under review

ராமக்குளுவன்

From Tamil Wiki

ராமக்குளுவன் மண்டிகர் இனத்தை அழைக்கும் சொல். ராம நாமத்தைப் பஜனையாகப் பாடிக்கொண்டு அயோத்தியிலிருந்து நாடோடிகளாகத் திரிந்ததால் ராமக்குளுவர் என்றழைக்கப்பட்டனர்.

தொன்மம்

மண்டிகர் இனத்தவர் ராமக்குளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சீதையை திருமணம் செய்த இராமன் அயோத்தியில் வாழ்ந்த போது கைகேயியின் சூழ்ச்சியால் வனவாசம் செல்ல நேர்ந்தது. இராமனுடன் சீதையும், லட்சுமணனும் வனவாசம் சென்ற போது அயோத்தி மக்களும் உடன் சென்றனர். அயோத்தி மக்கள் தன்னுடன் வருவதைக் கண்ட இராமன் அவர்களிடம் அயோத்தி திரும்பும் படி வேண்டினான். இராமனின் சொல் கேட்காத சிலர் இராமனுடன் சென்றனர். அவர்கள் கங்கை கரையில் தங்கி பதினாழு ஆண்டுகள் காய்,கனி, மாமிசம் மட்டும் சாப்பிட்டு காலம் கழித்தனர். அயோத்தி மக்களாயினும் அவர்கள் காட்டில் வாழ்ந்து காட்டாளர்கள் போல் மாறினர்.

இலங்கையிலிருந்து போர் முடிந்து நாடு திரும்பிய இராமனைக் கண்டு கங்கைக் கரையில் இருந்த மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இராமனுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. இதனை அறிந்தவர்கள் மனம் உடைந்து அயோத்திக்கு திரும்பக் கூடாது எனத் தீர்மானம் செய்தனர். இராமன் அவர்களை மறந்த போதும் அவர்கள் இராம பக்தர்களாகவே இருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் இராம நாமத்தைப் பஜனையாகப் பாடிக் கொண்டு நாடோடிகளாய் திரிந்தனர். அவர்களை ’ராமக்குளுவர்’, ’இராமக் கோந்தாளர்’ என்றழைத்தனர். பின்னர் மண்டிகர் என்றழைக்கப்பட்டனர்.

பார்க்க: மண்டிகர்

உசாத்துணை

  • தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து, அ.கா. பெருமாள், காவ்யா பதிப்பகம் (2015)


✅Finalised Page