under review

யதி

From Tamil Wiki
யதி

யதி (2019 ) பா.ராகவன் எழுதிய நாவல். துறவு என்னும் கருப்பொருளை வெவ்வேறு கதைமாந்தர் வழியாக ஆராயும் படைப்பு.

எழுத்து, வெளியீடு

பா. ராகவன் இந்நாவலை மார்ச் 2018 முதல் தினமணி இணைய இதழில் தொடராக எழுதினார். 167 நாட்கள் இந்நாவல் தொடர்ந்து வெளிவந்தது. 2019-ல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் இதை நூலாக வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

யதி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீட்டைத்துறந்து துறவிகளாகச் செல்வதை பற்றிய கதை. விஜய், வினீத், வினோத், விமல் ஆகிய நால்வர் யோகம், தியானம், பக்தி மற்றும் நாத்திகம் ஆகிய நான்கு வழிகளில் துறவை முன்னெடுக்கிறார்கள். வெவ்வேறு சித்தர்கதைகள், யோகநிலைகள், பக்தியின் பொய்மைகள், தியானமுறைகள் ஆகியவற்றை இந்நாவல் ஆராய்கிறது. நால்வரும் தங்கள் தாயின் மரணத்தின் போது வீட்டுக்கு வந்து ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அவர்களின் அடையாளம் குறித்த வெளிப்படுத்தலுடன் நாவல் நிறைவடைகிறது.

இலக்கிய இடம்

இந்தியாவுக்கு துறவின் மீதுள்ள ஈடுபாட்டை விவரிக்கும் நாவல். துறவு மற்றும் ஆன்மிகப்பயணத்தின் வெவ்வேறு மாதிரிகளையும் அவற்றின் மனநிலைகளையும் தொடர்கதைக்குரிய வடிவில் முன்வைக்கிறது.

"பொதுவாகவே இந்தியக் கலாசாரத்தின் பின்னணியில் விரியும் எழுத்துகள் படிக்கக் கடினமானதாகவும், தத்துவப் பின்னணியில் புரியாத மொழியில் எழுதப்பட்டவையாகவும் இருக்கும். ஆனால் பாராவின் எளிமையான எழுத்து இச்சிக்கல்களைப் புறம் தள்ளி, வாசகனைத் தனக்குள் இழுத்துக்கொள்கிறது." என்று விமர்சகர் ஹரன் பிரசன்னா இந்நாவலை மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page