under review

பரஞ்சோதி அடிகள்

From Tamil Wiki

பரஞ்சோதி அடிகள் (பொ.யு. 1887 - 1926) தமிழ்ப்புலவர், துறவி, உரைநடை ஆசிரியர், சொற்பொழிவாளர், பதிப்பாளர். காந்தி அடிகளின் நண்பர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருமறைக்காடு சீரிய பேரூருக்கு அருகிலுள்ள மலையன் குத்தகையில் சிதம்பரத் தேவருக்கும் அஞ்சலையம்மாளுக்கும் மகனாக பரஞ்சோதி அடிகள் பொ.யு. 1887-ல் பிறந்தார். அகமுடையார் குலம். தச்சன்குளம், ஞானப்பிரகாசம் ஆகிய தடாகங்களைப் புதுப்பித்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது எழுந்த கதர் முழக்கத்தில் பங்கு கொண்டு கதர் அணிந்தார். பாரதமாதா கதர் தொழிற்சாலையை நிறுவி கதர் நெசவுத் தொழிலலை ஊக்குவித்தார். காந்தி அடிகளின் நண்பர்.

கல்விப்பணி

தில்லையிலிருந்த அண்ணாமலைச் செட்டியாரின் மீனாட்சி கல்லூரி மாணவர்களுக்கு உதவினார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக சகஜானந்தரால் தோற்றுவிக்கப்பட்ட நந்தனார் கல்விக் கழகத்திற்கு உதவினார். சகஜானந்தரின் கல்வி முயற்சிகளுக்கு உடனிருந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

திருத்தில்லையிலிருந்து வந்த ஒரு துறவியைப் பின்பற்றி திருத்தில்லை வந்தார். பொன்னம்பல ஸ்வாமிகள் திருமடத்தில் காசிவாசி சிதம்பர அடிகளை அறிவாசிரியராக ஏற்று பணிகள் செய்தார். அறிவு நூல்களைக் கற்றார். ஆங்கிலம், வடமொழி ஆகியவைகளைக் கற்றார். பொன்னம்பல மடத்தினை நிர்வகித்து 'பெரியமடம்’ என்று அழைக்கும் நிலைக்குச் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

பொன்னம்பல அடிகள் உரை எழுதிய பகவத்கீதை, கைவல்ய நவநீதம் முதலிய நூல்களைப் பதிப்பித்தார்.தத்துவராய அடிகள் எழுதிய அடக்கன்முறை நூலை திருத்தம் செய்து பதிப்பித்தார். உரைநடை நூல்கள் பல எழுதினார். தனிப்பாடல்கள் பல எழுதினார். சிவப்பிரகாச அடிகளுக்கு இரங்கற்பா பாடினார். அறிவுரை மொழிகள் பல பொன்னம்பல மடத்தில் கற்பித்தார். சொற்பொழிவாளர். பல அவைகளுக்குத் தலைமை தாங்கி சொற்பொழிவு செய்துள்ளார்.

மறைவு

பரஞ்சோதி அடிகள் தனது முப்பத்தி ஒன்பதாவது வயதில் பொ.யு. 1926-ல் காலமானார். இவருடைய மறைவின் போது திருவையாறு அறுபத்துமூவர் மடத்தலைவர் பண்டித சித. நாராயணசாமியும், பொன்னம்பல சிவமும் இரங்கற்பாக்கள் பாடினர்.

உசாத்துணை


✅Finalised Page