வா.மு. சேதுராமன்
வா.மு. சேதுராமன் ( 9 பெப்ரவரி 1935 - 4 ஜுலை 2025) தமிழறிஞர். மரபுக்கவிஞர்.தமிழியக்க களச்செயல்பாட்டாளர். பெருங்கவிக்கோ என்னும் அடைமொழியால் அறியப்பட்டார். தமிழின் தனித்தன்மைக்காகவும் சர்வதேசத் தமிழியக்கச் செயல்பாடுகளுக்காகவும் போராடியவர். பன்னாட்டுத் தமிழ் உறவு என்னும் அமைப்பை நடத்திவந்தார்.
பிறப்பு, கல்வி
வா.மு.சேதுராமன் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் 9 பெப்ரவரி 1935-ல் பிறந்தார். தமிழ் வித்வான் தேர்வில் வென்றார். பயிற்றியலில் பட்டமும், தமிழில் முதுகலைப்பட்டமும் பெற்றார். சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
வா.மு.சேதுராமன் திருவல்லிக்கேணி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
வா.மு.சேதுராமனின் மனைவி சேதுமதி. இவர்களுக்கு வா.மு.சே. திருவள்ளுவர், வா.மு.சே.கவியரசன், வா.மு.சே .முத்துராமலிங்க ஆண்டவர் , வா.மு.சே.தமிழ்மணிகண்டன், ஆகிய மகன்களும் வா.மு.சே.பூங்கொடி என்னும் மகளும் உள்ளனர். திருவள்ளுவர், முத்துராமலிங்க ஆண்டவர் இருவரும் தமிழறிஞர்கள்.
இலக்கியப்பணி
மரபுக்கவிதைகள் எழுதி வந்த சேதுராமன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான செய்யுட்களை எழுதியவர் என்று சொல்லப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளாக அவை வெளியாகியுள்ளன. ஐயப்பன் பாமாலை, நெஞ்சத்தோட்டம், தமிழ் முழக்கம் போன்ற கவிதைத் தொகுதிகள் குறிப்பிடத்தக்கவை. தாய்மண் என்னும் காவியத்தையும் எழுதியுள்ளார். சேது காப்பியம் வா.மு.சேதுராமன் எழுதிய பல பகுதிகள் கொண்ட நீள்காவியம். சேதுராமனின் தனிவாழ்க்கையையும் தமிழக அரசியலையும் இணைத்து எழுதப்பட்ட இந்தப் படைப்பு முடிவுறவில்லை.
நடை
தென்னையிளங் கீற்றினிலே தெய்வம் காண்பேன்:
சிறுமையிலா அருமையிலே தெய்வம் காண்பேன்!
புன்னை மரச் சோலையிலே பூக்கும் வையப்
பொழிலெல்லாம் தெய்வத்தைக் காண்பேன்! நன்றாய்
என்னைநான் எண்ணித்தான் பார்க்கும் போதென்
இதயத்தில் தெய்வத்தைக் காண்பேன்! ஒப்பில்
அன்னைமொழி எழுத்தில் நல் எழுது கோலில்
அகிலம் உள் அனைத்திலுமே தெய்வம் காண்பேன்!
அமைப்புப் பணிகள்
வா.மு. சேதுராமன் பன்னாட்டு தமிழுறவு மன்றம் என்னும் அமைப்பை நிறுவி உலகளாவிய தமிழ் செயல்பாடுகளை முன்னெடுத்தார்.
இதழியல்
வா.மு.சேதுராமன் தமிழ்ப்பணி என்னும் சிற்றிதழை 1967 முதல் தொடர்ச்சியாக நடத்திவந்தார்.
பட்டங்கள், விருதுகள்
- பெருங்கவிக்கோ
- செந்தமிழ்க் கவிமணி
- கலைமாமணி 1990
- திருவள்ளுவர் விருது 2001
- சி.பா. ஆதித்தனார் விருது 2015
விமர்சனம்
வல்லிக்கண்ணன் வா.மு.சேதுராமன் பற்றி ஆற்றல்மிகுந்த அருங்கவிஞர் என்னும் நூலை 1994ல் எழுதியுள்ளார்
மறைவு
வா.மு.சேதுராமன் 4 ஜூலை 2025 அன்று மறைந்தார்.
இலக்கிய இடம்
வா.மு.சேதுராமன் மரபுக்கவிதைகளை எழுதி மரபுக்கவிதை இயக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தவர். உலகளாவிய தளத்தில் தமிழ் வளர்ச்சிச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தவர். தமிழியக்கம் சார்ந்த அரசியல்நோக்கை முன்வைத்தவர்.
நூல்கள்
- நெஞ்சத்தோட்டம்
- தாயுமானவர் அந்தாதி
- ஐயப்பன் பாமாலை
- தமிழ் முழக்கம்
- வாழ்க நீ எம்மான் (காந்தி பற்றிய பன்மொழிக் கவிதை)
- எண்ணச்சுடர் (கவியரங்கக் கவிதைகள்)
- தாய்மண் (காவியம்)
- 20 கட்டளைகள் (இந்திராகாந்தி )
- ஐயப்பன் ஆற்றுப்படை
- உலகை உயர்த்திய ஒருவன்
- பற்றிலான் பற்று
- மலைநாட்டின் மீதினிலே (பயணக் காவியம்)
- காலக்கனி (கவிதை நாடகம்)
- சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்)
- இயேசு அந்தாதி
- கலைஞர் காவியம்
- நற்றமிழோங்கு நடைபயணம்
- மனைவிக்கு
- திருக்குறள் செம்மொழி உரை
- தமிழ் ஈழப்பணியில் பெருங்கவிக்கோ
- சிந்தனைச்சுடர்
- ஐங்கண்ட கவியமுதம்
- உன்னை நம்பு உன்கை
- பெருங்கவிக்கோவின் கவியாளுமைத் திறன்
- தமிழ் எங்கள் புகழ்மிக்க புலவர்க்கு வேல்
- ஆயிரம் வாசல்
- விடுதலைச்சுவடுகள்
- கவிதைக்கதிரோன்
- தமிழ் நூல்களில் கவிதை பற்றி கருத்துகளும் கற்பனைகளும்
- உலகக் கவிஞனின் அறைகூவல்
- சந்தித்தேன் சிந்தித்தேன்
- அமெரிக்காவில் பெருங்கவிக்கோ
- காலம் சொல்லும் கவிதைகள்
- கவியஞ்சலி
- பறந்த போதினிலே பிறந்த கவிமகளே
- இருபது கட்டளைகள்
- இருண்ட மேகங்கள்
- பண் தேடும் பாடல்கள்
- எழுதுகோலே உனக்கு ஓர் எச்சரிக்கை
- விடிந்தால் விடுதலை
- வைகறை வரும்
- ஐயப்பன் அருளமுதம்
- கெய்ரோவில் பெருங்கவிக்கோ
- துருக்கியில் பெருங்கவிக்கோ
- இஸ்ரேலில் பெருங்கவிக்கோ
- உலக உலா
- கோலாலம்பூர் மகாமாரியம்மன் பிள்ளைத்தமிழ்
- கௌதமரின் கண்ணீர்
- திருச்சிற்றம்பல திருவந்தாதி
- ஐயப்பன் சாது குருசாமிகள் பாமாலை
- தராசு செவ்சென்கோ கவிதைகள்
- தமிழ்நடைப்பாவை
- மண்ணில் விழுந்த மழைத்துளிகள்
- பன்மணி ஒலிகள்
- உணர்வின் ஊற்று
- அரங்கம் கண்ட தமிழ்ச்சுரங்கம்
- வெற்றிமகள்
- புதியபாதை
- கவிதைமழை
- அகமுகவாழ்வு
உசாத்துணை
- வா.மு.சேதுராமன் மறைவு- தினமணி செய்தி
- வா.மு.சேதுராமன் குறிப்பு கவிதை இணையப்பக்கம்
- தமிழ்ப்பணி இணையப்பக்கம்
- வா.மு.சேதுராமன் உரை
- ஆதித்தனார் விருது வா.மு சேதுராமனுக்கு
- சேது காப்பியம் விமர்சனம் ரவி
- ஆற்றல்மிக்க அருங்கவிஞர் வல்லிக்கண்ணன். இணையப்பல்கலைக்கழகம்
- வாமுசேதுராமன் அறிஞர்கள் இணையதளம்
- அகரமுதல இணையப்பக்கம் வாமுசே
- பெருங்கவிக்கோ நூல்பட்டியல் மரினா புக்ஸ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2025, 19:36:32 IST