வர்மக் கலை
வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகள் பற்றிய அறிவை மையமாகக் கொண்ட ஒரு தற்காப்புக் கலை. ஒர் அரிய மருத்துவக் கலையாகவும் அறியப்படுகிறது.
வர்மக் கலை விளக்கம்
வர்மம் என்பது மர்மம் என்றும் வழங்கப்படுகிறது. எளிதாக எல்லோரும் உணர இயலாத சில மர்மநிலைகள் மனித உடலில் உள்ளன. அவை எங்கெங்கு இருக்கின்றன என்பது பலரும் அறிய இயலாமல் மர்மமாக உள்ளதால் அது மர்மம் என்று குறிப்பிடப்பட்டது. உயிர்க்காற்று தங்குமிடமே வர்மம் என்றழைக்கப்பட்டது. ஒடிவு, முறிவு, கருவி, பேசி, பொருத்து, ஈடு, காலம் போன்ற பெயர்களிலும் வர்மம் அழைக்கப்படுகிறது.
உடலிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், மூட்டுகள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து நிற்கின்ற இடங்கள் பல. இவ்விடங்களே வர்மப் பகுதிகளாகக் குறிக்கப்படுகின்றன. 'உயிர்நிலை' என்றும் இவை அழைக்கப்படுகின்றன. உடலின் உள்ளே அடிபடும்போது வெளியில் அறியும் வகையில் காயமோ, வீக்கமோ தெரிவதில்லை என்பதால் இவை மர்மமாகக் கொள்ளப்பட்டன. உடலின். சில குறிப்பிட்ட நரம்பு போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் அடித்தல், தட்டுதல் அல்லது தடவுதலால் அம்மனிதன் உணர்விழப்பான். அவ்வாறு தட்டுதல் அல்லது அடித்தலே வர்மம். இவ்வாறு பிறரால் எளிதில் அறிய இயலாத மறைவான பகுதிகளில் தாக்கி ஒருவரை உணர்விழக்கச் செய்வதே வர்மக்கலை.
இக்கலை எதிரிகளைத் தாக்குவதற்கு மட்டுமல்லாமல், வர்மத் தாக்குதல்களுக்கு ஆளானவர்களுக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றுவதற்கும், எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் தற்காப்புக்கலையாகவும் பயிற்றுவிக்கப்பட்டது.
வர்மக்கலைப் பிரிவுகள்
வர்மக்கலை படு வர்மம், தொடு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் 37, நெஞ்சுப் பகுதியில் 13, உடலின் முன் பகுதியில் 15, முதுகுப் பகுதியில் 10, கைகளின் முன் பக்கத்தில் 9, கைகளின் பின் பக்கத்தில் 8, கால்களின் முன்பக்கத்தில் 19, கால்களின் பின்பக்கத்தில் 13, கீழ்முதுகுப் பகுதியில் 8 என உடலின் 132 இடங்களில் வர்மப் புள்ளிகள் உள்ளன. இப்புள்ளிகளை எந்த வகையான நோய்க்கு அல்லது பாதிப்பிற்கு எங்கு, எவ்வாறு தொட்டு குணமாக்க வேண்டும் என்பதை வர்மக் கலை நூல்கள் விளக்கியுள்ளன.
படு வர்மம்
மர்மப் பகுதிகளில் அடியோ, இடியோ, தாக்கோ படுமானால் ஏற்படும் வர்மமே படுவர்மம். 'படு' என்ற சொல், அதிகம், வேகம் என்ற பொருளையும் குறிக்கும். படுவர்மப் பகுதிகளில் அடி, இடி கொண்டதானால் அதிகம் ஆபத்துக்கள் ஏற்படும். படு வர்மம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வர்மமாக அறியப்படுகிறது. படுவர்மங்கள் மொத்தம் 12.
தொடு வர்மம்
எதிராளியைத் தொட்டு, அவரது உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட வர்மப்புள்ளியை அழுத்துவதன் மூலம் அவரை வீழ்த்த முடியும். இதுவே தொடு வர்மம் எனப்படுகிறது. தொடு வர்மத்தால் சிறு செயலிழப்பு இருக்குமே தவிர, பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. 'தொடு வர்மம்' உடலில் 96 இடங்களில் உள்ளது.
தட்டு வர்மம்
மனித உடலில் மறைமுகமான வர்மப் புள்ளிகளில் உள்ளங்கை தட்டு, முன்கால்படம், பக்கவாட்டு கால்படம், குதிக்கால் தட்டு, புறங்கால் தட்டு ஆகிய முறைகளில் தாக்குதல் நிகழ்த்துவது தட்டு வர்மமாகும். இந்த முறையில் தாக்குதல் நிகழ்த்தும்போது, வர்மப் புள்ளிகளில் அதிர்வை ஏற்படுத்தி அவற்றை உடல் முழுதும் பரவச் செய்யமுடியும். எதிராளி உடலின் வர்மப் புள்ளிகளில் தட்டித் தாக்குதல் நிகழ்த்துவதால் இது 'தட்டு வர்மம்' என அழைக்கப்பட்டது.
நோக்கு வர்மம்
எதிராளிகள் பலர் ஒன்று சேர்ந்து தாக்கவரும் போது அவர்கள் மீது பார்வையை ஒரே இடத்தில் செலுத்தி அதன் மூலம் அவர்களைச் செயலவற்றவர்களாக்குவதும், நினைவிழக்க வைப்பதும், மேலும் பல விளைவுகளை உண்டாக்குவதுமே நோக்கு வர்மம். தனது பார்வைத்திறன் மூலம் எதிராளிகளின் எண்ணத்தைக் கட்டுப்படுத்தி அவர்களைச் செயலற்றவர்கள் ஆக்குவதே நோக்கு வர்மம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கத்திய முறைகளாக அறியப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் போன்றவற்றுக்கு முன்னோடியாக நோக்கு வர்மம் அறியப்படுகிறது. இது 'மெய் தீண்டாக் கலை' என்றும் அழைக்கப்படுகிறது. பூரணமாகக் கற்றறிந்த வர்ம ஆசான் ஒருவரால் இருந்த இடத்தில் இருந்தபடியே பிறர் மீது பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
பிற வர்மப் பிரிவுகள்
வர்ம நூல்கள் ஒவ்வொன்றும், வர்மப் பகுதிகளைப் பல்வேறு பிரிவுகளாகப் பகுத்துக் கூறுகின்றன. 'வர்ம பீரங்கி' என்ற நூல், தலை முதல் கால் வரை உள்ள உறுப்புகளைப் பிரித்து அதில் அடங்கியுள்ள வர்மங்களைக் கீழ்க்காணும் முறையில் வகைப்படுத்தியது.
- சிரசு முதல் கண்டம் வரை உள்ள வர்மங்கள் - 25
- கண்டம் முதல் உந்தி வரை உள்ள வர்மங்கள் - 45
- நாபி முதல் மூலம் வரை உள்ள வர்மங்கள் - 9
- கையில் உள்ள வர்மங்கள் - 14
- காலில் உள்ள வர்மங்கள் - 15
மொத்தம் = 108 வர்மங்கள்
வர்ம நாடிப் பிரிவுகள்
நாடி அடிப்படையிலும் வர்மங்கள் பிரிக்கப்பட்டன. 'வர்ம சூத்திரம்' நூல் கீழ்க்காணும் வகையில் வர்மங்களைப் பிரித்துள்ளது.
- வாத வர்மம் - 64
- பித்த வர்மம் - 24
- சிலேற்பன வர்மம் - 6
- உள்வர்மம் - 6
- தட்டு வர்மம் - 8
மொத்தம் = 108 வர்மங்கள்
வர்மக்கலை நூல்கள்
தமிழில் வர்மக்கலை குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை வழக்கொழிந்து போயின. சில மட்டுமே இன்று நூல்கள் வடிவில் உள்ளன. சில பதிப்பிக்கப்படாத ஓலைச்சுவடி வடிவில் உள்ளன. தமிழின் வர்மக்கலை நூல்கள் குறிப்பிடத்தகுந்தவையாக அறியப்படுகின்றன.
வர்மங்களின் பெயர்கள்
108 வர்மங்கள் உள்ளன; வர்மப் புள்ளிகள் 132 இடங்களில் இருக்கின்றன என்று பண்டை நூல்களால் அறியப்பட்டாலும், உடல் புள்ளிகளில் செயல்படுத்தப்படும் வகையில், வர்மங்களின் பெயர்கள் பலவகைகளில் உள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட வர்மங்களின் பெயர்களைப் பண்டைய நூல்கள் குறிப்பிட்டுள்ளன.
வர்மக் கலை மருத்துவம்
ஒருவருக்கு எந்தெந்த இடத்தில் அடிபட்டால், என்னென்ன அறிகுறிகள் தென்படுமோ அந்தந்த அறிகுறிகளை அறிந்து, எவ்வளவு நாழிகைக்குள் இளக்கவேண்டும், அடிபட்டுக் கிடப்பவரின் எந்த உறுப்பைத் தட்டினால் எழுவார் என்பது போன்ற மருத்துவ முறைகளையும், அப்படி அடிபட்டவருக்கு, காது, வலது நாசி போன்ற பகுதிகளில் நசியம் செய்யவேண்டிய வழிகளையும், பச்சிலைகளைக் கொண்டு அவருக்குச் சிகிச்சையளிக்கும் முறைகளையும், பத்தியத்தோடு மருந்துகளைச் சாப்பிட வேண்டிய முறைகளையும் கூறுவதால் வர்மக் கலை, மருத்துவக் கலையாகவும் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2024, 21:18:29 IST