under review

மர்ரே பான்சன் எமனோ

From Tamil Wiki
மர்ரே பான்சன் எமனோ

மர்ரே பான்சன் எமனோ(Murray Barnson Emeneau) (பிப்ரவரி 28, 1904 - ஆகஸ்ட் 29, 2005) திராவிட மொழியியல் ஆய்வாளர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையை ஏற்படுத்தியவர். சர் வில்லியம் ஜோன்ஸ் போன்ற இந்தியவியல் ஆய்வு முன்னோடிகள் தொடங்கிய பணிகளை முடிக்கவேண்டும் என்ற கொள்கையுடன் எமனோ பணிசெய்தார். 'இந்தியா ஒரு மொழியியல் பரப்பு' என்று இவர் உருவாக்கிய கோட்பாடு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிறப்பு, கல்வி

மர்ரே பான்சன் எமனோ

மர்ரே பான்சன் எமனோ கனடாவிலுள்ள லுனென்பர்க் நகரில் நோவாஸ்காட்டியாவின் (Lunenburg Nova Scotia)கிழக்குக் கடற்கரையில் பிப்ரவரி 28, 1904-ல் பிறந்தார். இளமையில் தந்தையை இழந்தார். தாயின் உழைப்பில் வறுமைச் சூழலில் வளர்ந்தார். உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போதே லத்தீன், கிரேக்கம், ஜெர்மன் கற்றார். 1923-ல் டல்ஹெளஸி பல்கலைக் கழகத்தில் செவ்வியலில் இளங்கலைப்பட்டம்(ஆனர்ஸ்) பெற்றார். நான்காண்டுகள் இவருக்கு ரோட்ஸ் உதவித்தொகை கிடைத்தது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்லியோல்(Balliol) கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். 1931-ல் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். உலக அளவில் மொழியியல் துறையிலும் மானுடவியல் துறையிலும் புகழ்பெற்ற அறிஞர்களான பிராங்கிளின் எட்கெர்டன் (Franklin Edgerton ), எட்வர்டு சப்பர் (Edward Sapir) ஆகியோரிடம் கல்வி கற்றவர்.

தனிவாழ்க்கை

மர்ரே பான்சன் எமனோ மணமானவர். 1987-ல் தம் மனைவி கிட்டி எமனோ(Kitty Emeneau) இறந்த பிறகு தனித்தே வாழ்ந்து வந்தார் . இவர் இல்லம் முழுவதும் நூல்கள் நிரம்பியிருந்தன. தொலைக்காட்சியோ, கணிப்பொறியோ இவரிடம் இல்லை. இவர் தம் ஆய்வுகளைத் தம்மிடம் இருந்த எளிய தட்டச்சுப்பொறியில் தாமே தட்டச்சு செய்து கொண்டார்.

ஆசிரிய வாழ்க்கை

மர்ரே பான்சன் எமனோ

மர்ரே பான்சன் எமனோ ஆசிரியர் மாணவர் உறவை உயர்வாகப் போற்றியவர். தம் மாணவர்களை ஊக்கப்படுத்தி, ஓர் ஆய்வுப் பரம்பரையை உருவாக்கினார். பல்வேறு கல்விசார் அமைப்புகளுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தார். எமனோ சொற்பிறப்பியலுக்கு எனப் பல நெறிமுறைகளை உருவாக்கினார். எமனோவின் மேற்பார்வையில் அனைத்துலகச் சமஸ்கிருதக் கழகத்த்தின் தலைவரான ராம்கரன் சர்மா முனைவர் பட்டம் பெற்றார்.

மர்ரே பான்சன் எமனோ 1926-ல் யேல் பல்கலைக்கலைக்கழகத்தில் இலத்தீன் மொழி கற்பிக்கும் பணியில் சேர்ந்தார். 1940-ல் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத உதவிப் பேராசிரியராகப் பணியேற்றார். 1941-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 1953-58 ஆண்டுகளில் பெர்கிலி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பெற்ற மொழியியல் துறையின் முதல் துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1959-62 வரை செம்மொழித்துறைக்குத் தலைவராக விளங்கினார். 1950-ல் இளங்கலை வகுப்புகளில் மொழியியல் பாடம் நடத்தினார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்தார்.

மாணவர்கள்
  • பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி
  • ஆர்.கே.சர்மா (காசி பல்கலைக்கழகம்)
  • ராம்கரன் சர்மா
  • வில்லியம் பிரைட்

ஆய்வு வாழ்க்கை

மர்ரே பான்சன் எமனோ மானுடவியல் அறிஞர் எட்வர்டு சபேர் என்பவரிடம் பயின்றதால் அவருக்கு சொல்லியலிலும் மொழியியலிலும் நல்ல அடித்தளம் இருந்தது. மேலும் நீலகிரியில் டேவிட் மேன்டல்போர்ன் என்பவருடன் இணைந்து பணி செய்ததால் மானுடவியல் துறையில் ஆர்வம் இருந்தது. 1926-ல் சமஸ்கிருதம் கற்பதிலும் இந்தோ ஐரோப்பிய மொழிகளை ஆய்வதிலும் கவனம் செலுத்தினார். 1931-ல் சமஸ்கிருதம் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்று எழுதினார். வேலை வாய்ப்பு அரிதான காலம் என்பதால் எமனோ நியூஹேவனில் (New Haven) தங்கி சிறு சிறு உதவித் தொகைகளைப் பெற்றவண்ணம் பணியிலும் ஆய்விலும் ஈடுபட்டார்.

1933-ல் 'மொழி' என்ற தலைப்பில் லெனார்டு பூளூம்பீல்டு (Leonard Bloomfield) வெளியிட்ட நூல் யேல் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. எமனோ புளூம்பீல்டின் கருத்துகளில் ஈடுபாடு உடையவர்.புளூம்பீல்டின் கருத்துகள், நூல்களை அடிக்கடி நினைவுகூரும் வழக்கம் உடையவர். ப்லூம்ஃபீல்டின் கட்டமைப்பு மொழியியல்துறை பிற்காலத்தில் எமனோவின் போதனைகளுக்கும் இந்திய, திராவிட மொழியியல் ஆய்வுகளுக்கும் அடிப்படையாக இருந்தது.

திராவிட மொழி

தாமஸ் பரோவுடன் இணைந்து 'திராவிட மொழிகளின் வேர்ச்சொற்கள்' என்ற நூலை 1961-ல் முதற்பதிப்பையும் 1984-ல் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டார். இரண்டாம் பதிப்பில் ஒலியன்கள் பற்றிய அட்டவணைகள் இணைக்கப்பட்டது. மூல திராவிடம் பற்றியும் ஒலியன்கள் பற்றியும் ஆராய்ந்து எழுதினார். மூலத்திராவிட மொழியில்(Proto Dravidian) ஒலிப்பில்லாத் தடை(Voiceless stops) ஒலியன்கள் மட்டுமின்றி ஒலிப்புடைத்தடை(Voiced Stops) ஒலியன்களும் இருந்திருக்கலாம் என்ற கருதுகோளை ஆதரித்தார். 1988-ல் மூல திராவிடமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் எழுதினார். மூலத்திராவிட மொழியில் இருவழித்திணைப்பால் பாகுபாடு இருந்திருக்கலாம் என்ற கருத்தை ஆதரித்தார். இக்கருதுகோள்கள் கால்டுவெல்லின் கொள்கைக்கு மாறானவை. சமஸ்கிருத மொழியில் திராவிடச் சொற்கள் என்ற ஆய்வு குறிப்பிடத்தக்க ஒன்று.

பழங்குடி மொழிகள் ஆய்வு

மர்ரே பான்சன் எமனோ பிலிப் கக்கிளாமட்டு (Philip Kahclamat) என்னும் அறிஞர் வழியாகத் தோடா, கோடா மொழிகளில் தமக்கிருந்த ஐயங்களைப் போக்கிக்கொண்டார். தன் ஆசிரியர்களுள் ஒருவரான சபீர் வழியாக அறியப்படாத மலைவாழ் மக்களின் தோடாமொழி பற்றி ஆராய்வதில் கவனம் செலுத்தினார். நீலகிரியின் பழங்குடி மொழிகள் பற்றிய ஆய்வு திராவிட மொழிக்குடும்ப ஆய்வுக்கு உதவும் என்ற சபீரின் அறிவுரையின் பேரில் தோடா, குடகு, கோடா, கோலமி உள்ளிட்ட நான்கு மொழிகளை நன்கு அறிய களப்பணி செய்தார். படகா, பிராகூ மொழிகளை அறிவதிலும் களப்பணி செய்தார். 1935-38-ல் இதற்கென இந்தியா வந்து நீலகிரியில் உள்ள தோடர், கோடர், குடகர் உள்ளிட்ட இன மக்கள் பேசும் மொழிகளை ஆராய்ந்து இந்த மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தினார். இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள கோலமி மக்களின் மொழியையும் ஆராய அம்மக்களுடன் நீண்ட நாள் தங்கி ஆய்வு செய்தார்.

மர்ரே பான்சன் எமனோ இந்தியாவில் களப்பணியில் இருந்தபொழுது எழுத்துவடிவம் பெறாத மொழிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கோடோ, கோலமி(மத்தியபிரதேசம்), குடகு(கன்னடம்), படகுமொழி, பலுசிஸ்தானத்தில் உள்ள பிராகூயி மொழிகளை ஆய்வு செய்தார். தன் ஆய்வின் முடிவுகளை 1944-46 ஆண்டுகளில் நான்கு தொகுதிகளாக கோடா படிகள்(Kota Text) என்ற பெயரில் வெளியிட்டார். 1955-ல் ஆறு வாரங்கள் களப்பணியும் ஆய்வும் செய்து 'கோலமி ஒரு திராவிடமொழி' என்ற ஆய்வை 112 பக்கங்களில் வேர்ச்சொல் அகராதியுடன் விளக்கமான இலக்கண நூலாக வெளியிட்டார்.

எமனோ 1939-ல் நீலகிரியில் களப்பணி செய்து படகர்களின் மொழியின் உயிர் ஒலிகள் பற்றி ஆராய்ந்து எழுதினார். படகர்கள் பற்றி பின்னாளில் ஆராய்ந்த ஆய்வாளர்கள் எமனோவின் படகர்கள் குறித்த கருத்தை ஏற்பதில்லை. 1971-ல் தோடர்கள் பாடிய 260 பாடல்களை மொழிபெயர்ப்புடன் வெளியிட்டார். 'தோடர்களின் இனக்குழு விளக்கம்' 1004 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்தது. 1974-ல் தோடர்களின் சடங்குகளும் வழிபாடும் பற்றி ஆராய்ந்து எழுதினார். 'தோடர்களின் இலக்கணமும் பிரதியும்' என்று 1984-ல் வெளியிட்ட நூலும் குறிப்பிடத்தக்கது.

நாட்டுப்புறவியல் ஆய்வு

எமனோ மொழிக்கூறுகளை ஆராயும் அதே நேரத்தில் அந்த மொழிபேசும் மக்களின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் ஆராய்ந்தார். மலையின மக்களிடம் இருந்து பாடல்கள், கதைகள் யாவற்றையும் தம் ஆய்வுக்குரிய தரவுகளாகத் தொகுத்தார். அவ்வகையில் அவர் தொகுத்த நாட்டுப்புறவியல் தரவுகள் 'கோடா பிரதிகள்' (1944-46), 'கோலமி நாட்டுபுறக் கதைகள்' (1955), 'தோடாமொழி நாட்டுப்புற இலக்கியங்கள்' (1984), 'நாட்டுப்புறக் கதைகள்' என்ற பெயர்களில் வெளியிடப்பட்டன.

வாய்மொழி இலக்கியத்திற்கு நிறைய பங்களிப்பு செய்தார். கதைகள், பாடல்கள், சொற்பொழிவுகள் பலவற்றைப் பதிவு செய்தார். பஞ்சாப் விடுகதைகள் பற்றி டைலர் என்பவருடன் இணைந்து எழுதினார். திராவிட நாட்டுப்புறக் கதைகளில் உள்ள எதிரொலிச் சொற்கள் பற்றி எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

மர்ரே பான்சன் எமனோ 285 கட்டுரைகளும் 25 நூல்களும் 98 ஆய்வுகளும் வெளியிட்டார். யேல் பல்கலைக்கழகத்தில் 1931-ல் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சம்பலதத்தா இயற்றிய 'வேதாளம் சொன்ன 25 கதைகள்' என்ற நூல் பற்றி ஆராய்ந்தார். 1935-ல் இதை விரிவுபடுத்தி நூலாக்கினார். பழைய சிந்துச் சமவெளி சார்ந்த நாகரிகங்கள் பற்றி அறிய உதவும் நூல் இது. இந்தியா பற்றி அறிய உதவும் பல நூல்களை எமனோ இக்காலத்தில் எழுதினார். 1962-ல் காளிதாசரின் சாகுந்தலத்தை ஆங்கிலத்தில் விளக்கத்துடன் பதிப்பித்தார். இந்திய நாட்டுப்புறவியல் கதைகள் பற்றிய ஆய்வு நிகழ்த்தி 1943-47 இந்திய நாட்டுப்புறவியல் கதைகள் பற்றிய ஆய்வு நிகழ்த்தி தான் கண்டறிந்தவற்றை எழுதினார். 1941-ல் சமஸ்கிருத மூக்கொலிகள் பற்றி விரிவாக எழுதினார். 1952-ல் 'சமஸ்கிருத சந்தி மாற்றுப்பெயர்கள்' என்ற சிறு நூலையும் வெளியிட்டார். 1958-ல் இந்திய வேர்ச்சொற்கள் பற்றி எழுதினார்.

1935-38 ஆண்டுகளில் இந்தியாவில் களப்பணி செய்தபொழுது இந்திய வாழ்க்கைமுறை குறித்தஅனைத்து விவரங்கள் பற்றி அறியும் சூழல் எமனோவுக்கு அமைந்தது. தமிழ்நாட்டுக் கோயில்கள், ஒரிசா, மைசூர் சமண நினைவுச்சின்னங்கள், அஜந்தா, எல்லோரா ஓவியம், காசி, சென்னை, கல்கத்தா, மும்பை, வங்காளத்தில் காணப்படும் பார்ப்பனர்களின் உணவுமுறைகள், தென்னாட்டு உணவுமுறைகள் பற்றி ஆராய்ந்து எழுதினார். 1992 -ல் இந்தியாவில் நகைச்சுவை உறவுகள் பற்றி எழுதியுள்ளார்.

சிறப்புகள்

  • சிகாகோ பல்கலைக்கழகம் (1968), டல்ஹௌசிப் பல்கலைக்கழகம் (1970) ஐதராபாத் பல்கலைக்கழகம் (1987) வி.கே.காமேசுவர் இப்தர்பங்கா பல்கலைக்கழகம் (1997) ஆகியன இவருக்குச் சிறப்புநிலை முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளன.
  • 2004-ல் 32-ஆவது அனைத்து இந்திய திராவிட மொழியியல் மாநாட்டில்(வாரங்கல்) எமனோ பற்றிய கட்டுரைகள் படிக்கப்பட்டன. இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2005-ல் பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகச் சிறப்பிதழ் வெளிவந்தது. இதில் எமனோ அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு, வெளியீடுகள் இடம்பெற்றன.
  • மைசூரில் உள்ள இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் எமனோவைச் சிறப்பிக்கும்பொருட்டு ஆய்வுகள், படைப்புகள் பற்றி பல கட்டுரைகள் படிக்கப்பட்டன.
  • எமனோவின் கட்டுரைகள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பேங்ராபட்டு நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

மறைவு

மர்ரே பான்சன் எமனோ ஆகஸ்ட் 29, 2005-ல் காலமானார். நோவாஸ்காட்டியாவில் அவரின் மனைவியின் கல்லறை அருகே அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நூல்கள்

  • Jambhaladatta's Version of the Vetālapañcavinśati: A Critical Sanskrit Text in Transliteration (1934)
  • A Course in Annamese: Lessons in the Pronunciation and Grammar of the Annamese Language (1943)
  • The Sinduvāra Tree in Sanskrit Literature (1944)
  • Kota Texts (3 vols, 1944–46)
  • An Annamese Reader (with Lý-duc-Lâm and Diether von den Steinen, 1944)
  • Annamese-English Dictionary (with Diether von den Steinen, 1945)
  • The Strangling Figs in Sanskrit Literature (1949)
  • Studies in Vietnamese (Annamese) Grammar (1951)
  • Kolami, a Dravidian Language (1955)
  • A Dravidian Etymological Dictionary (with Thomas Burrow, 1961; 2nd ed. 1984)
  • Brahui and Dravidian Comparative Grammar (1962)
  • Abhijñāna-Śakuntala: Translated from the Bengali Recension (1962)
  • Dravidian Borrowings from Indo-Aryan (with T. Burrow, 1962)
  • India and Historical Grammar (1965)
  • Sanskrit Sandhi and Exercises (1968)
  • Dravidian Comparative Phonology: A Sketch (1970)
  • Toda Songs (1971)
  • Ritual Structure and Language Structure of the Todas (1974)
  • Language and Linguistic Area: Essays (1980)
  • Toda Grammar and Texts (1984)
  • Dravidian Studies: Selected Papers (1994)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Oct-2023, 12:30:29 IST