under review

மெஞ்ஞானமாலை

From Tamil Wiki
மெஞ்ஞானமாலை

மெஞ்ஞானமாலை (1918) இஸ்லாமியச் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் கச்சிப்பிள்ளையம்மாள்.

பிரசுரம், வெளியீடு

மெஞ்ஞானமாலை, நூல் சிவகங்கையில் உள்ள கலாபிரஸ்ஸில், 1918-ல், பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் ஆசிரியர், கச்சிப்பிள்ளையம்மாள். இதன் விலை 2 அணா.

ஆசிரியர் குறிப்பு

மெஞ்ஞானமாலை நூலை இயற்றியவர் கச்சிப்பிள்ளையம்மாள். இவர், இளையான்குடியில் பிறந்தார். தந்தையின் பெயர் லுக்குமான் ராவுத்தர். சகோதரர் முஹம்மது மீறான் மஸ்தான். கச்சிப்பிள்ளையம்மாள் இளம் வயதிலேயே ஞானம் உடையவராக இருந்தார். அதனால் ’மெஞ்ஞான சொரூபி’ என்று போற்றப்பட்டார். இஸ்லாமியம் சார்ந்து பல பக்திப்பாடல்களை இயற்றினார்.

உள்ளடக்கம்

மெஞ்ஞானமாலை நூல், மெஞ்ஞான மாலை, மெஞ்ஞானக் குறம், மெஞ்ஞானக் குறவஞ்சி, மெஞ்ஞான ஊஞ்சல், மெஞ்ஞானக் கும்மி போன்ற பல்வேறு பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. பல்வேறு கண்ணிகளால் ஆனதாக இந்நூல் அமைந்துள்ளது.

பாடல் நடை

காப்புச் செய்யுள்

அல்லாஹு வென்றே யகிலமெலாம் போற்றுகின்ற
வல்லானை யெந்நாளும் வாழ்த்துவமே - பொல்லா
அஞ்ஞானமாயை யறுத்தொ துக்கும் வாளனைய
மெஞ்ஞான மாலை சொல்லவே

மெஞ்ஞானக்குறம்

உண்மையுள்ள ஞானமதை உலகிலுதித்தோர்க்கு
ஓர்மையுடனே எடுத்திங் குரைக்கிறே னிப்போதே
கண்மணியா யுலகில்வந்த கச்சிப்பிள்ளை கூறும்
கருக்குழியின் ஞானமிதன் கருத்தை யறிவீரே

தோன்றுமணியான மக்கா மண்டலத்து நடுவே
மக்காமதின் வாயலிலே வளரும் நாதம் பெரு
மதிக்கு முப்பத்தொன்றெழுத்தில் மாந்தருவாகி
ஒன்பது மாதங் கடந்தே யுலகில் வந்தது

மெஞ்ஞானக் குறவஞ்சி

தூலமுருவான சூட்சுமஞ் சொல்லடி சிங்கி
சூட்சுமஞ் சொல்லிடிற் றூரவழியல்ல சிங்கா

விதை முளைத்த நடுமூலமென்னடி சிங்கி
நடுமூலமென்றால் வெளிமூலம் ரெண்டடா சிங்கா

வெளிமூலமான விபரீதமென்னடி சிங்கி
விரிவான சங்கு முழங்குந் தலமடா சிங்கா

ஓதாமுழக்கத்தி னுண்மை தெரியுமோ சிங்கி
ஓர்நினைவாகிடி லொன்றாய்த் தெரியுமே சிங்கா

மெஞ்ஞான ஊஞ்சல்

ஆகாசமானதிலே
அச்சுதக்கூடமடி
அச்சுதக்கூடமடி

அச்சுதக் கூடத்திலே
உச்சித ஊஞ்சலடி
உச்சித ஊஞ்சலடி

உச்சித மூலத்திலே
மெச்சிய வாலையடி
மெச்சிய வாலையடி

மெச்சிய வாலையவள் மேன்மையைப் பாரடி நீ
மெச்சிய வாலையவள் மேன்மையைப் பாரடி நீ

மெஞ்ஞானக் கும்மி

ஆதிமுதலோன்றனை நினைந்து
ஐந்தொகுத்துந் தொழுதே புகழ்ந்து
ஓதிமுகம்மது பாத மனுதினம்
உகந்து கும்மியடியுங்கடி
மகிழ்ந்து கும்மியடியுங்கடி

அற்புதமானதோர் கோட்டைக்குள்ளே
அக்ஷரமுப்பத் திரண்டாமடி
அக்ஷரமாமுத்து வெள்ளைக்குள்ளே நின்று
ஆடிடும் வேசை யொருத்தியடிப்
பாடியே கும்மி யடியுங்கடி

மதிப்பீடு

இஸ்லாமியத் தத்துவங்களை, ஞானம் அடையும் வழிமுறைகளை எளிய தமிழில் கூறும் நூலாக மெஞ்ஞானமாலை நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:47:13 IST