under review

விவேகசுந்தரம்

From Tamil Wiki
விவேகசுந்தரம் இதழ் - 1887

விவேகசுந்தரம் (1887- ) தமிழில் 19-ம் நூற்றாண்டில் வெளிவந்த மாத இதழ். ’ஆத்ம போதன ரஞ்சனி சீரிஸ் – 1’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த இதழின் ஆசிரியர், வெளியீட்டாளர் எஸ். நமசிவாய செட்டி.

பதிப்பு, வெளியீடு

1887ல் விவேகசுந்தரம் முதல் இதழ் வெளிவந்தது. இதன் ஆசிரியரும் வெளியீட்டாளருமாக இருந்தவர் எஸ்.நமசிவாய செட்டி.

'ஜனோபகாரமாகப் பலருக்கும் பயன்படும்படி பிரசுரம் செய்யப்பட்டது’ என்கிறது இதழின் முகப்பு அட்டை. விலை: மூன்று பைசா. பக்கங்கள்: 12. சென்னை ரிப்பன் பிரஸ் அச்சக்கத்தில் இந்த இதழ் அச்சிடப்பட்டிருக்கிறது.

இதழின் பெயர்க் காரணம்

இதழுக்குச் சூட்டிய 'விவேகசுந்தரம்’ என்ற பெயருக்குக் காரணமாக பின்வருவதைக் குறிப்பிடுகிறார் நமசிவாயச் செட்டி. "ஆற்றலுடையளாய், புறத்தும் அகத்தும் சுத்தமாயும் தூயதாயும் இருக்கும் அதிவிசிஷ்ட இலாவண்ணியமுடைய 'விவேகசுந்தரம்' என்னும் பெண்ணானவள், இத்தமிழ்மொழி வழங்கு நிலத்திலே வசிக்கின்ற வயசிற் சிறியோரும் முதியோருமாகிய எல்லோருக்கும் இப்புஸ்தகவடிவமாக நின்று உண்மைபோதிக்கும் தொழிலை மேற்கொண்டமையால், ’விவேகசுந்தரம்' என்னும் பெயர் இப்புத்தகத்துக்கு அடையடுத்த இருமடியாகுபெயராய் நின்றவாறு காண்க" என்கிறார்.

இதழின் நோக்கம்

இதழின் நோக்கம் பற்றி, "இப்புத்தகத்தில் எழுதும் விஷயங்கள் இந்து புருடர்களுக்கும், ஸ்திரீகளுக்கும் உபயோகமாய் இருக்கும் . இதற்கு யாராவது பொது விஷயமாக எழுதியனுப்புவார்களாயின் அதையங்கீகரித்துப் பதிப்பிக்கப்படும். எழுதும் கல்விமான்கள் தூஷணையின்றிச் சொற்சுவை பொருட்சுவை தோன்ற எளிய நடையில் காகிதத்தின் ஓர்பக்கத்தில் எழுதியனுப்புவார்களென்று கோருகின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

நிறுத்தம்

எவ்வளவு வருடங்கள் இந்த இதழ் வெளிவந்தது என்ற தகவல்கள் கிடைக்கவில்லை

இதழின் உள்ளடக்கம்

உள்ளடக்கம்

இதழின் முகப்பில், 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்ற குறளும், ’கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற குறளும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு இதழிலும் திருக்குறளும், 'நீதி வாக்கியங்கள்’ என்ற பகுதியும் இடம்பெற்றுள்ளது.

பெண் கல்வி இன்றியமையாமை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. வீண் செலவுகளைக் குறைத்துக் குடும்பம் நடத்த வேண்டும் என்ற செய்திகளும் இடம் பெற்றுள்ளன. சிறுசிறு கதைகள், கட்டுரைகள்,பெண் திருமணம், கற்பு, நீதி, மருத்துவ ஆலோசனைகள், சுகாதாரம், சமையல் குறிப்புகள், குழந்தைகளுக்கான அறிவுரைகள், பாலர்களுக்கான கதைகள் போன்றவை இவ்விதழில் இடம் பெற்றிருக்கின்றன. தாசிகளின் செயல்களைப் பற்றிக் கடும் கண்டனங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

உலக்கை பூஜை செய்த உண்ணாமுலையின் கதை, கணவனைக் கொன்ற கங்காமணியின் கதை, இரசவாதிகளை நம்பி மோசம் போன தியாகராஜச் செட்டியார் கதை, சித்திரக்குள்ளன் கதை, விநோதக் கதை போன்ற தலைப்புகளில் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுகதைகளில் எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இலக்கிய இடம்

தமிழின் தொடக்ககால இதழ்களில் ஒன்று. பல்சுவை இதழ் என்பதன் முதல்வடிவம். ஐரோப்பாவில் நிலைகொண்டுவிட்ட பல்சுவை அச்சிதழ் என்னும் வடிவம் தமிழ்ச்சூழலில் இங்கு ஏற்கனவே இருந்துவந்த நீதிபோதனை மரபு, வாய்மொழிக்கதை மரபு ஆகியவற்றுடன் இணைந்து தனக்கென தனி வடிவம் எடுப்பதை இவ்விதழ் காட்டுகிறது.

இவ்விதழில் வெளியான சிறியகதைகள் கவனத்துக்குரியவை. நீதிபோதனைகளாகவும், வெறும் சம்பவ விவரிப்பாகவும் இருக்கும் இவற்றைச் சிறுகதைகளுக்கான ஆரம்ப கால முயற்சிகள் என்று மதிப்பிடலாம்.

ஆவணம்

தமிழ் இணைய நூலகத்தில் 'விவேகசுந்தரம்’ இதழ் சேமிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

தமிழ் இணைய நூலகம்:விவேகசுந்தரம் இதழ்


✅Finalised Page