under review

பிலோ இருதயநாத்

From Tamil Wiki
யார் இந்த நாடோடிகள்? (பிலோ இருதயநாத்)
பிலோ இருதயநாத் சைக்கிளில் ஓய்வெடுக்கும் முறை

பிலோ இருதயநாத் (1916 - செப்டம்பர் 2, 1992) மானிடவியல் ஆராய்ச்சியாளர். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறையை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிலோ இருதயநாத் 1915-ல் மைசூரில் பொது மருத்துவரான டாக்டர் ஏ.எப். மைக்கேலுக்கு மகனாகப் பிறந்தார். சென்னை சாந்தோமில் படித்தார். சென்னை மந்தை வெளியில் உள்ள லாசர் கோவில் தெருவில் வசித்தார். பள்ளித் தமிழ் ஆசிரியராக சென்னையில் இருபத்தைந்து ஆண்டுகாலம் பணி செய்தார். உலக யுத்ததின் போது கேப்டனாக பணியாற்றினார். அதனால் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்த அனுபவம் அவருக்கிருந்தது. இருதயநாத்தின் தாய்வழி தாத்தா, இந்தியாவிற்கு வரும் வெள்ளைக்காரர்களுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிக்காட்டும் வழிகாட்டி. பிலோ இருதயநாத் இந்தியா முழுவதும் மானுடவியல் ஆய்வுக்காக மிதிவண்டியில் சுற்றியலைந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இந்திய மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி. தன் பயண அனுபவங்களையெல்லாம் தொகுத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை அறுபதிற்கும் மேற்பட்ட இதழ்களில் எழுதினார். இதை 'மானிடவியல் ஆராய்ச்சி நூல்’ என்று அறிஞர்கள் கருதுகின்றனர். "ஆதிவாசிகளின் இதயவாசி" காடர்களைக் கண்ட விதம் என்ற கட்டுரை முக்கியமான படைப்பு. நீலகிரி படுகர் இன மக்களைப் பற்றிய இவரது குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இவரது பயணக் கட்டுரைகளில் பல இடங்களில் புறநானூறு போன்ற சங்க இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. டாக்டர் பிலோ இருதயநாத் எழுதிய அறுபத்து மூன்று நூல்களில் முப்பத்தி ஏழு மட்டுமே புத்தகமாக வெளிவந்துள்ளது. இன்னும் அச்சிடப்பட வேண்டிய கட்டுரைகளும் உள்ளன.

பிலோ இருதயநாத்

விருதுகள்

  • 1960-களில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
  • 1978-ல் இந்திய அரசின் நல்லாசிரியர் விருது

மறைவு

பிலோ இருதயநாத் செப்டம்பர் 2, 1992-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • அறிவியல் பூங்கா - 1967 (இளங்கோ பதிப்பகம்)
  • ஆதிவாசிகள் - 1961 (கலைமகள் காரியாலயம்)
  • ஆதிவாசிகள் மறைந்த வரலாறு - 1977 (தமிழ் செல்வி நிலையம்)
  • இமயமலை வாசிகள் - 1967 (மல்லிகை பதிப்பகம்)
  • ஏழைகளின் குடும்பக்கலை - 1965 (அன்னை நிலையம்)
  • காட்டில் என் பிரயாணம் - 1967 (இளங்கோ பதிப்பகம்)
  • காட்டில் கண்ட மர்மம் - 1984 (வானதி பதிப்பகம்)
  • காட்டில் மலர்ந்த கதைகள் - 1984 (வானதி பதிப்பகம்)
  • காடு கொடுத்த ஏடு - 1965 (கலைமகள் காரியாலயம்)
  • குறிஞ்சியும் நெய்தலும் (தென்றல் நிலையம்)
  • கோயிலும் குடிகளும் (தென்றல் நிலையம்)
  • கோயிலைச் சார்ந்த குடிகள் (தென்றல் நிலையம்)
  • கேரளா ஆதிவாசிகள் - 1989 (வானதி பதிப்பகம்)
  • கொங்கு மலைவாசிகள் - 1966 (மல்லிகைப் பதிப்பகம்)
  • பழங்குடிகள் - 1978 (தமிழ் செல்வி நிலையம்)
  • மக்கள் வணங்கும் ஆலயம் - 1965 (அன்னை நிலையம்)
  • மேற்கு மலைவாசிகள் - 1979 (மல்லிகை பதிப்பகம்)
  • தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு (தென்றல் நிலையம்)
  • நீலகிரி படகர்கள் - 1965 (மல்லிகைப் பதிப்பகம்)
  • யார் இந்த நாடோடிகள் - 1985 (வானதி பதிப்பகம்)

உசாத்துணை


✅Finalised Page