under review

முடத்தாமக் கண்ணியார்

From Tamil Wiki

முடத்தாமக் கண்ணியார், சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பொருநராற்றுப்படையை இயற்றியவர். இவர் ஆண்பால் புலவர். இவரை பெண்பாற் புலவரெனவும் சிலர் கருதுகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

முடத்தாமக் கண்ணியார் என்ற பெயரிலுள்ள கண்ணி என்பது பூமாலை வகைகளில் ஒன்று. 'முடத்தாமம்' செண்டால் இணைக்கப்படாத மாலை. கழுத்தில் அணியும்போது இருபுறமும் தொங்கும். இதனை அணிந்தவர் முடத்தாமக் கண்ணியார் எனக் கொள்ளப்படுகிறது. முடம் என்ற சொல் வளைவு என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. வளைவான தாமத்தை அணிந்த அழகான கண்களையுடையவர் என்பதே இப்பெயரின் பொருள். எனவே இவர் பெண்பாற் புலவர் எனச் சிலர் கருதுகிறார்கள்.

மேலும், முடம்பட்ட தாமக்கண்ணி என விளங்கிக்கொண்டு முடத்தாமக் கண்ணி என்னும் பெயர் ஊனமான உறுப்பால் வந்ததென்றும், இவர் பெண்பாற் புலவர் என்றும் சிலர் கருதுகிறார்கள் (பத்துப் பாட்டு மூலமும் உரையும் பொ.வே. சோமசுந்தரனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி- இராசமாணிக்கனார்).

இலக்கிய வாழ்க்கை

முடத்தாமக் கண்ணியார் , இயற்றிய பொருநராற்றுப்படை சங்கத்தொகை நூலான பத்துப்பாட்டில் இடம்பெறுகிறது. சோழன் கரிகாற் பெருவளத்தானை இவர் இந்தப் பாடலில் போற்றிப் பாடியுள்ளார். இந்த நூல் 248 அடிகளைக் கொண்டது. இதன் இறுதியில் பிற்காலத்தவர் எழுதிய இரண்டு வெண்பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடல் சொல்லும் செய்திகள்

பொருநன் கடும் பசியில் உள்ளான் அதனைப் போக்குவதற்குக் கரிகார்பெருவளத்தான் உள்ளான் என்பதை அடையா வாயில் அடைக நீயும் ,உன் சுற்றத்தருடன் நீண்ட நாள் பசியைப் போக்க இன்றே புறப்படு ஏழிசை யாழ் நரம்புக்கும் உரிமை உடையவனே உடனே செல்க. ஏனெனில் உன் பசி போக வேண்டுமானால் கரிகால் பெருவளத்தானைப் பார் என ஆற்றுப்படுத்துகிறார் புலவர்.

சோழன் கரிகால் பெருவளத்தான் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன். இவன் மிக இளம்வயதிலேயே வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும் வென்றான். எளியவரையும் நட்புடன் விரும்பி, விருந்தோம்பும் பண்பாளன். இசைக் கலைஞரின் ஏழிசைக்குத் தக்க மதிப்புத் தரும் வகையில் ஏழடி அவர்கள் பின்னால் நடந்து சென்று வழி அனுப்பி வைப்பான். யானைக் கூட்டத்தையும் பொன் பொருளையும் கணக்கின்றி வழங்குவான். இவ்வாறு அவன் கொடைச்சிறப்பைக்கூறி அவனிடம் செல்லுமாறு பரிசில் பெற்று வரும் பொருநர்கள் ஆற்றுப்படுத்துகின்றனர்.

தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து 'காலில் ஏழடிப் பின்சென்று' (பொரு.166) எனபதிலிருந்து அறிய முடிகிறது.

பாடல் நடை

பொருநராற்றுப்படை

பாடினியின் கேசாதிபாத வருணனை

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத்
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி
தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே.

(அவள் கூந்தல் ஆற்றுமணல் படிவுபோல் நெளிநெளியாக இருந்தது நெற்றி பிறைபோல் இருந்தது. புருவம் கொல்லும் வில்லைப்போல் வளைந்திருந்தது எனினும் கடைக்கண்ணில் மழைபோல் உதவும் கொழுமை இருந்தது. வாய் இலவம் பூவின் இதழ்போல் சிவந்திருந்தது. அதிலிருந்து இனிய சொற்கள் மலர்ந்தன. வெண்பற்கள் முத்துக் கோத்தாற்போல் இருந்தன. பல்வரிசை பழிக்க முடியாதவாறு ஒழுங்காக இருந்தது. காதுக்குப் பாரமாகக் குழை ஊசலாடிக் கொண்டிருந்தது. குழை மயிர் வெட்டும் கத்தரிக்கோல் போலக் காதில் தொங்கியது. அவளது நாணம் காண்போரை அழித்துக் கொண்டிருந்தது. அதற்காகவோ, அதனாலோ அவளது கழுத்து ( எருத்து ) குனிந்திருந்தது. பருத்த தோள் வளைந்தாடும் மூங்கிலைப் போல் இருந்தது. முன்கையில் பொசுங்கு மயிர்கள் முடங்கிக் கிடந்தன. மென்மையான விரல்கள் மலையில் மலர்ந்த காந்தள் மலர் போன்றவை. விரலில் ஒளிரும் நகம் கிளியின் வாயைப் போல் குழிவளைவு கொண்டது. கிளியின் வாயைப் போல் சிவந்தும் இருந்தது. நெஞ்சிலே பொன்னிறப் பொலிவு (சுணங்கு) இருந்தது. (இலை தைக்க உதவும் சோளத் தட்டையின் ஈர்க்கை நாம் அறிவோம்) ஈர்க்கும் இடை நுழைய முடியாதபடி மார்பகங்கள் இணைந்திருந்தன. அவை எடுப்பான மார்பகங்கள். வயிற்றிலிருந்து கொப்பூழ் தண்ணீர் சுழலும் சுழிபோல் இருந்தது. அசைந்தாடும் இடை உண்டோ என்று எண்ணும்படி இருந்தது. அல்குல் துணியின் மேல் வைரமணிக் கோவை (காழ்) இருந்தது. (இந்தக் காழ் இரண்டு கால்களின் தொடைகளுக்கு இடையே ஆடைக்கு மேல் தொங்கும்) யானைக்கு இரண்டு துதிக்கை இருப்பதுபோல் கால் தொடைகள் (குறங்கு) காலில் பொருந்தி ஒழுகும் மயிர். (ஒப்பு நோக்குக – கையில் அரிமயிர்) இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப்போல் மென்மையான காலடிகள். அரக்கை உருக்கி வைத்திருப்பது போன்று பொடிசுடும் செந்நிலத்தில் அவள் ஒதுங்கி ஒதுங்கி நடந்து செல்கிறாள். அப்போது பருக்கைக் கற்கள் தன்னை மிதிக்கிறாளே என்று அவளுக்குப் பகையாகிக் காலில் உருத்துகின்றன. அந்தத் துன்பத்தோடு சேர்ந்து அவளது காலடியில் நீர்க்கொப்புளங்கள் போட்டுவிடுகின்றன. அவை கானல் நீரின் பழங்கள் போல் உள்ளன. அதனால் அவளுக்காக அவர்களின் குழு நண்பகல், அந்தி வேளைகளில் நடந்து செல்வதில்லை. காலை வேளைகளில் பெண்மயில் போல் ஆடாமலும், அலுங்காமலும் பதனமாக நடந்து சென்றனர்.)

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் பொருநராற்றுப்படை, தமிழ் சுரங்கம் பொருநராற்றுப்படை, தமிழ் இணையக் கல்விக் கழகம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Nov-2023, 10:19:08 IST