under review

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே

From Tamil Wiki
வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே (டபிள்யூ. டி. ரிங்கல்தௌபே; ரிங்கல்தௌபே) (William Tobias Ringeltaube; W.T. Ringeltaube) (ஆகஸ்ட் 8, 1770 - செப்டம்பர் 27, 1816) தென்னிந்தியாவுக்கு வந்த முதல் புரொட்டஸ்டண்ட் மிஷனரி. திருவிதாங்கூர் மற்றும் கன்னியாகுமரியில் கல்வி மற்றும் மதப்பணி ஆற்றினார். 1809-ல், மைலாடியில், தென் திருவிதாங்கூரின் முதல் புரொட்டஸ்டண்ட் சபையை நிர்மாணித்தார். 1809-ல், மைலாடியில், தென் திருவிதாங்கூரின் முதல் ஆங்கிலப் பள்ளியை, நிறுவினார்.

பிறப்பு, கல்வி

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, ஆகஸ்ட் 8, 1770-ல், ஜெர்மனியில் சிலேசியாவின் ப்ரெசெக்கிற்கு (Brzeg) அருகில் உள்ள ஷில்டிவிட்ஸில் (Scheidelwit - இன்று Szydlowice), காட்லிப் ரிங்கல்தௌபே (Gottlieb Ringeltaube) என்பவருக்குப் பிறந்தார். தந்தை லுத்தரன் சபையைச் சேர்ந்த போதகர். ரிங்கல்தௌபே, பிறந்த ஐந்தாம் நாளிலேயே ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டார். பள்ளிக்கல்வியை ஷில்டிவிட்ஸில் கற்றார். மேல்நிலைக்கல்வியை போலந்தின் வார்சாவில் படித்தார். ஜெர்மனியில் உள்ள மார்டின் லூதர் ஹாலே யூனிவர்சிட்டியில் (Martin Luther University Halle) மேற்கல்வி பயின்று பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, கிறிஸ்தவ மத ஊழியராக மதப்பணி ஆற்றினார். மணம் செய்துகொள்ளவில்லை.

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே நிர்மாணித்த தென் திருவிதாங்கூரின் முதல் தேவாலய நுழைவு வாயில்
வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே நிர்மாணித்த தென் திருவிதாங்கூரின் முதல் தேவாலயம்

மதப்பணிகள்

தொடக்கம்

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, 1796-ல், வெர்னிகெரோடில் லூத்தரன் சடங்குகளின்படி கிறிஸ்தவ ஊழியராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் மதப்பணியாற்றினார்.

இந்தியாவில் மதப்பணிகள்

ரிங்கல்தௌபே 1797-ல் இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் மதப்பணிகளை மேற்கொண்டார். 1799-ல், மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். 1803-ல் லண்டன் மிஷனரி சொசைட்டியால் இந்தியாவிற்கு மிஷனரி ஆக அனுப்பி வைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில்

1803-ல், தரங்கம்பாடிக்கு வந்த ரிங்கல்தௌபே, டேனிஷ் மிஷனரிகளுடன் தங்கி தமிழ் மொழியைக் கற்றார். பின் பாளையங்கோட்டையில் தனது மதப்பணியை ஆரம்பித்தார். சக மிஷனரிகளாலும், மக்களாலும் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

மைலாடியில் வசித்த மகாராஜன் வேதமாணிக்கம், வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபேயைச் சந்தித்ததுடன் திருவிதாங்கூருக்கு வந்து மதப்பணி ஆற்றுமாறு கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட ரிங்கல்தௌபே, கர்னல் மக்காலேயின் அனுமதி பெற்றுத் திருவிதாங்கூருக்குச் சென்றார். மகாராஜன் வேதமாணிக்கத்தின் உறுதுணையுடன் மைலாடியில் இருந்து தனது மதப்பணிகளைத் தொடர்ந்தார்.

திருவிதாங்கூரில்

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, மைலாடியில் பல மதப்பணிகளை மேற்கொண்டார். ஆனால், திருவிதாங்கூர் அரசின் திவான் வேலுத் தம்பியின் எதிர்ப்பால் பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். திவான் வேலுத்தம்பியின் மறைவிற்கு பின்னர் 1809-ல் மைலாடியில் முதல் புரொட்டஸ்டண்ட் சபையை நிர்மாணித்தார். ஜாதியின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து பல சபைகளை ஏற்படுத்தினார். தேவாலயங்களை நிர்மாணித்தார். பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகப் பல பணிகளை மேற்கொண்டார்.

தனது சொந்தப் பணத்திலிருந்து ஆதரவற்ற மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றை வழங்கி ஆதரித்தார். பலரை கிறித்தவ மதத்திற்கு மாற்றினார்.

சபைகள்

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபேயின் முயற்சியால், கன்னியாகுமரியில் உள்ள மைலாடி, தெற்கு தாமரைக்குளம், புத்தளம், ஆத்திக்காடு, கோவில் விளை, ஜேம்ஸ் டவுன், சீயோனிபுரம், பேரின்பபுரம், அனந்த நாடான் குடியிருப்பு, ஈத்தாமொழி ஆகிய இடங்களில் கிறித்தவ சபைகள், தேவாலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தென் திருவிதாங்கூரின் முதல் ஆங்கிலப் பள்ளி
றிங்கல் தௌபே மேல்நிலைப்பள்ளி- மயிலாடி.
முதல் ஆங்கிலப் பள்ளி

கல்விப் பணிகள்

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, தேவாலயங்கள் மற்றும் சபைகளோடு, மக்கள் கல்வி கற்பதற்காகச் சில பள்ளிகளையும் உருவாக்கினார். 1809-ல், மைலாடியில் ஆங்கிலப் பள்ளி ஒன்றை நிர்மாணித்தார். இப்பள்ளி தமிழ்நாட்டின் முதல் ஆங்கிலப் பள்ளியாகக் கருதப்படுகிறது. இப்பள்ளிக்கு ரிங்கல்தௌபேவின் நினைவாக, “றிங்கல்தௌபே மேல்நிலைப்பள்ளி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

தஞ்சாவூர் மிஷனரிகள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினர். பழமைவாத மக்களில் சிலர் புதிய கல்வி முறையைத் தொடக்கத்தில் எதிர்த்தாலும், நாளடைவில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, புராட்டஸ்டன்ட் மிஷனரி கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்காக மொத்தம் ஆறு பள்ளிகளை நிர்மாணித்தார்.

கர்னல். மக்காலே, வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே தனது மிஷனரிப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்காகத் தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்தார். சுவிசேஷ நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டதை விட அதிகமாகக் கல்வி நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கினார்.

மறைவு

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே மிகவும் எளிமையான வாழ்வை மேற்கொண்டார். கல்லீரல் பாதிப்பால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். 1816-ல், சிகிச்சைகாகச் சொந்த நாடு திரும்பக் கப்பலில் பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் நாடு திரும்பவில்லை.

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, கப்பலிலேயே மரணம் அடைந்தார் என்றும், ஜகார்த்தா (அன்று படாவியா) பயணத்தின் போது அங்குள்ள பூர்வீக மக்களால் கொல்லப்பட்டார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

நினைவு

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, 1811-ல், திருவனந்தபுரத்தில் உள்ள வலியத்துறைக்கு அருகில் ஓர் தேவாலயத்தை நிறுவினார். அது இப்போது ‘ரிங்கல் தௌபே நினைவு சி.எஸ்.ஐ. தேவாலயம்’ என்று அழைக்கப்படுகிறது. மைலாடியில் அவர் நிர்மாணித்த தேவாலயம், ‘ரிங்கல்தௌபே வேதமாணிக்கம் தேவாலயம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

மதிப்பீடு

வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே, ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவராக அறியப்படுகிறார். மைலாடி வாழ் மக்களின் வாழ்வில் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். வீரமாமுனிவருக்குப் பின் தென்னிந்தியா வந்து மதம் மற்றும் கல்விப் பணிகளை மேற்கொண்டவர்களுள் முக்கியமானவராக, வில்லியம் டொபியாஸ் ரிங்கல்தௌபே மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 14:07:03 IST