under review

பிள்ளை லோகாசாரியார்

From Tamil Wiki
பிள்ளை லோகாசாரியார், ஶ்ரீரங்கம்

பிள்ளை லோகாசாரியார்(பொ.யு. 1205 - 1323) வைணவ ஆசாரியர்களில் ஒருவர். ஓராண் வழி ஆசாரியர்களில் ஒருவர். முமுக்ஷுப்படி, ஶ்ரீவசன பூஷணம் போன்ற நூல்களை இயற்றியவர்.

தில்லி சுல்தான்கள் படையெடுப்பின்போது திருவரங்கத்து உற்சவரான அழகிய மணவாளனை வேறிடம் கொண்டு சென்று காத்தவர். ப்ரமாணம்(மெய்ப்பொருளை உணரக் காரணமான நூல்) பிரமேயம்(உணர வேண்டிய தெய்வம்) இரண்டையும் காத்தவராக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிள்ளை லோகாசாரியார் திருவரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், சீரங்க நாச்சியாருக்கும் பொ.யு. 1205-ல் ஐப்பசி திருவோணத்தன்று பிறந்தார். உடன் பிறந்தவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் மாணவர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த கியாசுதீன் துக்ளக்கின் மகன் உலூக்கானுக்கு (முகமது பின் துக்ளக்) இளவரசனாக முடி சூட்டப்பட்டது.

பொ.யு. 1321-ல் தில்லி சுல்தான் துக்ளகின் படைகள் தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தன. தொண்டை மண்டலத்தைச் சேதப்படுத்திய படை திருச்சியை நோக்கிச் சென்றது. அங்குள்ள சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் போன்றவை சேதப்படுத்தப்பட்டன.

ஸ்ரீரங்கத்தை நோக்கி படை வரும் செய்தி கேட்டு ஸ்ரீரங்கநாராயண ஜீயர், அர்ச்சகர்கள், திருகோபுரத்து நாயனார், பிள்ளைலோகாசார்யார் , ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் சிலர் திருவரங்கனின் மூலவரைக் காப்பதற்காக கருவறை வாசலை கல்சுவரால் அடைத்து, சுவருக்கு முன்பு தற்காலிகமாக ஒரு உற்சவர் விக்கிரகத்தை வைத்தனர். ஸ்ரீரங்க நாச்சியார் மூலவரும், திருவாபரணங்களும் வில்வ மரத்தின் அடியிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடைய மாணவர்களும் உற்சவரான அழகியமணவாளனையும், நாச்சியாரையும் மூடுபல்லக்கில் ஏற்றிக் கொண்டு, காவேரி ஆற்றின் தெற்கு கரையிலுள்ள மாரச்சிபுரத்தை அடைந்து, மணப்பறை மற்றும் வேலூர் வழியாகக் காட்டுவழியில் சென்று யானை மலை அடிவாரத்தில் ஜோதிஷ்குடி(கொடிக்குளம்) என்ற ஊருக்குச் சென்று சேர்ந்தனர். லோகாசாரியார் அங்கு ஒரு குகையில் விக்கிரகங்களை வைத்து ஆராதனை செய்து வந்தார். (48 ஆண்டுகளுக்குப் பிறகு திருவரங்கத்தில் அமைதி திரும்பியதும் அழகிய மணவாளன் திருவரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்). தனது இறுதிக்காலம் நெருங்கியதை உணர்ந்து தந்து சீடர்களில் ஒருவரான திருமலை ஆழ்வாரை தமக்கடுத்த ஆசார்யராக நியமித்தார்.

ப்ரமாண ரக்ஷணம்(மெய்ப்பொருளை உணரக் காரணமானவற்றைக் காத்தல்(கூறல்) ), பிரமேய ரக்ஷணம்(உணர வேண்டிய தெய்வத்தைக் காத்தல்) இரண்டையும் ஆற்றிய ஆசார்யராக இவர் கருதப்படுகிறார்.

தொன்மம்

மணப்பாக்கத்து நம்பி என்னும் வைணவர் காஞ்சியில் கோயில் கொண்ட தேவப் பெருமாளையே குருவாக அடைந்தவர். ஓர் நாள், தேவப்பெருமாள் பாதியிலேயே தன் உபதேசத்தை நிறுத்தி, மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே கற்பிப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் சன்னிதியில் பிள்ளை லோகாசாரியர் மாணவர்களுக்கு உபதேசிப்பதைக் கண்டார். ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேசங்களைக் கேட்ட நம்பி, அவை தேவப்பெருமாள் தமக்குக் கூறியவற்றின் தொடர்ச்சியாக அமைந்ததைக் கண்டு வியந்து, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரை வணங்கி "அவரோ நீர்" என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் "ஆவது எது?" (ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன? ) என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

நூல்கள்

பிள்ளை லோகாசாரியாரின் பதினெட்டு படைப்புகளின் தொகுப்பு 'அஷ்டதச ரகசியம்' என வைணவர்களால் அழைக்கப்படுகிறது. வைணவ மடங்களில் உபதேசிக்கப்பட்டவகளை முதன்முறையாக எழுத்துக்களில் கொணர்ந்தார். பிள்ளை லோகாசாரியார் இயற்றிய நூல்களில் மிக முக்கியமானவை

  • முமுக்ஷுப்படி - ரஹஸ்ய த்ரயத்தின் (திருமந்திரம், த்வய மந்திரம், சரம் ஸ்லோகம்) விளக்கம் கூறும் நூல். வைணவர்கள் திருமந்திரம்(எட்டெழுத்து) , த்வய மஹா மந்திரம் மற்றும் சரம ஸ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை எதனை இன்றி அறிய முடியாதோ அத்தகைய நூல் என்று கருதப்படுகிறது.
  • தத்வ த்ரயம் - இது 'குட்டி பாஷ்யம்' என்றும் அறியப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித்(ஆன்மா), அசித்(அஞ்ஞானம்), மற்றும் ஈஸ்வரன்(இறைவன்) என்ற மூன்று தத்துவங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதற்கு மணவாள மாமுனிகள் எழுதிய உரை குறிப்பிடத்தக்கது.
  • ஸ்ரீவசன பூஷணம் - ஆழ்வார் மற்றும் வைணவ ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே எழுதப்பட்டது. பிள்ளை லோகாசாரியாரின் நூல்களில் மிக முக்கியமானது. மணவாளமாமுனிகள், திருநாராயணபுரத்து ஆயி இருவரும் இதற்கு உரை எழுதினர்.

மறைவு

பிள்ளை லோகாசாரியார் சன்னதி-ஜ்யோதிஷ்குடி

பிள்ளை லோகாசாரியார் பொ.யு. 1323 ஆனி மாதம் தனது 118-வது வயதில் மறைந்தார். ஜ்யோதிஷ்குடியில் பிள்ளை லோகாசாரியார் சன்னதி உள்ளது.

பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளைப் போற்றும் விதத்தில் வேதாந்த தேசிகர் 'லோகாசார்ய பஞ்சாஶத்' என்னும் பிரபந்தத்தை இயற்றினார்.

வாழி திருநாமம்

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.

மாணவர்கள்

  • கூரகுலோத்தம தாஸர்
  • விளாஞ்சோலைப் பிள்ளை
  • திருவாய்மொழிப் பிள்ளை
  • மணப்பாக்கத்து நம்பி
  • கோட்டூர் அண்ணர்
  • திருப்புட்குழி ஜீயர்
  • திருக்கண்ணங்குடி பிள்ளை
  • கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்.

நூல் பட்டியல்

  • யாத்ருச்சிக படி
  • ஸ்ரீ வசன பூஷணம்
  • தத்வத்ரயம்
  • ஷ்ரியபதி படி
  • முமுக்ஷுப்படி
  • பரந்த படி
  • தனி ப்ரணவம்
  • தனி த்வயம்,
  • தனி சரமம்
  • அர்த்த பஞ்சகம்
  • தத்வ சேகரம்
  • ஸார ஸங்க்ரஹம்
  • அர்ச்சிராதி
  • ப்ரமேய ஶேகரம்
  • ஸம்ஸார ஸாம்ராஜ்யம்
  • ப்ரபன்ன பரித்ராணம்
  • நவரத்ன மாலை
  • நவ வித ஸம்பந்தம்
  • ஸ்ரீ வசன பூஷணம்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:15:48 IST