under review

பஞ்ச சம்ஸ்காரம்

From Tamil Wiki
பஞ்ச சம்ஸ்காரம்

பஞ்ச சம்ஸ்காரம்: (ஐந்துவகை பண்படுதல்கள்) வைணவர்கள் தங்களை விஷ்ணுவின் பக்தர்கள் அல்லது அடிமைகளாக தங்களுக்கும் பிறருக்கும் அறிவித்துக்கொள்ளும் பொருட்டு செய்யப்படும் சடங்கு. இது பாஞ்சராத்ர ஆகம முறையில் செய்யப்படுகிறது. ராமானுஜ மரபைச் சேர்ந்த வைணவர்களின் முதன்மைச்சடங்காக இது கருதப்படுகிறது. இது ஸமாச்ரயணம் என்றும் அழைக்கப்படுகிறது.

மரபு

வைணவ மரபில் பாஞ்சராத்ர ஆகம முறையில் ஒருவர் வைணவராக ஆகும்பொருட்டுச் செய்யப்படும் அடையாளம் ஏற்றுக்கொள்ளும் சடங்கு. ராமானுஜர் உருவாக்கிய ஶ்ரீ சம்பிரதாயம் இச்சடங்குக்கு முதன்மை இடம் அளிக்கிறது. ராமானுஜர் உருவாக்கிய 74 சிம்மாசனாதிபதிகளின் வழிவந்த ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியார்கள் மட்டுமே பஞ்ச சம்ஸ்கார சடங்குகள் செய்ய அதிகாரம் கொண்டவர்கள்.

தகுதி

பஞ்ச சம்ஸ்காரம் செய்ய இரண்டு தகுதிகளை நூல்கள் சொல்கின்றன

  • ஆகிஞ்சன்யம் – தனக்கு ஒரு நிறையும், தகுதியும் இல்லை, முற்றிலும் இயலாதவனாக ஒரு நிறைவும் இல்லாதவனாக உள்ளேன் எனும் பணிவு
  • அநந்ய கதித்வம் – விஷ்ணுவைத் தவிர வேறு ஒரு புகலும் இல்லை, அவனே கரையேற்றிக் காப்பாற்றுவான் எனும் உறுதி

அதாவது பணிவு, அர்ப்பணிப்பு இரண்டும் மட்டுமே தகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன

சடங்கு

பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஒரு வைணவர் விஷ்ணு அன்றி எந்த தெய்வத்தையும் முழுமுதல்தெய்வமாக கொள்வதில்லை என்று ஏற்று தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்யவேண்டும். இதற்கு பிரதிபத்தி என்று பெயர். அதன்பின் அவர் ஓர் ஆசிரியரிடமிருந்து பஞ்ச சம்ஸ்காரம் என்னும் சடங்கைச் செய்துகொள்ளவேண்டும். அவை:

  • தாப சம்ஸ்காரம்: உடலில் தோள்பட்டையின்மேல் சூட்டுக்கோலால் சுட்டு விஷ்ணுவின் சங்குசக்கர முத்திரைகளை தழும்பாக்கிக் கொள்ளுதல்.
  • புண்ட்ர சம்ஸ்காரம்: திருமாலின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, உடலில் நெற்றி, தோள், புயம், மார்பு, நடு வயிறு போன்ற பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
  • நாம சம்ஸ்காரம்: திருமால் மற்றும் வைணவ ஆசாரியார்களின் பெயர்களைச் சூட்டிக்கொள்ளுதல்.
  • மந்திர சம்ஸ்காரம்: வைணவ ஆசிரியர்களிடமிருந்து தியானத்துக்கான மந்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல். மூன்று ரகசிய மந்திரங்கள் (ரகஸ்யத் த்ரயம், மந்திரத் த்ரயம்) சீடரின் காதில் ஆச்சாரியரால் ஓதப்படும்.
  • யாக சம்ஸ்காரம்: வேள்விகள், பூசைகளை கற்றுக்கொள்ளுதல். அடியாரிடம் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகளை அறிதல்.

நெறி

பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற வைணவர் பஞ்சகால விதி எனப்படும் ஐந்து கால தனிநபர் நெறிகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும். விஷ்ணுவை மட்டுமே வழிபடுவது, ஆசிரியனுக்கு மட்டுமே தாசனாக இருப்பது இரண்டும் ஒரு வைணவருக்குரிய நோன்புகள். ராமானுஜ மரபைச் சேர்ந்தவர்கள் தங்களை 'அடியேன் ராமானுஜதாசன்' என்று அறிமுகம் செய்துகொள்வார்கள்

அறியவேண்டியவை

பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டவர் ஐந்து அறிதல்களை அடையவேண்டும்

  • பிரம்மம் – விஷ்ணு
  • ஜீவாத்மா- தன்னிலை
  • உபாயம்- மீளும் வழி
  • உபேயம்- எதை அடையவேண்டும் என்னும் உறுதி
  • கைங்கரியப் பிராப்தி- பணிவிடையும் பக்தியும் செய்யும் மனநிலை
  • விரோத ஞானம்- தன்னை ஞானத்தில் இருந்து தடுப்பவை எவை என்னும் அறிவு

இவற்றை கீழிருந்து மேலாக ஒருவன் அறிகிறான். அதற்கு அவனுக்கு ஆசாரியனின் அருள் தேவை

அன்றாட வாழ்க்கை

பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரு ஸ்ரீ வைஷ்ணவரின் அன்றாடம் பற்றி பிள்ளை லோகாசாரியார் முமுக்ஷுப்படி சூத்ரம் 116ல் இவ்வாறு சொல்கிறார்:

  • உலகியல் ஆர்வங்களை முடிந்தவரை குறைப்பது
  • நாராயணன் ஒருவனையே அடைக்கலமாகப் பற்றுவது
  • நித்ய கைங்கர்யம், அன்றாடச்சேவை
  • அன்றாடச்சேவை செய்ய வாய்ப்பில்லையேல் அந்த விழைவுடன் இருப்பது
  • ஆலயப்பணி, ஆன்றோரோடு இருத்தல்
  • அடியாரை வணங்குதல்
  • ஆசிரியரிடம் அன்பும் பணிவும் கொண்டிருத்தல்
  • வைணவச் சுற்றத்துடன் இருத்தல்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jun-2024, 11:08:11 IST