under review

மு. தங்கராசன்

From Tamil Wiki
மு. தங்கராசன்
மு. தங்கராசன்
மு. தங்கராசன்
நல்லாசிரியர் விருது தங்கராசன்
உதயம் (கவிதைகள்)
நித்திலப்பூக்கள்

மு. தங்கராசன் (நவம்பர் 6, 1934-ஜனவரி 15, 2021) சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர், தமிழாசிரியர், நாடக ஆசிரியர். மலாயா மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த தமிழரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என நாற்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்தவர். நாற்பது ஆண்டுகாலம் சிங்கப்பூர் கல்வித்துறையில் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

மு. தங்கராசன் நவம்பர் 6, 1934-ல், திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த தளுகை பாதர்பேட்டை கிராமத்தில் இராசம்மாளுக்குப் பிறந்தார். தன்னுடைய இரண்டாம் வயதில் தாயை இழந்தார். தன் பாட்டியுடன் மலாயா சென்றார். மலேசியா ஜொகூரில் தந்தை பணியாற்றிய நியூ சூடாய் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்ப காலக் கல்வியைத் தமிழ்வழியில் கற்றார். மு. தங்கராசன் 1955-ல் ஆசிரியப் பட்டயப் படிப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

மு. தங்கராசன் ரெ. செல்லம்மாளை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் என ஆறு குழந்தைகள். மூன்று மகன்கள் தமிழாசிரியர்கள். 1959 -ல் சிங்கப்பூர் கலைமகள் தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியராக இணைந்தார். 1961-1972 வரை செம்பவாங் தமிழர் சங்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணி புரிந்தார். உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி, ரங்கூன் ரோடு உயர்நிலைப் பள்ளி, நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளி உட்பட பல பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார்.

1991 முதல் 1997 வரை சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாட நூலாக்கக் குழுவில் பணியாற்றினார். யீசூன் உயர்நிலைப் பள்ளி, செம்பவாங் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க் கற்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

மு. தங்கராசனின் முதல் படைப்பு 1955-ல் "வஞ்சகிதானா?" சிறுகதை சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்தது. 1963-ல் ஒளிபரப்பாகிய இவருடைய "ஆளவந்தான்" நாடகம், சிங்கப்பூரின் முதல் தமிழ் தொலைக்காட்சி நாடகமாகும். மு. தங்கராசன் சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம் என 39 நூல்களை எழுதியுள்ளார். "தமிழவேள் நாடக மன்றம்" அமைப்பை உருவாக்கி பதினைந்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி இயக்கி, நடித்தும் அரங்கேற்றினார். இவருடைய முயற்சியால் முப்பதுக்கும் மேற்பட்ட பாவலர்கள் இணைந்து பாடிய "கவிக்குலம் போற்றும் தமிழவேள்" நூல் 1982-ல் தமிழவேள் நாடக மன்றத்தின் உதவியோடு வெளியானது. நெருஞ்சி முள் என்னும் இவருடைய நாடகம் சிங்கப்பூர் வானொலி நிலையம் நடத்திய நாடக போட்டியில் இரண்டாமிடம் பெற்றது. இவர் 12 ஆண்டுகள் செம்பவாங் தமிழர் சங்கத்தின் செயலாளராகவும், பின்பு 1961 முதல் 1975 வரை அச்சங்கத்தின் கௌரவப் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

இலக்கிய இடம்

சிங்கப்பூர் பிரித்தானிய, ஜப்பானிய ஆதிக்கங்களின் கீழ் இருந்த காலத்திலும் மலாயாவுடன் இணைந்து, பின்பு தனி நாடாகப் பிரிந்தபோதும் அங்கு வாழ்ந்தவர் மு. தங்கராசன். இந்த அரசியல் மாற்றங்கள் அங்கு வாழ்ந்த தமிழர்களுடைய வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களை இவருடைய படைப்புகள் பிரதிபலித்தன. தாயகம் விட்டுக் கடல் கடந்து வாழ்ந்த தமிழர்களின் ஏக்கம், மனித வளத்தைத் தவிர வேறு எதுவும் அற்ற நிலப்பரப்பாக இருந்த சிங்கப்பூரை, மிகக்குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த பணக்கார நாடாக மாற்றிய பெருமிதம் ஆகியவற்றைத் தம் படைப்புகளில் ஆவணப்படுத்தியுள்ளார் மு. தங்கராசன். பெரும்பாலான இவருடைய கவிதைகள், மரபுக்கவிதைகளாக இருக்கின்றன. மு. தங்கராசன், தம்முடைய மாணவர்கள் பலரை ஊக்குவித்து தமிழாசிரியர்களாக ஆக்கினார். இறுதி வரை சிங்கப்பூர், தமிழாசிரியர் சங்கத்திற்கு ஆதரவாக இருந்தார் என இவருடைய மாணவர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். மு. தங்­க­ரா­ச­னின் படைப்­பாக்கங்­களை ஆய்­வுப் பொருண்­மை­யா­கக் கொண்டு பன்னாட்­டுக் கருத்­த­ரங்­கம் நவம்பர் 13, 2021-ல் தமிழ் நாட்­டின் மதுரை நக­ரிலுள்ள உல­கத் தமிழ்ச்­சங்­கத்­தில் நடைபெற்றது.

விருது

  • 2012-ல் மு. தங்கராசனுக்கு நல்லாசிரியர் விருதினை சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து வழங்கியது

மறைவு

நிமோனியா சளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்கராசன் ஜனவரி 15, 2021-ல் காலமானார்.

நூல்கள்

நாடகம்
  • தாழம்பூ (நாடகத்தொகுப்பு)
  • தாமரைப்பூ (நாடகத்தொகுப்பு)
  • வானவில் (நாடகம்)
  • எதிரொலி (நகைச்சுவை நாடகம்)
  • அத்தை மகன் (நகைச்சுவை நாடகம்)
  • மணமகன் யார் (நகைச்சுவை நாடகம்)
  • ஏ[ண/னி]ப்படி (நகைச்சுவை நாடகம்)
  • தியாகச்சுடர் (நகைச்சுவை நாடகம்)
சிறுகதை
  • மணக்கும் மல்லிகை (சிறுகதைத் தொகுப்பு)
  • கற்பனை மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு)
  • சிந்தனைப்பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு)
  • பூச்செண்டு (சிறுகதைத் தொகுப்பு)
  • மலர்க்கொத்து (சிறுகதைத் தொகுப்பு)
கவிதை
  • பனித்துளிகள் (கவிதைத் தொகுப்பு)
  • வாகைப்பூக்கள் (கவிதைத் தொகுப்பு)
  • உதயம் (கவிதைத் தொகுப்பு)
  • அணிகலன் (கவிதைத் தொகுப்பு)
  • கவிக்குலம் போற்றும் தமிழவேள் (கவிதைத் தொகுப்பு)
  • நித்திலப்பூக்கள் (கவிதைத் தொகுப்பு)
  • மகரந்தம் (கவிதைத் தொகுப்பு)
  • உதயம் (கவிதைத் தொகுப்பு)
பிற
  • அமுதத்தமிழ்
  • சூரியகாந்தி
  • மலர்க்கூடை
  • இன்பத்திருநாடு
  • மாதுளங்கனி
  • பொய்கைப்பூக்கள்
  • மணங்கமழும் பூக்கள்
  • நாட்டுப்புறத்தில்
  • தேசிய மலர்கள்
  • முற்றத்து முல்லைகள்
  • சாமந்திப்பூக்கள்
  • மனங்கவர் மலர்கள்
  • விண்வெளிப்பூக்கள்
  • அகமும் புறமும்
  • மாணவர்களுக்கான கட்டுரைத் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா : சிறப்பு மலர் / தொகுப்பாசிரியர், * மு. தங்கராசன்.
  • இன்பத்தமிழ்
  • தமிழ் எங்கள் உயிர்

உசாத்துணை


✅Finalised Page