under review

நார்த்தாமலை கடம்பர் கோவில்

From Tamil Wiki
நார்த்தாமலை கடம்பர் கோவில் - வெளிப்புற தோற்றம்
நார்த்தாமலை கடம்பர் கோவில் - உட்புற தோற்றம்
நார்த்தாமலை கடம்பர் கோவில் - மங்கல தீர்த்தம்
நார்த்தாமலை கடம்பர் கோவில் - மூலவர்
நார்த்தாமலை கடம்பர் கோவில் - தென்புற விமானம்
தெற்கு கோஷ்டம் - தட்சிணாமூர்த்தி
துவார பாலர்
அர்த்தமண்டபம் - வீணாதர தட்சிணாமூர்த்தி
அர்த்தமண்டபம் - உமாசகிதர்
மகாமண்டப தூண்
மகாமண்டப தூண் வேலைப்பாடுகள்
பாறையில் உள்ள புடைப்பு சிற்பம்
பிரகார மண்டபம் - அர்த்த பத்மாசனத்தில் விநாயகர்
பிரகார மண்டபம் - சப்தமாதர்
பிரகார மண்டபம் - பைரவர்
சூரியன்
கல்வெட்டு

நார்த்தாமலை கடம்பர் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள இடைக்கால சோழர் கோவில். இக்கோவில் முதலாம் ராஜராஜ சோழன் (பொ.யு. 985 - 1014) காலத்தில் கட்டப்பட்டது.

ஆலய அறிமுகம்

நார்த்தாமலை கடம்பர் கோவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இக்கோவில் மேலைக் கடம்பர் கோவில் எனவும் திருமலைக் கடம்பர் ஈஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. முதலாம் ராஜராஜ சோழன் (பொ.யு. 985 - 1014) காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவிலின் மூலவராக சிவலிங்கம் வழிபடப்படுகிறது. கோவிலின் ஆகம முறைகள், தலபுராணங்கள், இலக்கிய சான்றுகள் பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

இடம்

நார்த்தாமலை கடம்பர் கோவில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 37 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நார்த்தாமலை என்ற ஊரில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு, பெயர்

நார்த்தாமலை கடம்பர் கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் வரலாற்றாய்வாளர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் எழுதிய 'Middle Chola Temples' என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்குள்ளும் வெளிப்புற பாறையிலும் காணப்பட்டும் கல்வெட்டு சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

கோவிலின் மூலவர் பெயர் கல்வெட்டுகளில் மலைக்கடம்பூர் தேவர், மகாதேவர், கூத்தாடும் தேவர், திருமலைக்கடம்பூர் உடைய நாயனார் மற்றும் ஸ்ரீ கைலாசம் உடைய நாயனார்[1] என பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரின் தற்போதைய பெயரான நார்த்தாமலை என்பது 'நகரத்தார் மலை' என்னும் பெயரில் இருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 'நகரம்' என்பது இக்கிராமத்தில் வாழ்ந்த வணிகர்களின் கூட்டமைப்பு. இந்த அமைப்பு, கோவில் சொத்துக்களை நிர்வாகித்தல், நிலங்களுக்கு வரிவிலக்கு செய்தல், நிலம் கைமாறும் விவரங்களை சாசனமாக பதிவு செய்தல் போன்ற பொதுப்பணிகளை கவனிக்கும் உள்ளாட்சி அமைப்பாகவும் இருந்துள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் 'நகரத்தார்' என அழைக்கப்பட்டனர். ராஜராஜ சோழனின் காலத்தில் இவ்வூர் 'தெலுங்கு குலகாலபுரம்' என அழைக்கப்பட்டுள்ளது. 'தெலுங்கு குலகாலன்' என்பது ராஜராஜனின் பட்டப்பெயர். குலோத்துங்க சோழனின் காலத்தில் 'குலோத்துங்க சோழ பட்டினம்' என்று அழைக்கப்பட்டுள்ளது.

தொன்மம்

இலங்கையில் ராம - ராவண போரின் பொழுது படைவீரர்களின் காயங்களை குணப்படுத்த இமாலய உச்சியில் உள்ள சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு எடுத்துச் சென்றார். அந்த மலையை இலங்கையில் இருந்து திரும்ப கொண்டுவரும் பொழுது மலையில் இருந்து தவறி விழுந்த சிறு குன்றுகள் தான் நார்த்தாமலை கிராமத்தை சுற்றியுள்ள மலைகள் என்று நம்பப்படுகிறது. இம்மலைகள் மூலிகை செடிகள் நிறைந்ததாகவும் அதனால் வைத்தியர்கள் அடிக்கடி வரும் இடமாகவும் கருதப்படுகிறது.

பெருங்கலூர் தலபுராணம், நாரதமுனிவர் பெயரிலிருந்து 'நாரதர் மலை' எனவும் பின்பு நார்த்தாமலை என மாறியுள்ளதாகவும் கூறுகிறது[2].

கோவில் தெய்வங்கள்

மூலவர்

கோவிலின் மூலவரான சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

கருவறையை சுற்றியுள்ள விமானத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது.

கோவில் கட்டிடக்கலை அமைப்பு

நார்த்தாமலை கடம்பர் கோவில் இடைக்கால சோழர் கலை பாணியில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

நார்த்தாமலை கடம்பர் கோவில் கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபத்துடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் வேசர பாணி விமானம் காணப்படுகிறது. சுற்றிலும் பிரகார மண்டபமும் (திருச்சுற்று மாளிகை) பிரகார மண்டபத்திற்கும் மையக் கட்டுமானத்திற்கும் இடையில் கருங்கல் பதிக்கப்பட்ட தளமும் உள்ளது. மகாமண்டபத்தின் கிழக்கு புறம் சூரியனுக்கான சன்னிதி உள்ளது.

கோவிலுக்கு எதிரே, வாயிலுக்கு வெளியே ரிஷபம் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன. அதை அடுத்து மங்கல தீர்த்தம் உள்ளது. மேற்கில் உள்ள பிரதான வாயிலை தவிர சுற்றுமதிலின் தென்பகுதியில்ஒரு சிறிய நுழைவாயிலும் உள்ளது.

அர்த்தமண்டபம்

கருவறையை அடுத்துள்ள அர்த்தமண்டபம் செவ்வக வடிவமாக உள்ளது. அர்த்தமண்டபத்தில் சில தனிச்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.லலிதாசனத்தில் அமர்ந்த விநாயகர், சுகாசனத்தில் அமர்ந்த வீணாதர தட்சிணாமூர்த்தி, உமாசகிதர், பிரம்மா மற்றும் சில சிறிய பலி பீடங்கள் காணப்படுகின்றன. உமாசகிதர் சிற்பம் மகாராஜா லீலாசனத்தில் வலது தொடையின் மீது உமையை தாங்கியவாறு உள்ளது. பிரம்மாவின் சிற்பம், பின்னிரு கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் ஏந்தி உள்ளது. முன் இடதுகை அபய ஹஸ்தமாகவும் வலதுகை தொடை மீது வைத்தவாறும் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ளது.

அர்த்தமண்டபத்தின் வாயிலில் இரு துவார பாலர் சிற்பங்கள், ஜடாமகுடம் மற்றும் பிரபாவளியுடன் காணப்படுகின்றன. இரு சிற்பங்களும் பத்ர குண்டலம், கண்டிகை, சரப்பளி, பூணூல், உதரபந்தம் மற்றும் இடைக்கட்டு போன்ற அணிகலன்களுடன் உள்ளன. துவார பாலர்களின் ஒரு கால் நிலத்தில் உறுதியாக ஊன்றியும், மற்றொரு கால் கதையின் மீது ஊர்த்துவ ஜானுவாகவும் உள்ளது. ஒரு கை, கதையின் மீது பல்லவ ஹஸ்தமாகவும், மற்றொரு கை, ஸூசி அல்லது விஸ்மய ஹஸ்தமாகவும் உள்ளது. சிற்பங்கள் இரண்டும் கோரைப்பற்களுடன் அமைந்துள்ளன.

துவார பாலர் சிற்பங்களின் இருபுறமும் இரு அரைத்துண்கள் உள்ளன. அரைத்தூண்கள் கலசம், தாடி, ஆமலகம், இதழ், பலகை, மற்றும் வெட்டு போதிகையுடன் காணப்படுகின்றன.

மகாமண்டபம்

மகாமண்டபம், சுற்றிலும் சுவர்களின்றி, திறந்த மண்டபமாக அமைந்துள்ளது.

மகாமண்டபத்தில் 15 முழுத்தூண்கள் உள்ளன. மண்டபத்தின் ஓரத்தில் உள்ள தூண்கள் சதுரம் மற்றும் கட்டுகளுடன் வெட்டு போதிகை கொண்டவை. மையப்பகுதியில் உள்ள சில தூண்கள் வேலைப்பாடுகளுடன் உள்ளன. இத்தூண்களின் கீழ்சதுரத்தில் உள்ள அடைப்பு கருக்குளில் கீர்த்தி முகம், கொடிகளுடன் கூடிய மலர் மற்றும் மயில் தோகை போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மைய சதுரத்தில் வட்ட வடிவ மலர் வேலைப்பாடுகள் அமைந்துள்ளன.

பிரகார மண்டபம்

மையக் கட்டுமானத்தை சுற்றி, திருச்சுற்று மதிலை ஒட்டியவாறு பிரகார மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் திருச்சுற்று மதிலும் பிரகார மண்டபமும் கட்டப்படாமல், மலையே திருச்சுற்று மதிலாக அமைந்துள்ளது. இந்த மலையில் சிவலிங்கம் போன்ற சில புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பிரகார மண்டபத்தில் 24 முழு தூண்கள் உள்ளன. மண்டபத்தில் உடைந்த சப்தமாதர் தொகுதி, பைரவர் மற்றும் விநாயகர் போன்ற சில சிற்பங்கள் தனிச்சிற்பங்களாக வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிற்பம் பின்னிரு கைகளில் பாசம் மற்றும் அங்குசம் ஏந்தி உள்ளது. முன்னிரு கைகைகளில் ஒரு கை தொடையின் மீது அமைந்து மற்றொரு கை சிதைந்துள்ளது. பொதுவாக விநாயகர் சிற்பம் லலிதாசனத்தில் காணப்படும், இங்கு அதற்கு மாறாக அர்த்த பத்மாசனத்தில் உள்ளது. பைரவர் சிற்பம் கையில் கபாலம் ஏந்தி சுடர் முடியுடன் காணப்படுகிறது.

விமான அமைப்பு

அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தாரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் கலசம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு ஏகதள (ஒருதள) விமானமாக அமைந்துள்ளது.

அதிஷ்டானம்

விமானத்தின் மொத்த கட்டுமானத்தையும் தாங்கும் அடித்தள அமைப்பான அதிஷ்டனமானது உபானம், பத்ம வரி, கம்பு, ஜகதி, விருத்த குமுதம், கண்டம், வேதிகை, பத்ம வரி, கண்டம் மற்றும் பட்டிகை போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. பத்ம பந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.

பாதவர்க்கம்

கருவறையின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்களும் (குட்யஸ்தம்பம்) கோஷ்டங்களும் உள்ளன. அரைத்தூண்கள் தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் வெட்டு போதிகையுடன் காணப்படுகின்றன.

மூன்று கோஷ்டங்களில் தெற்குப் பகுதி கோஷ்டத்தில் மட்டும் தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. மற்ற இரண்டு கோஷ்டங்களில் சிற்பங்கள் இல்லை.

தட்சிணாமூர்த்தி சிற்பம் இடது காலடியில் முயலகன் இருக்க வீராசனத்தில் அமர்ந்துள்ளது. மகர மற்றும் பத்ர குண்டலத்துடன் கண்டிகை, சரப்பளி மற்றும் அரும்புசரம் போன்ற அணிகலன்களை கொண்டுள்ளது. முன்னிரு கரங்களில் இடது கை அபய ஹஸ்தமாகவும் வலது கை சுவடிகளுடனும் உள்ளது. பின்னிரு கரங்களில் இடது கையில் நாகமும் வலது கையில் அக்னியும் கொண்டு தலைக்கு மேல் கல்லால மரத்துடன் காணப்படுகிறது.

கோஷ்டத்தின் மேற்பகுதியில் சிறிய (அல்ப) நாசிகைகளுடன் அமைந்த கபோதமும், அதற்கு மேல் மகா நாசிகையும் அமைந்துள்ளது. மகா நாசிகையின் மேல் சிம்ம லலாடமும் கூடு பகுதியில் சிறு விமானமும் (அல்ப விமானம்) அமைக்கப்பட்டுள்ளது.

பிரஸ்தாரம்

பிரஸ்தாரத்தின் வலபியில் பத்ம வரிகள் உள்ளன. கபோத பகுதியில் இடைவெளி விட்டு கூடுகளும் ஓரப்பகுதியில் கோடிப்பாளை கருக்குகளும் உள்ளன. கூடுப்பகுதியில் கீர்த்தி முகங்களும் கபோதத்திற்கு மேல் உள்ள பகுதியில் யாளி வரிகளும் காணப்படுகின்றன.

கிரீவம்

வட்ட வடிவ வேதிகையை அடுத்துள்ள கிரீவப் பகுதியில் நான்கு கிரீவ (கண்டம்) கோஷ்டங்கள் உள்ளன. கோஷ்டங்களில் உள்ள சிலைகள் அடையாளப்படுத்த முடியாத அளவிற்கு சிதைந்துள்ளன. கிரீவத்திற்கு மேல் உள்ள வலபி பகுதியிலும் பூத வரிகள் காணப்படுகின்றன.

சிகரம், கலசம்

விமானத்தின் சிகரம் வட்ட வடிவம் கொண்ட வேசர சிகரம். நான்கு கிரீவ கோஷ்டங்களின் மேல் பகுதியிலும் மகா நாசிகைகள் அமைந்துள்ளன. நாசிகைகளின் மேல் சிம்ம லலாடமும் கூடு பகுதியில் அல்ப விமானமும் அமைக்கப்பட்டுள்ளது.

சூரியன் சன்னிதி

மகாமண்டபத்தின் கிழக்கு பகுதியில் சூரியன் சன்னிதி உள்ளது. சூரியன் சிற்பம் சமபாத ஸ்தானகத்தில் ஜடாமகுடத்துடன் பாதம் வரை ஆடையுடன் காணப்படுகிறது. முன் வலது கை அபய ஹஸ்தமாக அமைந்து பின் வலது கையில் விரிந்த தாமரை மலர் காணப்படுகிறது.

சிற்பங்கள் பட்டியல்

நார்த்தாமலை கடம்பர் கோவிலில் மூலவர் சிவலிங்கம், துவார பாலர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, உமாசகிதர், பிரம்மா, சப்தமாதர் தொகுதி, பைரவர், சூரியன் மற்றும் ரிஷபம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

கல்வெட்டுகள்

இக்கோவிலில் முதலாம் ராஜராஜன் காலம் தொடங்கி சோழப்பேரரசின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் ராஜேந்திரனின் காலம் வரையில் மொத்தம் 10 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் அனைத்துமே ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்கலச் சொல்லுடன் துவங்கும் தமிழ் கல்வெட்டுகள்.

முதலாம் ராஜராஜன் (பொ.யு. 985 - 1014) கால கல்வெட்டுகள்
  • முதலாம் ராஜராஜனின் 22-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1006 - 1007) கல்வெட்டு கோவிலின் வடப்புற பாறையில்[3] காணப்படுகிறது. இது 17 வரிகளை கொண்ட சிதைந்த கல்வெட்டு. 'திருமகள் போல பெருநிலச்செல்வியும்' என தொடங்கும் ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. கேரளாந்தக வளநாட்டின் அன்னவாயில் கூற்றத்து கிழத்தாய நல்லூரை சேர்ந்த 'கண்டன் பங்கு'[4] மற்றும் 'கமுத்தன்' என்னும் இருவர் இணைந்து 'பனங்குடி பெரியப்பற்று கண்டன்' என்பவரின் நலத்தை வேண்டி மலைக் கடம்பூர் தேவர்க்கு கொடுத்த தானத்தை பற்றி இக்கல்வெட்டு பேசுகிறது. இதன்படி கோவிலில் தினமும் மாலை விளக்கு ஏற்ற கமுத்தன், இரண்டு கழைஞ்சு பொன் தானாமாக கொடுத்துள்ளார். இப்பொன்னை பெற்றுக்கொண்டு 'மூதாதன் சாணக்கன்'[5] என்பவர் மாதம் ஒருமுறை கோவிலுக்கு ஒரு நாழி (அளவு) நெய் கொடுக்க வேண்டும் எனவும் இக்கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: காந்தளூர்சாலை கலமறுத்தருளி, கங்கப்பாடியும் நுளம்பபாடி, வெங்கை நாடு, குடமலை நாடு, கொல்லமும் கலிங்கமும், ஈழ மண்டலம், கண்டன் பங்கு, கமுத்தன், மலைக்கடம்பூர் தேவர், பொன் இரு கழைஞ்சுங் கொண்டு திங்கள் நாழி நெய், மூதாதன் சாணக்கன்[6].
  • முதலாம் ராஜராஜனின் 28-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1012 - 1013) கல்வெட்டு கோவிலுக்கு வெளியே உள்ள கிழக்குப்புற பாறையில் காணப்படுகிறது. 11 வரிகளை கொண்ட இக்கல்வெட்டு, 'திருமகள் போல பெருநிலச்செல்வியும்' என தொடங்கும் ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. கேரளாந்தக வளநாட்டின் அன்னவாயில் கூற்றத்து தெலுங்கு குலகாலபுரத்தை சேர்ந்த 'நகரத்தார்', கோவிலின் மேளக்கார குழுவிற்கு ஊதியமாக அளித்த நிலத்தைப் பற்றி இக்கல்வெட்டு பேசுகிறது. ஐந்து பேர் அடங்கிய இந்த மேளக்கார குழுவில் உவச்சன் அரங்கன்[7] என்பவர் தலைவராகவும் அரங்கன் ஆலன் என்பவர் அவருக்கு துணையாகவும் இருந்துள்ளனர். யானையை நடத்தி எல்லைகள் வகுக்கப்பட்ட இந்த நீர்நிலமானது மெடிவயல் மற்றும் அரங்கன் ஏரி கொண்டது. இந்நிலத்தின் கிழக்கு எல்லை நொச்சிவயல் எனவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: பிடி நடந்த எல்லையுள், உவச்சன் அரங்கன், ஆள் அஞ்சு முன்னின்று முட்டாமல் உவச்சு கொட்ட, நீர்நிலமாவது மெடி வயலும் அரங்கனெரியும், கீழ்பாற்கெல்லை நொச்சி வயல்[8].
இரண்டாம் ராஜேந்திரன் (பொ.யு. 1052 - 1064) கால கல்வெட்டுகள்
  • இரண்டாம் ராஜேந்திரனின் 3-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1054 - 1055) கல்வெட்டு கோவிலின் வடப்புற பாறையில்[9] காணப்படுகிறது. இது 22 வரிகளை கொண்ட சிதைந்த கல்வெட்டு. 'திருமருவிய செங்கோல் வளவன்' என தொடங்கும் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. கேரளாந்தக வளநாட்டின் அன்னவாயில் கூற்றத்து தெலுங்கு குலகாலபுரத்தை சேர்ந்த வணிகர் ஒருவர், கோவிலில் மூன்று வேளையும் விளக்கெரிய பொன் தானமாக கொடுத்ததை பற்றி இக்கல்வெட்டு பேசுகிறது. கோவிலின் பூசாரியான சிவ பிராமணர் இந்த பொன்னை பெற்றுக் கொண்டு விளக்கேற்றும் பொறுப்பை எடுத்துக் கொள்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: தமையநொடு போய் இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு, கேரளத்து ஜயஸ்தம்ப நாட்டி, வியாபாரிகள், பண்டாரம், சிவப்பிராமணர்[10].
  • இரண்டாம் ராஜேந்திரனின் 5-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1054 - 1055) கல்வெட்டு கோவிலுக்கு முன் உள்ள மங்கல தீர்த்தத்தின் வடப்புற பாறையில் காணப்படுகிறது.37 வரிகளை கொண்ட இக்கல்வெட்டு, 'திருமாது புவியென்னும் பெருமாதர்' என தொடங்கும் ராஜேந்திர சோழனின் நீண்ட மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. 25 வரிகள் கொண்ட விரிவான இந்த மெய்க்கீர்த்தி, ராஜேந்திர சோழன், அவன் மகன் மற்றும் தம்பிகளுக்கு வழங்கிய பட்டங்களை பற்றி பேசுகிறது. இந்த பட்டங்கள் அவர்களின் வீரம் மற்றும் போர் வெற்றியை பாராட்டி அளிக்கப்பட்டன. ராஜேந்திர சோழன், சாளுக்கிய மன்னனான ஆஹவ மல்லன் மற்றும் இலங்கை மன்னரை போரில் வெற்றி கொண்டதை பற்றியும் குறிப்பிடுகிறது. மெய்க்கீர்த்தியை தொடர்ந்து தெலுங்கு குலகாலபுரத்தின் நகரத்தார் செய்து கொண்ட நில ஒதுக்கீடு பற்றிய உடன்படிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நில ஒதுக்கீட்டுக்காக நிலத்தை அளந்தவர், குன்றியூர் நாட்டை சேர்ந்த மூவேந்திர வேளாளர். மேற்பார்வை செய்தவர்கள் குமராத்தகுடையான் மூவேந்தன் சந்திரசேகரன், உள்ளூர் வியாபாரி பட்டன் திருவன், அமுதன் பள்ளிகொண்டான் வையக்குட்டி பராந்தகன், முத்தன் தேவன், செட்டி குன்றன் மற்றும் ராஜேந்திர சோழ செட்டி ஆகியோர். இதன் கணக்காளர் நக்கன் தித்தன். இந்த நில ஒதுக்கீட்டில் இருந்து குமராவயல் தேவதானமும் மற்றும் சில ஊர்களின் நிலங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த நில ஒதுக்கீட்டின் மூலம் நிலத்தை பெற்றவர்கள் கங்கைகொண்ட சோழ அணுக்க செலை செட்டி, ராஜாதிராஜ செலசெட்டி, கடாரங்கொண்ட சோழ செலசெட்டி, மற்றும் ராஜேந்திர சோழ தந்ம செட்டி. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: சிறிய தாதை, திருத்தம்பியர், கங்கைகொண்ட சோழன், இருமுடி சோழன், மும்முடி சோழன், சோழ பாண்டியன், வீரசோழன், கரிகால சோழன், மதுராந்தகன், சோழகங்கன், பரந்தக தேவன், உத்தமசோழன், சோழகேரளன், சோழ ஜனகராஜன், சுந்தரசோழன், வாள்வலித்தடக்கை, செந்தமிழ், சளுக்கி தம்பி ஜெயசிங்கனும் போர்புலகேசியும், பொன் கழல், பரிகளும் ஒட்டக நிரைகளும், வராக வெல்கொடி முதல், இலங்கை, ஒட்டிசைவு கைத்திட்டு இட்ட, கண்காணி, கணக்காகவும், மாவரை, அர்ஜன போகம், மாக்காணி[11].
  • இரண்டாம் ராஜேந்திரனின் 5-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1054 - 1055) கல்வெட்டு கோவிலுக்கு முன் உள்ள மங்கல தீர்த்தத்தின் வடப்புற பாறையில் மேல் சொல்லப்பட்ட கல்வெட்டை தொடர்ந்து காணப்படுகிறது. 16 வரிகளை கொண்ட இக்கல்வெட்டு, 'திருமருவிய செங்கோல் வளவன்' என தொடங்கும் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. மெய்க்கீர்த்தியில் ராஜேந்திர சோழன், இரட்டப்பாடி நாட்டை வென்று கொல்லாபுரத்தில் ஜய ஸ்தம்பம் நாட்டியதையும், சாளுக்கிய மன்னன் ஆஹம மல்லனை கொப்பம் எனும் இடத்தில் நடந்த போரில் வென்று அவனுடைய குதிரைகள், பெண்கள் மற்றும் செல்வத்தை கைப்பற்றியதையும் குறிப்பிடுகிறது. மெய்க்கீர்த்தியை தொடர்ந்து தெலுங்கு குலகாலபுரத்தின் 'நகரத்தார்' திருமலை கடம்பூர் மகாதேவரின் திருநீராட்டுக்கு ஒரு சந்திக்கு 5 திருமஞ்சகுடம் ஏற்பாடு செய்ததை பற்றி பேசுகிறது. இறுதியில் 'ராஜேந்திர சிங்கவளநாட்டு மிழலைநாட்டு சோழகேரளபுரத்து வியாபாரி' எனும் வரியுடன் கல்வெட்டு முடிக்கப்படாமல் உள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: கொல்லாபுரத்தில் செயத்தம்பம் நாட்டி, குதிரையும் பெண்டிர் பண்டாரமும் அகப்பட பிடித்து, திருமஞ்சக்குடம்[12].
  • இரண்டாம் ராஜேந்திரனின் 5-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1054 - 1055) கல்வெட்டு கோவிலுக்கு முன் உள்ள மங்கல தீர்த்தத்தின் வடப்புற பாறையில் மேல் சொல்லப்பட்ட கல்வெட்டை தொடர்ந்து காணப்படுகிறது. 12 வரிகள் கொண்ட சிதைந்த இக்கல்வெட்டு, 'திருமருவிய செங்கோல் வளவன்' என தொடங்கும் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. மெய்க்கீர்த்தியை தொடர்ந்து தெலுங்கு குலகாலபுரத்தின் 'நகரத்தார்' கோவிலில் உள்ள அம்மனின் உச்சிக்கால பூஜை திருவமுதுக்காக நெல் வழங்கியதைப் பற்றி குறிப்பிடுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: தம்பிராட்டியார், உச்சம்பொகை, திருவமுதரிசி, நாளொன்றுக்கு நெல் ஆறு நாழியாக[13].
மூன்றாம் குலோத்துங்கன் (பொ.யு. 1178 - 1223) கால கல்வெட்டுகள்
  • மூன்றாம் குலோத்துங்க சோழனின் 27-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1204 - 1205) கல்வெட்டு கோவிலின் வடப்புற பாறையில் காணப்படுகிறது. இது 32 வரிகளை கொண்ட சிதைந்த கல்வெட்டு. தெலுங்கு குலகாலபுரத்தின் 'நகரத்தார்', ஸ்ரீ கைலாசம் கோவிலின்[14] மூலவரான நாயனாருக்கு தேவதானமாக உள்ள நிலத்தை, பரம்பையூரை பூர்வீகமாகக் கொண்ட வணிகர் கடம்பன் செங்குடியான் கங்காதர்க்கு விற்றதை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. விற்கப்பட்ட விலை, பஞ்சசலாகை அச்சு 130 1/2. 'நகரத்தார்', இந்த நில விற்பனைக்கான இறை, குடிமை மற்றும் மற்ற வரிகளை அரசரின் கருவூலத்திற்கு செலுத்தியுள்ளனர். விற்கப்பட்ட இந்த நிலத்தின் எல்லைகளை பற்றிய விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன. நகரத்தார் பணித்ததன்படி மத்தியஸ்தரான சொதியான் மருதுடையான் இக்கல்வெட்டை பொறித்துள்ளார். இதற்கு சாட்சி கையொப்பமிட்டவர்களின் நீண்ட பெயர் பட்டியலும் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: பள்ளி வயல், அருகற்தேவருக்கு புறகரையில் நிலம் இரண்டு மா, உன்னிலம், சீராளன் ஏரி, பள்ளி விளக்கம், கூழைகுளத்தூர், மத்தியத்தன்[15].
  • மூன்றாம் குலோத்துங்க சோழனின் 31-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1208 - 1209) கல்வெட்டு கோவிலின் வடப்புற பாறையில்[16] காணப்படுகிறது. இது 13 வரிகளை கொண்ட சிதைந்த கல்வெட்டு. இக்கல்வெட்டு சிவப்பிராமணர்கள் திருப்பள்ளியறை நாச்சியாரின்திருவமுதுக்காக தினமும் இரண்டு நாழிநெல் வழங்கியதை குறிப்பிடுகிறது. மேலும் மங்கையர்கரசி என்பவரிடம் ஐந்து கழஞ்சு பொன் பெற்றுக்கொண்டு நாயானாயாரின்திருவமுதுக்காக தினமும் இரண்டு நாழிநெல் வழங்கியதையும் குறிப்பிடுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: திருவமுது, இருநாழி அரிசி உபையஞ்செலுத்த, ஐங்கழஞ்சும்[17].
  • மூன்றாம் குலோத்துங்க சோழனின் 37-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1214 - 1215) கல்வெட்டு கோவிலின் கிழக்குபுற பாறையில் காணப்படுகிறது. இது 28 வரிகளை கொண்ட கல்வெட்டு. தெலுங்கு குலகாலபுரத்தின் 'நகரத்தார்', குன்றத்தூர் குளம் மற்றும் வயல் நிலத்தை, பரம்பையூரை பூர்வீகமாகக் கொண்ட வணிகர் தனபாலர் என்றழைக்கப்படும் கடம்பன் பெரியன் மற்றும் பழுவூரை பூர்வீகமாகக் கொண்ட பெரிய தேவர் என்று அழைக்கப்படும் உடையான் பெரியான் ஆகியோருக்கு விற்றதை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. விற்கப்பட்ட விலை, 68,000 காசு. மேலும் இவ்விருவரும் திருமலைக்கடம்பூர் நாயனார் கோவிலின் மூலவரான கூத்தாடும் தேவருக்கும் ஸ்ரீ கைலாசம் கோவிலின் மூலவரான திருவானைக்கா உடைய நாயனருக்கும் நெல் தானமாக கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 'நகரத்தார்', இந்த நில விற்பனைக்கான இறை, குடிமை மற்றும் மற்ற வரிகளை அரசரின் கருவூலத்திற்கு செலுத்தியுள்ளனர். விற்கப்பட்ட இந்த நிலத்தின் எல்லைகளை பற்றிய விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன. நகரத்தார் பணித்ததன்படி மருதூருடையான் பெரியான் மாணிக்க சொதி இக்கல்வெட்டை பொறித்துள்ளார். இதற்கு சாட்சி கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியலும் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: கடைக்கால், குமாரவயல், குளத்தூர் எல்லை, புன்செய், தான தன விக்கிறையம், திருவாசல், அமுதுபடிக்கு, திருச்சூலக்கால், விளையாத ஆண்டுக்கு பயிர்பாத்து விளைஞ்ச நிலத்துக்கு[18].
  • மூன்றாம் குலோத்துங்க சோழனின் 38-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1216 - 1217) கல்வெட்டு கோவிலின் வடப்புற பாறையில்[19] காணப்படுகிறது. இது 17 வரிகளை கொண்ட சிதைந்த முற்றுப்பெறாத கல்வெட்டு. இக்கல்வெட்டு சிவப்பிராமணர்கள், தெலுங்கு குலகாலபுரத்தின் வியாபாரியான செயங்கொண்ட சிலைச்செட்டி என்பவரிடம் தானம் பெற்றுக்கொண்டு இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியின் திருவமதுக்கு நாளொன்றுக்கு ஒரு நாழி அரிசி அளித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: திருவமுது, திருவுண்ணாழிகை[20].
மூன்றாம் ராஜேந்திரன் (பொ.யு. 1246 - 1279) கால கல்வெட்டுகள்
  • மூன்றாம் ராஜேந்திர சோழனின் 7-ஆம் ஆட்சியாண்டு (பொ.யு. 1252 - 1252) கல்வெட்டு கோவிலின் வடப்புற பாறையில்[21] காணப்படுகிறது. இது 26 வரிகளை கொண்ட சிதைந்த முற்றுப்பெறாத கல்வெட்டு. இக்கல்வெட்டு தேவகான்மிகள்[22], திருமலைக்கடம்பூர் கோவிலின் தலைமை தச்சரான 'போரெறு செமன்' எனும் 'அகளங்க ஆசாரியன்' என்பவருக்கு கொடுத்த ஊதிய நிலத்தை பற்றி பேசுகிறது. இதன்படி இவரும் இவருடைய தந்தையும் திருவானைக்கா உடைய நாயனார் மற்றும் நாச்சியார் திருக்கோவிலின் கட்டுமானம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு பொறுப்பானவர்கள். மேலும் திருக்கொடி தேவரை[23] நிறுவுவதற்கு ஆச்சாரிய தக்க்ஷணை (ஊதியமாக) கொடுத்த நிலத்தின் எல்லைகளை பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: தச்சர் ஆசாரியன், சாதனம் பண்ணி கொடுத்த பரிசாவது, திருப்பணிகள், இவன் பிதாவும் இவனும் , திருக்கொடி தேவர், ஆதவப் பெருமாள் நல்லூர், கட்டு முக்காணி, இலுப்பை செய் நிலம், இறையிலி[24].

தொடர்புடைய ஆளுமைகள்

  • நார்த்தாமலை கடம்பர் கோவில் கல்வெட்டுகளின் வாயிலாக கோவிலைக் கட்டி திருப்பணிகள் செய்த ஆளுமைகளாக முதலாம் ராஜராஜன், இரண்டாம் ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன், கண்டன் பங்கு, கமுத்தன், மூதாதன் சாணக்கன், அரங்கன், அரங்கன் ஆலன், மங்கையர்கரசி, தனபாலர், பெரிய தேவர், செயங்கொண்ட சிலைச்செட்டி மற்றும் அகளங்க ஆசாரியன் ஆகியோர் அறியப்படுகின்றனர்.
  • நார்த்தாமலை கடம்பர் கோவில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி ஆண்டில் காணப்படும் கல்வெட்டில் ஸ்ரீ கைலாசம் உடைய நாயனார் என்ற பெயர் காணப்படுகிறது. எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், ஸ்ரீ கைலாசம் என்பது மலைக்கடம்பூர் கோவில்தான் என்கிறார். ஆனால் கே.ஆர். ஶ்ரீனிவாஸ் ஐயர் இது நார்த்தாமலை ஊரில் உள்ள மற்றொரு சிவன் கோவில் என்கிறார்.
  2. Manual of the Pudukkottai State Volume II Part II by K.R. Venkatarama Ayyar
  3. இப்பாறையே வடப்புற திருச்சுற்று மதிலாகவும் உள்ளது.
  4. முழு பெயர் சிதைந்து விட்டது.
  5. முழு பெயர் சிதைந்து விட்டது.
  6. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 86, பக்க எண்: 33
  7. உவச்சு என்பது மேளம் அல்லது முழவு. 'உவச்சன்', 'உவச்சு கொட்ட' போன்ற வார்த்தைகள் கல்வெட்டில் உள்ளன
  8. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 91, பக்க எண்: 40
  9. இப்பாறையே வடப்புற திருச்சுற்று மதிலாகவும் உள்ளது.
  10. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 110, பக்க எண்: 57
  11. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 112, பக்க எண்: 58
  12. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 113, பக்க எண்: 61
  13. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 114, பக்க எண்: 61
  14. மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி ஆண்டில் காணப்படும் கல்வெட்டில் ஸ்ரீ கைலாசம் உடைய நாயனார் என்ற பெயர் காணப்படுகிறது. எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், ஸ்ரீ கைலாசம் என்பது மலைக்கடம்பூர் கோவில்தான் என்கிறார். ஆனால் கே.ஆர். ஶ்ரீனிவாஸ் ஐயர் இது நார்த்தாமலை ஊரில் உள்ள மற்றொரு சிவன் கோவில் என்கிறார்.
  15. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 158, பக்க எண்: 86
  16. இப்பாறையே வடப்புற திருச்சுற்று மதிலாகவும் உள்ளது.
  17. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 164, பக்க எண்: 93
  18. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 170, பக்க எண்: 98
  19. இப்பாறையே வடப்புற திருச்சுற்று மதிலாகவும் உள்ளது.
  20. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 173, பக்க எண்: 101
  21. இப்பாறையே வடப்புற திருச்சுற்று மதிலாகவும் உள்ளது.
  22. கோவில் அறங்காவலர்கள்
  23. துவஜ்ஸ்தம்பம்
  24. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 200, பக்க எண்: 115


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jan-2025, 19:51:46 IST