under review

நிர்வாண பூஜை

From Tamil Wiki

நிர்வாண பூஜை திருநங்கையர் ஆணிலிருந்து பெண்ணாக மாறுவதற்கான முதல் படி. திருநங்கையர் தங்கள் உறுப்பை வெட்டி முர்கேவாலி மாதாவிற்குக் காணிக்கையாகச் செலுத்தும் சடங்கு. இச்சடங்கு சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று நிகழ்கிறது.

நிகழ்த்தும் முறை

நிர்வாண பூஜை செய்து கொள்ளும் திருநங்கையை (சேலா) மற்ற திருநங்கையர் ஜன்னல், கதவுகள் மூடிய அறைக்குள் அழைத்துச் செல்கின்றனர். நிர்வாண பூஜை செய்து கொள்ளும் சேலா அரவாணியின் ஆடையை களைத்து நிர்வாணமாக்குவர். பிறந்த மேனியில் நிற்கும் சேலா அரவாணி அசையாமல் இருக்க அவரை மற்றவர்கள் சேர்ந்து இறுக்கிப் பிடித்துக் கொள்வர். சேலா அரவாணியின் தலைமுடியை வாயின் இருபக்கமும் திணித்துக் கொள்ளச் செய்வர்.[1]

பூஜைக்குரிய திருநங்கையின் விதைப்பைகள் இரண்டையும் ஆண் குறியோடு சேர்த்து கருப்பு அரைஞாண் கயிற்றில் கட்டி இருபக்கமும் இரண்டு கயிறு தொங்கும் படி இரண்டு அரவாணிகள் பிடித்திழுக்க அவரை சிறிது நடைபயிலச் செய்வர். இவ்வாறு நடக்கும் போது அவ்வுறுப்பில் தளர்வு ஏற்பட்டு எளிதில் வெட்ட இயலும். பின் இரண்டு கால்களையும் பரப்பி நிற்க வைப்பர். கால்களுக்கு நடுவே குங்குமம், விபூதி கலந்த புதிய பானை ஒன்று வைக்கப்படும்.

இச்சடங்கு நடைபெறும் நாட்களில் புதிய அரவாணிக்குக் காலை, மதியம் என இரண்டு வேளை மட்டுமே உணவு கொடுப்பர். மாலை, இரவு வேலைகளில் வயிற்றைக் காலியாக வைத்திருக்க வேண்டும். பூஜைக்குரிய திருநங்கையை பகல் முழுவதும் உறங்க வைத்து இரவு 12 மணிக்கு குளிக்க வைத்து புதிய லுங்கி கட்டி அழைத்து வருவர். குரு தெய்வத்தின் முன் வாழைக்காய், உருளைக்கிழங்கு, பஜ்ஜி, கேசரி, தேங்காய், பூ, வெற்றிலைபாக்கு போன்ற பொருட்களை வைத்து ஆராதனை காட்டுவார். கூடவே ஒன்பது வகைப் பழங்களையும் படைப்பார். பூஜை முடிந்ததும் குரு அனைவருக்கும் விபூதி, குங்குமம் வழங்குவார். பூஜை பத்தியமாக உணவில் உருளைக்கிழங்கு, வாழைக்காய் இரண்டும் தவிர்க்கப்படும். முர்கேவாலி மாதாவின் வாகனம் என்பதால் சேவல் கறி உண்பதையும் தவிப்பர்.

அரவாணி சமூகத்தில் மருத்துவராகக் கருதப்படும் தாயம்மா கூர்மையான கத்தியைக் கொண்டு பூஜைக்குரிய அரவாணிக்கு கை போடுவார். 'மாதா! தாயே!’ என்று கத்தியபடி ஆண் உறுப்பில் மேல் ஒன்று கீழ் ஒன்று என இரண்டு முறை வெட்டுவர். அவ்வாறு தறிக்கப்பட்ட உறுப்பு விபூதியும், குங்குமமும் வைக்கப்பட்ட புது மண்பானைக்குள் விழும்படி செய்வர். பின் வெட்டப்பட்ட உறுப்பைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவர். வெட்டுபட்ட அரவாணி மயங்கியதும் சாக்கு ஒன்றில் கிடத்தப்படுவார்.

நிர்வாணச் சடங்கின் பயன்கள்

  • சடங்கு செய்பவருக்கு அரவாணி சமூகத்தில் மதிப்பு ஏற்படும்
  • சேலா அரவாணியாக மாறுவார்; கௌரவிக்கப்படுவார்.
  • குரு பதவிக்கான அடிப்படை தகுதியைப் பெறுவார்.
  • தெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்திய நிம்மதி ஏற்படும்
  • சமூகத்தில் மற்றவர்கள் அவரை முழுப் பெண்ணாக அங்கீகரிப்பார்.
  • ஆணிலிருந்து பெண்ணாக மாற நினைத்தது நிறைவேறும்
  • ஆண் துணையைத் தேடிக் கொள்வதற்கான ஒரு வழியாக அமையும்
  • தனக்குரிய உறவுகளைத் தத்தெடுக்கும் உரிமை கிடைக்கும்.

நிர்வாண பூஜையும், நாயின் சிறப்பிடமும்

நிர்வாண பூஜையில் நாய்க்கு சிறப்பிடம் அளிப்பதற்குக் காரணமான தொன்ம கதை ஒன்றுள்ளது. போத்ராஜ் மகாராஜாவின் பெற்றோர் அவரை வெளியே விடாமல் பெண்போல் வளர்த்தனர். அவருடன் ஒரு ஆண் நாயும் வளர்ந்தது. ஒரு நாள் மகாராஜா வெளியே வந்ததும் அவரைக் கண்டு மக்கள் கேலி செய்தனர். இதனால் மனமுடைந்த மகாராஜா தன் நாயின் ஆண் உறுப்பை வெட்டிய பின் தன் உறுப்பையும் வெட்டிக் கொள்கிறார். தான் முழு பெண்ணாக மாறுவதற்கு ஆண் உறுப்பு தடையாக இருப்பதால் இவ்வண்ணம் செய்கிறார். நாயின் ஆண் உறுப்பை முன்மாதிரியாக கொண்டு விரைத்தறிப்பு செய்ததால் ஒவ்வொரு அரவாணியும் விரைத்தறிப்பு முடிந்ததும் துணி தூக்கிக் காட்டுவது (சாட்லா) சடங்காக நிகழ்கிறது. நாயை பைரவராகக் கருதும் வழக்கமும் அரவாணிகளிடம் உள்ளது.

நிர்வாண பூஜை நிகழும் பிற நாடுகள்

  • மத்தியதரைக்கடல் கிழக்குப் பகுதியில் (Eastern Mediterranian) விரைத்தறிப்பு சடங்காக இருந்திருக்கிறது. சைபிலி (Cybele) என்ற விளைச்சல் தெய்வத்திற்குக் காணிக்கையாக பங்கு பெறும் அனைவரும் தங்கள் உடல்களைக் கத்தியால் கிழித்துக் கொண்டு ஆடுவார்கள். அதில் இளைஞர்கள் தங்கள் அதிகபட்ச பக்தியின் வெளிபாடாக விரைகளை அறுத்து வணங்கினர்.
  • அசிரியாவில் தவறு செய்கின்ற ஆண்களுக்கு விரைத்தறிப்பு தண்டனையாக இருந்தது.
  • சீனாவில் ஏழ்மை காரணமாக பெற்றோர் தங்கள் ஆண் பிள்ளைகளைப் பருவம் அடைவதற்கு முன் விரைத்தறிப்பு செய்துவிடுவர். விரைத்தறிப்பு செய்தவர்களே அரண்மனைப் பணியில் சேர்க்கப்படுவர். மேலும் அவர்களால் அந்தப்புரத்தில் இருப்பவருக்கு எவ்வித ஆபத்தும் வராது என்பது நம்பிக்கை. பருவம் அடைந்ததும் அந்தப்புரத்தில் வேலை பெறுவர்.
  • இத்தாலியில் மாதா கோவிலில் குரலுயர்த்தி பாடுபவர்களை (Sopranos) உருவாக்க சிறுவர்களுக்கு விரைத்தறிப்பு செய்யும் பழக்கம் இருந்தது. அதனை போப் பதிமூன்றாம் லியோ 1879-ல் தடை செய்தார்.
  • ரோமில் நான்கு வகையான விரைத்தறிப்பு முறைகள் இருந்தன.
    • விரைகளும் ஆண்குறியும் தறிக்கப்பட்டவர்கள் அசல் விரைத்தறிப்புக்குள்ளானவர்கள் (true castration) என அழைக்கப்பட்டனர்.
    • விரைகள் மட்டும் தறிக்கப்பட்டவர் ஸ்பேடோனீஸ் (Spadones) என் அழைக்கப்பட்டனர்.
    • தறிக்கப்படாமல் நசுக்கி அழிக்கப்பட்ட விரைகளை உடையவர்கள் திலிபியீ (thlibioe) எனப்பட்டனர்.
    • விரைக்கொடி வெட்டப்பட்டவர்கள் திலேசியீ (thlasoe) எனப்பட்டனர்
  • ஆப்பிரிக்கா, எகிப்து நாடுகளில் விரைத்தறிப்பு செய்து அந்தப்புரக் காவலர்களாக நியமிக்கும் வழக்கம் இருந்தது.

ஓட்டோமான் துருக்கிப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மேலை நாடுகளில் விரைத்தறிப்பு பழக்கம் முடிவுக்கு வந்தது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. நிர்வாண பூஜை செய்பவரின் முகம் துர்க்கா தேவியின் முகம் போல் தோற்றம் கொள்ளவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.


✅Finalised Page