under review

பித்துக்குளி முருகதாஸ்

From Tamil Wiki
பித்துக்குளி முருகதாஸ்

பித்துக்குளி முருகதாஸ் ( ஜனவரி 25, 1920 - நவம்பர் 17, 2015) பக்திப் பாடகர். ஆன்மீகவாதி, சுதந்திர போராட்ட வீரர். முருகர் பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்.

பித்துக்குளி முருகதாஸ்

வாழ்க்கைக் குறிப்பு

முருகதாஸ் ஜனவரி 25, 1920-ல் கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு இணையருக்கு மகனாகப் பிறந்தார். பாலசுப்பிரமணியம் என்பது இயற்பெயர். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன். பித்துக்குளி முருகதாஸ் பிக்பஜார் பள்ளியிலும், வீரசாமி பள்ளியிலும் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர். அறுபது வயதில், உடன் பக்திப் பாடல்களை பாடிய தேவி சரோஜா என்ற அம்மையாரை மணந்து கொண்டார்.

பித்துக்குளி முருகதாஸ்

சுதந்திர போராட்டம் பங்கேற்பு

1931-ல் பித்துக்குளி முருகதாஸ் தனது பதினொன்றாம் வயதில் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு சில நாட்கள் சிறையிலும் இருந்தார். போராட்டத்தில் பங்கேற்ற இவர்மீது 1936-ல் போலீசார் நடத்திய தாக்குதலில் இவரின் இடதுகண் பார்வை பறிபோனது. அதிலிருந்து கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். மைசூர் மஹாராஜா ஜெயசாமராஜேந்திர உடையார் திருமணத்தின் போது, கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, இவரும் விடுதலை ஆனார்.

ஆன்மிகம்

பித்துக்குளி முருகதாஸ்

1936-ல் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியை சந்தித்த பின்னர், பக்தி வழிக்கு வந்தார். 1940-ல் ரிஷிகேசம் முதலான வடநாட்டுத் தலங்களுக்கு பாத யாத்திரை சென்றார். 1935-ல் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் நுழைந்தார். பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். 1939-ல் கேரள மாநிலத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தின் ஆன்மீககுரு சுவாமிராமதாஸ் "முருகதாஸ்" என்ற பெயரை பித்துக்குளி என்ற பெயருடன் இணைத்தார். அன்று முதல் "பித்துக்குளி முருகதாஸ்" என்றே அழைக்கப்பட்டார். 1940-ல் சேந்தமங்கலத்தில் இருந்த சுவாமி ஸ்வயம் பிரகாஷ் என்ற அவதூதரிடம் இருந்தார். பிறகு கால்நடையாகவே தீர்த்த யாத்திரையாக பல இடங்களுக்குச் சென்று வந்தார்.

இசை

பித்துக்குளி முருகதாஸ், கிருபானந்தவாரியார், யோகி ராம்சரத்துடன்

1947-ல் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். தமிழ்க் கடவுளான முருகன் மீது ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு போன்ற பாடல்களைப் பாடி பிரபலப்படுத்தினார். தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்தார். கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர் இயற்றிய பாடல்களை பாடியபோது, இவர் மற்றவர்களால் கவனிக்கப்பட்டார். மனைவி தேவியும் பித்துக்குளி முருகதாஸும் இணைந்து, ராதா கல்யாணம் பாடல்களை பாடிப் பிரபலம் ஆக்கினர். அவர் பாடிய 'அலைபாயுதே கண்ணா’ மற்றும் தெய்வம் திரைப்படத்தில் வரும் 'நாடறியும் நூறு மலை’ பாடல்கள் மிகவும் பிரபலமானவை. சந்தப்பத்திற்கு ஏற்றவகையில் பாடல்களை புனைந்து பாட வல்லவர்.

சேவை

1947-ல் வாலாஜாபேட்டையில் உள்ள தீனபந்து ஆஸ்ரமத்தின்(அனாதை இல்லத்தின்) பாதுகாவலர்களுள் ஒருவரானார். சென்னையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ ஜோதிர் மாயா தேவி அறக்கட்டளையை தொடங்கினார். தனது பக்தி பாடல் கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்க வகை செய்தார்.

பித்துக்குளி முருகதாஸ் (நன்றி: திஇந்து தமிழ்)

விருதுகள்

  • சங்கீத சாம்ராட்: 1956-ல் சுவாமி சிவானந்தரால் வழங்கப்பட்டது
  • கலைமாமணி: 1984-ல் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது
  • குரு சுராஜானந்தா விருது: 1989-ல்
  • மதுர கான மாமணி: 1994-ல் இலண்டனில்
  • 1998-ல் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • தில்லி தான்சேன் விழாவில் தியாகராஜர் விருது வழங்கப்பட்டது.
  • தலைசிறந்த இசை தேவர் - சே செல்லீசு நாட்டில் வழங்கப்பட்டது.

மறைவு

நவம்பர் 17, 2015-ல் உடல் நலக் குறைவு காரணமாக தொண்ணூற்று ஐந்தாவது வயதில் சென்னையில் காலமானார்.

பித்துக்குளி முருகதாஸ் கலைமாமணி விருது பெறும் போது

பாடிய பாடல்கள்

பக்திப் பாடல்கள்
பித்துக்குளி முருகதாஸ் ரமணருடன்
  • மகர குண்டலம்
  • முடியப் பிறவிக்கடல்
  • ஹரி குணம் படி
  • கல்யாண முருகனுக்கு
  • அப்பா அப்பா
  • உலகம் எங்கும்
  • ஸ்வாகதம்
  • ஆறிரு தடந்தோள்
  • செந்தூர் முருகா
  • கண்ணன் பார்வை
பித்துக்குளி முருகதாஸ் மனைவி தேவி சரோஜாவுடன்(நன்றி: The Hindu)
திரைப்பட பக்திப் பாடல்கள்
  • நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை - தெய்வம் (திரைப்படம்)

உசாத்துணை


✅Finalised Page