under review

போர் மலைதல்

From Tamil Wiki

போர் மலைதல் (செரு மலைதல்) கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. பசுவினம் சென்ற அடிச்சுவட்டின் மேல் தொடர்ந்து சென்ற கரந்தையார் அவற்றை மீட்க வேண்டி மலைவது ஆதலின் போர் மலைதல்(போரிடல்) எனப் பெயர் பெற்றது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஆரவாரத்தோடும் மின்னும் வேற்படைகளொடும் சென்ற கரந்தை மறவர்கள் வெட்சியாரைக் கண்டனர்; மேற்கொண்டு செல்லா வண்ணம் அவர்களைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டனர்; அச்சம் தோன்றும்படியாகத் தாக்கினர்; அதில் ஒரு சமயம் கரந்தையார் ஓங்கினர்; வெட்சியார் தாழ்ந்தனர், மற்றொரு சமயம் வெட்சியார் ஓங்கினர்; கரந்தையார் தாழ்ந்தனர். இவ்வாறு நிகழ்த்திய உறழ் போரைப் (மாறி மாறி வரும்) பற்றியது போர் மலைதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி உறழ்செருப் புரிந்தன்று(கொளு 2.5)

வெண்பா

புலிக் கணமும் சீயமும் போர்க் களிறும் போல்வார்
வலிச்சினமும் மானமும் தேசும் - ஒலிக்கும்
அருமுனை வெம்சுரத்து ஆன்பூசற்கு ஓடிச்
செரு மலைந்தார் சீற்றம் சிறந்து (25)

பொருள்: கரந்தை மறவர்கள் இனத்தால் புலியையும், மானத்தால் சிங்கத்தையும், பெருமையால் யானைக் கூடத்தையும் போன்றவர்கள். இவர்கள் ஆரவாரத்துடன் பாலை நிலத்தில் கொடிய வெய்யிலில் ஆநிரைகளை நோக்கி சினம் மிகுந்து வெட்சி மறவருடன் போரிட்டனர்.

எடுத்துக்காட்டு

புறநானூறு 259
  • பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்
  • திணை:கரந்தை; துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்)

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல்; செல்லல்; சிறக்கநின் உள்ளம்;
முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே.

பொருள்: இடுப்பில் விளங்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! பகைவர்கள் கவர்ந்த ஆநிரை, எருதுகளுடன் சென்றுகொண்டிருக்கின்றன. தெய்வத்தின் ஆற்றல் உடலில் புகுந்த புலைத்தியைப் போல் ஆநிரை துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது, இலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் ஒளிந்திருப்பதைக் காண்பாயாக. ஆகவே, இப்பொழுது அவற்றை மீட்கச் செல்லாதே. உன் முயற்சியில் நீ சிறப்பாக வெற்றி பெறுவாயாக.

உசாத்துணை

கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Apr-2025, 09:42:24 IST