under review

பாம்பன் சுவாமிகளின் பக்திப் பனுவல்கள்

From Tamil Wiki
பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் பல்வேறு பக்திப் பனுவல்களை, குகத் தத்துவ நூல்களை இயற்றியுள்ளார். அவை மந்திர சித்தி பெற்றவையாக கருதப்படுகின்றன. மொத்தம் 6666 பாடல்களையும் பல்வேறு உரை நூல்களையும் பாம்பன் சுவாமிகள் இயற்றியுள்ளார்.

பாம்பன் சுவாமிகளின் பக்திப் பனுவல்கள்

பாம்பன் சுவாமிகள், தமது பாடல்களிலும் உரை நூல்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் மிக விரிவாக விளக்கியுள்ளார். சுவாமிகளின் பாடல்கள் மந்திர சித்தி தரக்கூடியவை என்பது பக்தர்களின் கருத்து.

பாராயண நூல்கள்

முருகனுக்கு ஆறுமுகங்கள். ஆறு படை வீடுகள். ஆறு காலங்களிலும் வணங்கத் தக்க பெருமையுடையவன். ஆறெழுத்து அவனுக்குரிய மந்திரம். அதனாலேயே தான் இயற்றிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6666 என்று வருமாறு பாம்பன் சுவாமிகள் தன் நூல்களை இயற்றினார்.

நான் பாடு பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்
கான்பாடு வண்டறையும் கழுகுமலை முருகா
- என்றும்
எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல்
கனைத் தண்டை சிலம்ப வரும் கழுகுமலை முருகா”

- என்றும் முருகனை வேண்டித் துதித்துள்ளார் பாம்பன் சுவாமிகள்.

சண்முக கவசம்

பாம்பன் சுவாமிகள் பாடிய செய்யுள் நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று சண்முக கவசம்.

“அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகளறு தெய்வமாகி
எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈசனான
திண்டிறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க”

- எனத் தொடங்கும் இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் மானுட உடலின் பாகங்களைக் குறிப்பிட்டுக் குமரக் கடவுள் அவற்றைக் காக்க வேண்டும் என்று கவச நூலாகப் பாம்பன் சுவாமிகள் பாடியுள்ளார். உடல் நலப் பிரச்சனைகள், மன நலப் பிரச்சனைகள், பகைவர்களினால் ஏற்படும் தொல்லைகள், ஏவல், பில்லி, சூனியங்கள், வம்பு வழக்குகள், சச்சரவுகள், சங்கடங்கள், மனக் குழப்பங்கள், செல்லும் வழியில் ஏற்படும் ஆபத்துகள் போன்றவை நீங்க பக்தர்கள் இந்நூலைப் பாராயணம் செய்கின்றனர். பாம்பன் சுவாமிகளே இதனைப் பாராயணம் செய்து தனது வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பகை கடிதல்

பாம்பன் சுவாமிகள் அருளிய முக்கியமான செய்யுள்களில் ஒன்று 'பகை கடிதல்'.

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

- என்று தொடங்கும் இந்தப் பாடல் மிகுந்த மந்திர சித்தி உள்ளதாக பக்தர்களால் கருதப்படுகிறது. ஒருவரைத் துன்புறுத்தும் பகைகள் நீங்க, பகைவர்கள் அகல, துன்பங்கள் விலக ‘பகை கடிதல்’ நூலைத் பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து பாராயணம் செய்து வருவதன் மூலம் ஒருவரின், பகை எதிர்ப்புகள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

குமார ஸ்தவம்

ஓம் ஷண்முக பதயே நமோ நம!
ஓம் ஷண்மத பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம!

- எனத் தொடங்கும் 'குமார ஸ்தவம்' துதி, பாம்பன் சுவாமிகள் தனக்கு ஏற்பட்ட வெப்பு நோயிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கு இயற்றப்பட்டதாகும். நோய்களிலிருந்தும், தீராத பிணிகளில் இருந்தும் ஒருவர் விடுபட தினமும் காலை, மாலை பாராயணம் செய்ய வேண்டிய துதியாக இது கருதப்படுகிறது.

திருவடித் துதி

அரஹர மந்திர அமல நிரந்தர
சரவண சம்ப்ரம சங்கர புத்திர
சுரபதி பூம சுகோதய போதக
பரபுர சததள பாத நமஸ்தே!”

- எனத் தொடங்கும் தௌத்தியம் என்கிற 'திருவடித் துதி' பாராயணம் செய்பவர்களுக்கு அளவற்ற நன்மையைத் தர வல்லதாக பக்தர்களால் போற்றப்படுகின்றது.

சண்முக நாமாவளி

ஹரஹரசிவசிவ சண்முகநாதா
ஹரஹரசிவசிவ வென்முகநாதா
ஹரஹரசிவசிவ பரமவிலாசா
ஹரஹரசிவசிவ வபயகுகேசா”

- எனத் தொடங்கும் சண்முக நாமாவளி, பஜனைப் பாடலாகப் பாடத் தகுந்த ஒன்றாகும். மன வலிமையைத் தருகின்றதாக இதில் உள்ள பாடல் வரிகள் அமைந்துள்ளன.

வேற்குழவி வேட்கை

பதினேழும் ஒன்றும் விழை செய்ய பாதம் ஒலிட நன்
மதிபோல் மாமை முக மண்டலம் பகுக்க நகும்
கதியே வேற்குழவி நின்னைக் காதலால் தழுவ
நிதியே வாராயோ கைகள் நீளுகின்றனவே

- எனத் தொடங்கி, பத்துப் பாடல்களில் அமைந்துள்ளது ‘வேற்குழவி வேட்கை’ நூல். இந்நூல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற, தினமும் காலை, மாலை இரு வேளை முருகன் திருவுரு முன் பாராயணம் செய்ய வேண்டிய பாடலாக இது கருதப்படுகிறது. இப்பாடல் குறித்துப் பாம்பன் சுவாமிகள், “இத் திருப்பத்து காலை மாலை பூசிக்கப்பட்டு, பத்தி பிறங்கப் பாடப்படுமாயின் புத்திர தோஷம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.” என்று கூறியுள்ளார்.

பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்

முருகனின் அருள் பெறப் பாட வேண்டிய பாடலாக இந்த நூல் கருதப்படுகிறது. ”இதனைப் பாடுபவர்களுக்கு பரிபூரணமாக முருகன் அருள் உண்டாகும்”என பாம்பன் சுவாமிகள் உறுதி கூறியுள்ளார். இந்தப் பாடலை முறைப்படி பாராயணம் செய்யும் போது முருகனின் அருள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

அட்டாட்ட விக்கிரக லீலை

பாப நாசம், சத்துரு ஜெயம், ஆயுள் விருத்தி, முக்திப் பேறு இவற்றிற்காகப் பாராயாணம் செய்ய வேண்டிய துதி நூல் இது.

பொது நூல்கள்

சஸ்திர பந்தம்
சித்திரக்கவிகள்

பல்வேறு சித்திரக் கவிகளை பாம்பன் சுவாமிகள் இயற்றியுள்ளார். கமல பந்தம், மயூர பந்தம், சஸ்திர பந்தம், மாலை மாற்று, கோமூத்திரி, நான்காரைச் சக்கரம் போன்றவற்றோடு, பிறிதுபடு பாட்டுப் பிரபந்தம், பிறிதுபடு துவித பங்கி, பிறிதுபடு திரி பங்கி, பகுபடு பஞ்சகம், தங்க ஆனந்தக் களிப்பு, சஷ்டி வகுப்பு என்ற தலைப்புகளில் சித்திரக்கவிகளை இயற்றியுள்ளார்.

சஸ்திர பந்தம்

பாம்பன் சுவாமிகள், முருகப்பெருமானின் வேலைப் புகழ்ந்து இயற்றிய செய்யுள். `சஸ்திர பந்தம்'. ‘அஸ்திரம்' என்பது இருக்கும் இடத்திலிருந்து இலக்கை நோக்கிச் செல்வது. ‘சஸ்திரம்' என்பது எப்போதும் நமக்குக் கவசமாக இருந்து நம்மைப் பாதுகாப்பது. பாம்பன் சுவாமிகள் முருகனின் வேலைத் துதித்து, வேலின் வடிவில் சித்திரக் கவியாகப் பாடியிருக்கும் பாடலே, ‘சஸ்திர பந்தம்’. நமது எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல் இந்த சஸ்திர பந்தத்திற்கு உண்டு என்பது பக்தர்களின் கருத்து.

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.

- என்னும் இப்பாடலை முறைப்படிப் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் சிறப்பு, செல்வச் செழிப்பு, நோய்கள் தீர்தல், ஞானம் அடைதல் ஆகியன உண்டாகும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீமத் குமார சுவாமியம்

இந்நூல் ஐந்து காண்டங்களும், 1192 செய்யுள்களும் அடங்கிய நூல். இந்நூல், சந்த நயம், இரட்டுற மொழிதல் போன்ற இலக்கிய நயங்ககளைக் கொண்டுள்ளது. சுவாமிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை, அவருக்கு இறைவனாகிய முருகன் அருள் புரிந்த விதத்தை, அவனுடைய பெருமைகளை விரிவாக விளக்குகிறது. தன் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை சுவாமிகள் இதில் ஒரு சுய சரிதம் போலக் கூறியுள்ளார். இதில் உள்ள 'அசோக சால வாசம்' நூலை, 'மயூர வாகன சேவன' விழாவில் கட்டாயம் இந்நூல் பாராயணம் செய்யப்பட வேண்டும் என்று சுவாமிகள் கட்டளையிட்டுள்ளார்.

சீவயாதனா வியாசம்

இந்நூல் நூல் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்தி இயற்றப் பெற்றது. அன்பர் ந. சுப்ரமண்யப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கப் பாடப்பட்டது. இதில் புலால் உணவு உண்பதால் ஏற்படும் தீமைகளை - எந்தெந்த உணவு உண்டால் உடலில் என்ன நோய்கள் ஏற்படும் என்பதை மிக விரிவாகப் பாம்பன் சுவாமிகள் சுட்டிக்காட்டி உள்ளார்.

சிவஞான தேசிகம்

இந்த நூலில் கடவுளைக் குறித்த வியாசம், தேவர்களைக் குறித்த வியாசம், வேதத்தைக் குறித்த வியாசம், சமயத்தைக் குறித்த வியாசம், சுப்பிரமணியரைக் குறித்த வியாசம் என மொத்தம் 32 வியாசங்கள் அடங்கி உள்ளன. இவ்வியாச நூல்களில், பாம்பன் சுவாமிகள் கடவுளைப் பற்றி, பரமசிவனைப் பற்றி, படைப்புத் தொழிலைப் பற்றி, பிரம்மாவைப் பற்றி, பிறவியைப் பற்றி என பலவற்றைப் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார். இவை அனைத்தும் பாம்பன் சுவாமிகளின் மேதா விலாசத்தையும் சித்தாந்தம், வேதம், உபநிடதம், வியாகரணம் போன்றவற்றில் அவருக்கு இருந்த நுட்பமான அறிவுத் திறனையும் காட்டும் நூல்களாகும்.

பிற நூல்கள்

பாம்பன் சுவாமிகள் இயற்றிய ‘திருப்பா’ - உரையாசிரியர்களின் மாறுபட்ட கருத்துக்களையும், வேதம் போன்றவற்றின் விளக்கம், இடைச் செருகல் போன்றவற்றையும் விளக்குகிறது. “பெருமிறைக்கவியுரை” என்பது திருப்பாவில் இடம் பெற்றுள்ள 'மாவிசித்திரக் கவி'க்கு சுவாமிகளாலே வரையப்பட்டுள்ள உரை நூலாகும். திருவலங்க திரட்டு முதல் கண்டம் இசைத்தமிழாக மலர்ந்துள்ளது. தேவாரப் பதிகங்களின் பண் அடிப்படையில் இவற்றைப் பாம்பன் சுவாமிகள் இயற்றியுள்ளார். சுவாமிகள் காசிக்குப் பயணம் மேற்கொண்டு, குமரகுருபரரின் மடத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். அது பற்றிய அனுபவத் தொகுப்பே காசியாத்திரை என்னும் நூல். 'சேந்தன் செந்தமிழ்' என்பது முற்றிலும் தனித்தமிழால் இயற்றப்பட்ட நூல். 'அனவரத பாராயணாஷ்டகம்' சிவன் உமை, விநாயகர், முருகன் இவர்கள் அனைவரும் ஒருவரே என்பதை விளக்கும் நூல். பாம்பன் சுவாமிகளால் இயற்றப் பெற்ற “சைவசமயச் சரபம்”, “நாலாயிரப் பிரபந்த விசாரம்” போன்ற நூல்கள் சைவ சமயத்த்தின் பெருமைகளைக் கூறும் நூல்களாகும். “கழுகுமலை பாதி; கந்தகிரி பாதி” என்னும் நூலில், தனக்காக தன் அடியவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார் பாம்பன் சுவாமிகள். 'மஞ்ஞை விடு தூது' என்ற நூலில் முருகனை அழைத்துவருமாறு, அவன் வாகனமான மயிலையே தூதாக அனுப்பி வேண்டுகிறார். 'குமரவேள் பதிற்றுப் பந்தாதி' என்னும் நூல், நூலில் முருகனின் அருமை, பெருமை, கருணை போன்றவற்றைக் கூறும் நூல். “பரிபூராணந்த போதம், தகராலாய ரகசியம்” போன்ற நூல்கள் சைவத்தின் சிறப்பை, பெருமையை, சைவ சித்தாந்தத்தின் உயர்வைக் கூறும் நூல்களாகும். அத்வைதத்தையும், அதன் பெருமையையும் விளக்கும் முகமாக பல்வேறு வேதாந்த நூல்களை ஆராய்ந்து சுவாமிகளால் இயற்றப்பட்ட நூல் ‘சுத்தாத்வைத நிர்ணயம்'. பாம்பன் சுவாமிகளின் ‘ஞான வாக்கியம்’, 'கந்தக் கோட்ட மும்மணிக் கோவை', 'வட திருமுல்லை வாயிற் குகபரர் வண்ணம்', 'நவ வீரர் நவரத்தினக் கலிவிருத்தம்' போன்றவை அனைத்தும் சிறுநூற்றிரட்டு என்னும் நூல் தொகுப்பில் அமைந்துள்ளன. 'செக்கர்வேள் செம்மாப்பு’, செக்கர் வேளிறுமாப்பு' என்ற இரு நூல்களும் சுவாமிகளின் சித்தாந்தக் கொள்கை முடிவினையும், அவர் தன் ஏனைய நூல்களில் கூறியுள்ளவற்றின் முடிவான உண்மையையும் தெரிவிக்கும் நூல்கள். ‘செவியறிவுறூஉ’ என்னும் நூலை பாம்பன் சுவாமிகள் தம் அன்பர்களுக்கு அளித்துள்ள அறிவுரைத் தொகுப்பாக, உபதேச நூலாக பக்தர்கள் கருதுகின்றனர். தமது ஞானகுருவான அருணகிரிநாதரின் வரலாற்றையும் பாம்பன் சுவாமிகள் எழுதியுள்ளார். இவ்வாறு செய்யுள், துதி, பாடல் என்று 6666 பாடல்களை பாம்பன் சுவாமிகள் இயற்றியுள்ளார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Aug-2023, 19:21:32 IST