under review

ருக்மணி லட்சுமிபதி

From Tamil Wiki
ருக்மணி லட்சுமிபதி
ருக்மிணி லட்சுமிபதி

ருக்மணி லட்சுமிபதி (டிசம்பர் 6, 1892 - ஆகஸ்ட் 6, 1951) (ருக்மிணி லட்சுமிபதி, ருக்மிணி லக்ஷ்மிபதி) சமூக சேவகர். சுதந்திரப் போராட்ட வீரர். உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்மணி; விடுதலைக்கு முந்தைய தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண்; தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர்.

பிறப்பு, கல்வி

ருக்மணி, டிசம்பர் 6, 1892 அன்று சென்னையில், சீனிவாசராவ் - சூடாமணி தம்பதியினருக்குப் பிறந்தார். எழும்பூர் மாநிலப் பெண்கள் பள்ளியில் கல்வி கற்றார். பால்யத் திருமணத்தை மறுத்து, உறவுகளின் எதிர்ப்பை மீறி மேல் கல்வி பயின்றார். இண்டர்மீடியட் படிப்பை நிறைவு செய்தார்.

டாக்டர் ஏ. லட்சுமிபதி

தனி வாழ்க்கை

தன்னை விட வயதில் மூத்தவரும், சென்னையின் புகழ்பெற்ற மருத்துவருமான ஆசண்டா லட்சுமிபதியைக் (Achanta Lakshmipathi) காதலித்தார் ருக்மணி. லட்சுமிபதி, மனைவியை இழந்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தந்தை. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, 1911-ல், லட்சுமிபதியை மணம் செய்துகொண்டார் ருக்மணி. கணவர் அளித்த ஊக்கத்தால் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். ஜானகிராம், சாரதாதேவி, எம்டன் சீனிவாசன், இந்திரா, ராமமூர்த்தி, பாலசுப்ரமணியன், ராமராவ் ஆகியோர் இவரது பிள்ளைகள். மகள் இந்திராவின் கணவர் பி. ராமமூர்த்தி, இந்தியாவின் பிரபல நரம்பியல் மருத்துவர்களுள் ஒருவர்.

சமூக வாழ்க்கை

கணவர் லட்சுமிபதி தேசபக்தர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காந்தியவாதி. ருக்மிணி கணவரால் அரசியில் ஈடுபாடு கொண்டு மதுவிலக்கு, தீண்டாமை, தேவதாசி முறை பற்றி இதழ்களில் எழுதினார். திருவல்லிக்கேணியில் கதர் விற்பனை நிலையம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

1919-ல் ‘பாரதி மகிளா மண்டல்’சங்க இயக்கத்துடன் இணைந்து, பெண்களுக்கான பல போராட்டங்களில் பங்கெடுத்தார். 1926-ல் பாரிஸில் நடந்த அகில உலகப் பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் கலந்து கொண்டு பெண்களுக்குச் சம உரிமை வழங்க வேண்டும் என்று பேசி கவனம் ஈர்த்தார். ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணப்பட்டு அங்குள்ள சமூக நிலையை கண்டறிந்தார்.

ருக்மணி லட்சுமிபதி நினைவு அஞ்சல்தலை

அரசியல் வாழ்க்கை

தமிழகம் திரும்பிய ருக்மணி லட்சுமிபதி, காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் சார்பில் பல போராட்டங்களில் கலந்துகொண்டார். நேருவின் வேண்டுகோளுக்கிணங்க, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறுவர்களுக்காக ‘வானர சேனை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களை வழிநடத்தினார். காங்கிரஸ் தலைமை ருக்மணியை மகளிர் பிரிவுச் செயலாளராக நியமித்தது.

1929-ல் சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். பெண்கள் கூட்டத்திற்குத் தலைமை வகித்து சைமன் குழுவிற்குக் கறுப்புக் கொடி காட்டினார். லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பங்குகொண்டு உரையாற்றினார். தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடினார்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம்

1930-ல், ராஜாஜி தலைமையில், வேதாரண்யத்தில், உப்புசத்தியாக்கிரகப் போராட்டம் நடந்தது. மட்டப்பாறை வெங்கட்ராமையா, சர்தார் வேதரத்தினம் பிள்ளை, ஓ.வி. அழகேசன், ஆர். வெங்கட்ராமன், ஏ.என்.சிவராமன் உள்ளிட்ட பலருடன் ருக்மணி லட்சுமிபதியும் கலந்துகொண்டார். மகளிர் அணிக்குத் தலைமை ஏற்றிருந்த அவர், உப்புக் காய்ச்சியதால் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தியாவில், உப்புச் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்மணியாகவும், தமிழகத்தில் அதற்காகச் சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண் அரசியல் கைதியாகவும் ருக்மணி லட்சுமிபதி கருதப்படுகிறார்.

ருக்மணி லட்சுமிபதி உருவச்சிலை (குண்டூர் மருத்துவக் கல்லூரி)
போராட்டங்கள்

சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் பல போராட்டங்களில் கலந்துகொண்டார் ருக்மணி லட்சுமிபதி. மதுரையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு, சுதந்திரதின மாநாடு போன்றவற்றை நடத்தினார். சென்னையில், அன்னியத்துணி மறுப்பு போரில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு வேலூர் சிறையிலடைக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் கள்ளுக்கடை மறியல், சத்தியாகிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1933-ல் சென்னை வந்திருந்த காந்தியைச் சந்தித்தார் ருக்மணி.

பணிகள், பொறுப்புகள்

ருக்மணி லட்சுமிபதி 1934-ல் சென்னை மேல் சபை உறுப்பினரானார். 1936-ல் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இவர் தலைமையில் தான் நடந்தது. 1937-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று சென்னை மாகாண சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக வரலாற்றில் இப்பதவிக்குத் தேர்வான முதல் பெண் ருக்மணி லட்சுமிபதிதான். 1936 முதல் 1941 வரை சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார்.

ருக்மணி லட்சுமிபதி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததற்காகவும் தனிநபர் சத்தியாகிரகத்தை மேற்கொண்டதற்காகவும் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒராண்டு காலச் சிறை வாசத்துக்குப் பின் விடுதலையானார். 1946-ல், தேர்தலில் வென்று பிரகாசம் அமைச்சரவையில் ருக்மிணி சுகாதாரத் துறை அமைச்சரானார். தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண் ருக்மணி லட்சுமிபதிதான். இந்தியாவில், சுதந்திரத்திற்கு முன்பாக அமைச்சர் பதவி வகித்த ஒரே பெண்மணியும் ருக்மணிதான்.

ருக்மணி லட்சுமிபதி இந்திய அரசுப்பணிகளில், இந்தியர்களையே நியமிப்பது என்பதை அரசின் கொள்கையாக மாற்ற ஆவன செய்தார். இந்தியரான கர்னல் சங்கம்லாலை சர்ஜன் ஜெனரலாக நியமித்தார். சென்னையின் சர்ஜன் ஜெனரலாக டாக்டர் பி.வி. செரியனையும், பொதுச் சுகாதாரத் துறை இயக்குநராக டாக்டர் மேத்யூ அவர்களையும் நியமித்தார்.

கொசுவை ஒழிக்கும் திட்டமான ‘மலேரியா ஒழிப்பு இயக்கம்’ என்பதை இந்தியாவில் முதன் முதலில் தொடங்கியதும் ருக்மணி தான். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே ஆயுர்வேதக் கல்வியையும் அவர் ஊக்குவித்தார். குண்டூர் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினார்.

மறைவு

ருக்மணி லட்சுமிபதி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அதன் விளைவான திடீர் மாரடைப்பால் ஆகஸ்ட் 6, 1951-ல் காலமானார்.

ருக்மணி லட்சுமிபதி சாலை
தடைகள் பல தாண்டி.. பி. ராமமூர்த்தியின் நூல்

நினைவேந்தல்

ருக்மணி லட்சுமிபதியின் நூற்றாண்டை ஒட்டி, அவரது நினைவைப் போற்றும் வகையில், 1990-ல், அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி, சென்னை எழும்பூரில் இருக்கும் மார்ஷல் சாலையை, ’ருக்மணி லட்சுமிபதி சாலை’ என்று பெயர் மாற்றம் செய்தார்.

சென்னையில் மாண்டியத் சாலை-ருக்மணி லட்சுமிபதி சாலை சந்திப்பில் ருக்மணி லட்சுமிபதியின் மார்பளவுச் சிலையை, 1996-ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

1997-ல், முதலமைச்சர் மு. கருணாநிதியின் பரிந்துரையின் பேரில், இந்திய அரசு, ருக்மணி லட்சுமிபதி நினைவு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.

குண்டூர் மருத்துவக்கல்லூரியில் ‘ஆச்சண்டா ருக்மணி லட்சுமி காரு’ என்ற பெயரில் தனி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ருக்மணி லட்சுமிபதியின் உருவச் சிலையும், மார்பளவுச் சிலையும், உருவப்படமும் குண்டூர் மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர்கள் ரகமி, கமலக்கண்ணன் ஆகியோர் ருக்மணி லட்சுமிபதியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளனர்.

ருக்மணி லட்சுமிபதியின் மருமகனான நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி, தனது ‘தடைகள் பல தாண்டி’ நூலில் ருக்மணி லட்சுமிபதி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

வரலாற்றிடம்

அரசியல் பெண் சிறைக் கைதி, முதல் சட்டமன்றப் பெண் உறுப்பினர், முதல் பெண் சபாநாயகர், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் என பல பொறுப்புக்களை வகித்தார் ருக்மணி லட்சுமிபதி. பெண்ணுரிமை, பெண்கள் மேம்பாடு பற்றி அக்காலத்தில் உரத்து ஒலித்த குரல் ருக்மணி லட்சுமிபதியினுடையது. பெண்கள் கல்வி, சுகாதாரம் பற்றியே அதிகம் சிந்தித்தார். சுகாதாரத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தபோது பெண்கள் நலனுக்காகப் பல திட்டங்களை முன்னெடுத்தார். தமிழகத்தின் முன்னோடி அரசியல், சமூகப் பெண் ஆளுமைகளுள் ஒருவராக ருக்மணி லட்சுமிபதி மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page