under review

முத்துலட்சுமி ரெட்டி

From Tamil Wiki
முத்துலட்சுமி ரெட்டி (நன்றி: தினமணி)

முத்துலட்சுமி ரெட்டி (ஜூலை 30, 1886 - ஜூலை 22, 1968) தமிழார்வலர், ஆசியாவின் முதல் பெண் மருத்துவர். சமூக செயற்பாட்டாளர். சென்னை புற்று நோய் மருத்துவமனையைத் தொடங்கினார். இவரது முயற்சியால் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினராகிய முதல் பெண். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணத்தில் 1886-ல் நாராயணசாமி, சந்திரம்மாள் இணையருக்கு மூத்த மகளாக பிறந்தார். தந்தையார் நாராயணசாமி வழக்கறிஞர். தாயார் சந்திரம்மாள் பாடகர், இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். முத்துலட்சுமி ரெட்டியின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் தம்பி இராமையா.

முத்துலட்சுமி நான்கு வயதில் திண்ணைப்பள்ளியில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். பதின்மூன்று வயது வரை கீழ் நிலைக்கல்வியைப் பயின்றார். தந்தை வீட்டுக்கு ஆசிரியரை வரவைத்து பாடம் கற்கச் செய்தார். 1902-ல் மெட்ரிக்குலேஷன் தேர்வில் முதல் மாணவியாகத் தேறினார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 1904-ல் விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானின் ஒப்புதலின் பேரில் முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி கிடைத்தது. சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைப்பட்டது. இந்த காலகட்டத்தில் முத்துலட்சுமியின் தாய் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். வாழ்வில் நோயின் தாக்கத்தைக் கண்டதால் மருத்துவராக வேண்டும் என்று முடிவெடுத்தார். இண்டர்மீடியட் தேர்வில் முதல் மாணவியாகத் தேறினார். 1907-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணாக ஆனார். 1912-ல் மருத்துவப் படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

முத்துலட்சுமி ரெட்டி குடும்பம்

முத்துலட்சுமி 1912-ல் எழும்பூர் அரசு மருத்துவமனையிலும் டாக்டர் ஜிப்மர் நடத்திய மருத்துவமனையிலும் பணியாற்றினார். அதன் பிறகு புதுக்கோட்டையில் சில காலம் மருத்துவப்பணி செய்தார். அதன் பின் சென்னை வந்து மருத்துவமனை சொந்தமாகக் கட்டினார். லேடி ஒயிட்லர்டின் சமூக சேவை சங்கத்திலும், பிராமண விதவைப் பெண்கள் சங்கத்திலும், ராணிமேரி கல்லூரி உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளில் மருத்துவச் சேவை ஆற்றினார்.

அடையாற்றில் அன்னிபெசன்ட்டால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்த டி. சுந்தரரெட்டியை 1914-ல் பிரம்மஞானசபை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். டி. சுந்தரரெட்டி சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகன், விசாகப்பட்டினத்தில் டாக்டராகப் பணியாற்றியவர். லண்டன் சென்று எஃப்.ஆர்.சி.எஸ் படித்த முதல் இந்தியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி மருத்துவர், புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்தார்.

1925-ல் முத்துலட்சுமி மேல்படிப்புக்காக கணவர், குழந்தைகளுடன் லண்டன் சென்றார்.

இலக்கிய வாழ்க்கை

முத்துலட்சுமி ரெட்டி தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டத்தில் பங்காற்றினார். பாரதி கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தியா இதழில் கட்டுரைகள் எழுதினார். இந்திய மாதர் சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக இருந்தார்.

சமூகப்பணி

முத்துலட்சுமி ரெட்டி
முத்துலட்சுமி ரெட்டி

முத்துலட்சுமி ரெட்டி இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடினார். 1917-ல் மார்கரெட் கசின்ஸ் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய மாதர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். குழந்தைகள் உதவிச்சங்கம், சாரதா மகளிர் மன்றம், இந்தியப் பெண்கள் சமாஜம் போன்ற அமைப்புகளிலும் பங்காற்றினார். 1926-ல் பாரிஸில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். பெண்களுக்கான சம உரிமை, இளவயது திருமணம், விதவை மறுமணம் குறித்துப் பேசினார்.

முத்துலட்சுமி பெண்களுக்கான வாக்குரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பினார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார். 1925-ல் சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம், விபச்சார ஒழிப்புச்சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்ற வழிவகை செய்தார். பிப்ரவரி 2, 1929-ல் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேறியது.

1937-ல் சென்னை மாநகரத்தலைமையாளர் 'ஆல்டன் உமன் (Alderwomen) பதவி முத்துலட்சுமி ரெட்டிக்குக் கிடைத்தது. அன்னிபெசண்ட்டின் மறைவுக்குப் பிறகு 1933-1945 காலகட்டத்தில் இந்திய மாதர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1930-ல் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்காக "அவ்வை இல்லம்' அடையாற்றில் அமைத்தார். காலப்போக்கில் அது பணிக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதி, ஏழை மாணவர்களுக்கான பள்ளி என விரிந்தது. சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நிதி திரட்டி அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு மூலம் 1952-ல் அடிக்கல் நாட்டினார்.

விருதுகள்

  • முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956-ல் பத்ம பூஷண் விருது அளித்தது.

மறைவு

முத்துலட்சுமி ஜூலை 22, 1968-ல் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page