எனினும் விரித்தும் தொகுத்தும் நம்பியகப்பொருள் கூறுகிறது

வரைவியல் (29 பாடல்கள்)

தொல்காப்பியர் அகப்பொருளை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்ற நான்கு இயல்களிலும், இறையனார் களவியல்,கற்பியல் என்ற ஈரியல்களிலும் வகுத்தனர். நம்பியகப்பொருள் களவுக்கும் கற்புக்குமிடையே வரைவியல் எனப் புதிய இயலொன்றை வகுத்தது. இவ்வியல் கற்பென்னும் கைகோளின் நிமித்தமாகிய வரைந்து கோடலின் இயல்பினைத் தனியே விவரிப்பதால் வரைவியல் எனப் பெயர் பெற்றது.

கற்பியல் (10 பாடல்கள்)

தொல்காப்பியம் "கற்பெனப் படுவது கரணமொடு புணர(140) "என்ற நூற்பாவில் வதுவைச் சடங்கே கற்பெனக் கூற , நம்பியார் இல்வாழ்க்கைக்கு முதன்மை தந்து இல்வாழ்க்கையைக் கற்பிற்குரிய கிளவித்தொகைகள் ஏழனுள் ஒன்றாகச் சுட்டியுள்ளார் . இல்வாழ்க்கையை நான்காக வகைப் படுத்திப் பத்தாக விரிவு படுத்தியுள்ளார் . இவ்விரிவு இல்வாழ்வு பற்றிய முழு ஓவியமாக அமைகிறது.

ஒழிபியல் (43 பாடல்கள்)

தொல்காப்பியர் செய்யுளியலில் செய்யுளுக்குரிய உறுப்புக்கள் 34 என வகுத்தார். அவற்றுள் திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை என்ற பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்புகளைக் கொண்டு அவற்றின் விரிவை ஒழிபியலாக விளக்கியுள்ளார் நம்பிராசக் கவிராயர்.

பாடல் நடை

களவிற்குரிய கிளவித் தொகைகள்

இயற்கைப் புணர்ச்சி வன்புறை தெளிவே
பிரிவுழி மகிழ்ச்சி பிரிவுழிக் கலங்கல்
இடந்தலைப் பாடு பாங்கற் கூட்டம்
பாங்கிமதி யுடம்பாடு பாங்கியிற் கூட்டம்
பாங்கமை பகற்குறி பகற்குறி யிடையீடு
இரவுக் குறியே இரவுக்குறி யிடையீடு
வரைவு வேட்கை வரைவு கடாதல்
ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்வயிற் பிரிதல்என் றொருபதினேழுங்
களவிற் குரிய கிளவித் தொகையே. (123)

கற்பில் தலைமகளுக்குரிய ஒழுகலாறு

பூத்தமை சேடியிற் புரவலர் குணர்த்தலும்

நீத்தமை பொறாது நின்றுகிழ வோனைப்
 பழிக்குங் காமக் கிழத்தியைக் கழறலும்
 கிழவோர் கழறலும் வழிமுறை மனைவியைக்
 கொழுநெனொடு வந்தெதிர் கோடலும் அவனொடு
பாங்கொடு பரத்தையைப் பழித்தலும் நீங்கிப்
புறநகர்க் கணவனொடு போகிச் செறிமலர்ச்
சோலையுங் காவும் மாலையங் கழனியும்
மாலைவெள் ளருவியும் மலையுங் கானமும்
கண்டுவிளை யாடலும் கடும்புனல் யாறும்
 வண்டிமிர் கமல வாவியும் குளனும்
ஆடிவிளை யாடலுங் கூடுங்கிழத்திக்கு

உசாத்துணை

நம்பியகப்பொருள், தமிழ் இணைய கல்விக் கழகப் பாடம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.