under review

நாராயணபுரம் குகைப்பள்ளிகள்

From Tamil Wiki

நாராயணபுரம் குகைப்பள்ளிகள் வடதமிழகத்தில் (தொண்டைமண்டலத்தில்) உள்ள சமணத்தலம்.

இடம்

வடஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜாபேட்டைக்குத் தென்மேற்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் நாராயணபுரம் என்னும் சிற்றூரிலுள்ள பஞ்சபாண்டவமலை எனப்படும் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள குகை சமணத்தலமாக இருந்தது. கல்வித்தலமாகச் செயல்பட்ட சமணத்தலங்கள் 'பள்ளிகள்' எனப்பட்டன. இக்குகை 'நாராயணபுரம் குகைப்பள்ளிகள்' எனப் பெயர் பெற்றது.

நாராயணபுரம் குகை

குகையின் உட்பகுதியில் அருகருகே ஏழு படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இவற்றின் ஒரு புறத்தில் தலையணை போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. இவை மிகவும் வழவழப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த படுக்கைகள் பொ.யு. 7 முதல் 8-ம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர் ஏ. ஏகாம்பரநாதன் குறிப்பிடுகிறார்.. சற்று பிற்காலத்தில் இந்த குகைக்கு முன் பகுதியில் ஒரு மண்டபம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுவும் நாளடைவில் பழுதடைந்து அதன் சுவடுகள் மட்டும் சில பகுதிகளில் எஞ்சியிருக்கின்றன. பொ.யு. 10-ம் நூற்றாண்டின் போது ரிஷப நாதர் சிற்பமொன்று இங்கு நிறுவப்பட்டிருக்க வேண்டும். சிதைந்த அத்திருவுருவத்தின் உடைந்த தலைப்பகுதி மட்டிலும் குகைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

திம்மண்ணசாரிக்குப்பம்

நாராயணபுரத்திற்கு மேற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திம்மண்ணசாரிக்குப்பம் எனும் சிற்றூரிலுள்ள குன்றிலும் குகை ஒன்று காணப்படுகிறது. இதனுள் ஆறு படுக்கைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் தலையணை போன்ற அமைப்பு செதுக்கப்படவில்லை.இப்பகுதிகளில் கல்வெட்டுக்கள் எவையும் காணப்படவில்லை. எனினும் இங்கு பொ.யு. 7 முதல் 8-ம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. 10-ம் நூற்றாண்டு வரையிலும் சமணத் துறவியர் வாழ்ந்து வந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது.

உசாத்துணை

  • தொண்டைநாட்டுச் சமணக்கோயில்கள்- ஏ.ஏகாம்பரநாதன்.


✅Finalised Page