under review

பத்துத் தூண் (மதுரை)

From Tamil Wiki

To read the article in English: Pathu Thoon (Madurai). ‎

பத்துத்தூண்
பத்துத்தூண் பழையபடம்
பத்துத்தூண் லிங்கம்

பத்துத் தூண் (பொ.யு. 1636): மதுரையில் அமைந்துள்ள பத்து பெரிய கல்தூண்கள். இவை திருமலை நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்தவை. மதுரையில் திருமலைநாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் அரண்மனையின் முகப்புத்தூண்கள் இவை என தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்

இடம்

மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனையையொட்டி வடபுறம் அமைந்துள்ள நவபத்கானா தெரு, மகால் வடம் போக்கித் தெரு, ஆகிய இரு தெருக்களின் இடையே பத்து தூண் சந்து என்று ஒரு குறுகிய தெரு உள்ளது. அதற்குள் சுற்றிலும் வீடுகள் அமைந்திருக்க நடுவே பத்துத்தூண்கள் மட்டும் வரிசையாக நிற்கின்றன.மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் ஆகியவை அருகே உள்ளன.விளக்குத்தூண் என்னும் பகுதியில் கடைகள் அமைந்துள்ள இடுங்கலான சந்து வழியாக இங்கே செல்லமுடியும்.

வரலாறு

மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய சுவர்க்க விலாசம் என்னும் அரண்மனை இன்று திருமலைநாயக்கர் மகால் என அழைக்கப்படுகிறது. அந்த அரண்மனை வளாகத்தின் ஒருபகுதியாக திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் தங்குவதற்காக ரங்கவிலாசம் என்னும் அரண்மனை பொயு 1636ல் கட்டப்பட்டது. அந்த மாளிகையின் முகப்புத்தூண்கள்தான் பத்துத் தூண்கள் எனப்படுகின்றது. ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன.

மதுரை வரலாற்றாசிரியரான ஆர்.வெங்கடராமன் திருமலைநாயக்கருக்குப் பின் நாயக்கர் அரசின் தலைநகர் மதுரையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டபோது ரங்கமகாலின் மதிப்பு மிக்க பகுதிகள் உடைத்து கொண்டுசெல்லப்பட்டன, எஞ்சிய மாளிகை அழியவிடப்பட்டது என்று கூறுகிறார்.பின் வடக்கு பக்கமிருந்த கோட்டைகள் சந்தா சாகிப் மதுரை மீது படையெடுத்து வந்தபோது தாக்கியதால் சேதமடைந்து காலப்போக்கில் காணாமல் ஆயின. இப்போது கிடைக்கும் பத்து தூண்கள் மட்டும் எஞ்சியன.

இவை தமிழக தொல்லியல் சின்னங்களாக ஜூலை 20, 1973-ல் அறிவிக்கப்பட்டன, தமிழ்நாடு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றன.

மதில் இடிப்பு

திருமலை நாயக்கர் மகாலின் வடக்கு பகுதியில் அமைந்த பத்து தூண்களுக்கு கிழக்கே ஒரு நுழைவாயில் இருந்திருக்கிறது. அதற்கான மதில் 274 மீட்டர் நீளமும், 183 மீட்டர் அகலமும், 12 மீட்டர் உயரமும் கொண்டதாய் விளங்கியது. இடிந்து விழுந்து ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்ததால், இந்த சுவர் 1837- ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.

பத்துத் தூண் சந்து

நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பட்டு நெசவு செய்யும் சௌராஷ்டிர மக்கள் மதுரையில் அரண்மனையை ஒட்டி குடியேற்றப்பட்டனர். பட்டு மதிப்பு மிக்க பொருள் ஆகையால் அவர்கள் காவலுக்குட்பட்ட தெருக்களில் வாழ்ந்தனர். அரண்மனை வளாகம் கைவிடப்பட்டபோது அவர்கள் பத்துத்தூண்களைச் சுற்றி வீடுகளை கட்டி குடியேறினர். பட்டுநூல் சந்தாக இருந்த அப்பகுதி பின்னர் சிறிய துணிக்கடைகள் நிறைந்ததாக மாறியது.

அமைப்பு

வட்டமான கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி இத்தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கற்களின் மீது சுதையும், செங்கல்லும், கொண்டு பூசி அரண்மனைத் தூண்கள் போன்று வழவழப்பாக்கப்பட்டுள்ளன. பத்துத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே உயரமானவை. சிற்பங்கள் ஏதும் இல்லாதவை. ஒவ்வொரு தூணும் 12 மீட்டர் உயரமும், 1.20 மீட்டர் சுற்றளவும் கொண்டது. பொறியியலாளர் கூற்றுப்படி செங்கல்லாலும் சுதையாலும் ஆன ரங்கமகால் மாளிகையின் மொத்த எடையையும் சுமந்து அதை உறுதியாக மண்ணில் நிறுத்தும் பொருட்டே இந்த பத்துத் தூண்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் எடையே மாளிகையை நிலைநிறுத்தியது. இந்தத் தூண்களில் ஒன்றில் ஒரு சிவலிங்கம் புடைப்புச் சிற்பமாக உள்ளது.

அண்மையில் உள்ள தொல்லியல் இடங்கள்

பத்துத் தூண் அருகிலேயே இராய கோபுரம் (மதுரை), திருமலை நாயக்கர் மகால் ஆகியவை உள்ளன

இன்றைய நிலை

பத்துத் தூண்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் அப்பகுதி முழுமையாகவே ஆக்ரமிப்பில் உள்ளது. கடைகள் நிறைந்துள்ளன. அவர்களின் தட்டிகள் பத்துத்தூண்களில் ஆணிகள் அறையப்பட்டு கட்டப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் நின்று பார்க்கமுடியாதபடி இடுங்கலான நெரிசலான சந்துக்குள் ஏராளமான துணிப்பொதிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page