under review

நகரத்தார் (மாத இதழ்)

From Tamil Wiki

நகரத்தார் (1969), நகரத்தார் சமூகத்தின் சார்பில் வெளிவந்த இதழ். புலவர் நாக. சண்முகமும், அவரது நண்பர் வழக்குரைஞர் எஸ்.பி.எல். பழநியப்பாவும் இணைந்து நகரத்தார் இதழை நடத்தினார். புலவர் நாக. சண்முகம் இதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.

பிரசுரம், வெளியீடு

நகரத்தார் சமூகத்தின் சார்பில், ஏப்ரல் 1969 முதல் வெளிவந்த இதழ் நகரத்தார். வேகுப்பட்டியைச் சேர்ந்த புலவர் நாக. சண்முகமும் அவரது நண்பர் வழக்குரைஞர் எஸ்.பி.எல். பழநியப்பாவும் இணைந்து இவ்விதழை வெளியிட்டனர். புலவர் நாக. சண்முகம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். டெம்மி 1x8 அளவில், மாதம் தோறும் 48 பக்க அளவில் நகரத்தார் இதழ் வெளிவந்தது. தனிப்பிரதியின் விலை இதழில் குறிப்பிடப்படவில்லை. முதல் ஆண்டில், ஆண்டு சந்தாவாக ரூபாய் 3.50 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் ஆண்டில் அது 6.00 ரூபாயாக உயர்ந்தது. ஆயுள் உறுப்பினர் கட்டணமாக ரூ 101/- நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நோக்கம்

இதழின் நோக்கமாக முதல் இதழின் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ”இத்திங்கள் இதழ் நம் மரபினரின் நற்பணிகளையும் பல்வேறு சிறப்புக்களையும், இன்றையத் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும், அத்தகைய நற்பணிகளை அவர்கள் செய்ய ஊக்கமூட்டவும் வரலாற்றின் துணையோடு பல்வேறு தலைப்புக்களில் பல பகுதிகளைத் தரத் திட்டமிட்டுள்ளது."

உள்ளடக்கம்

நகரத்தார் சமூகத்து முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள், அவர்கள் செய்த சாதனைகள், இலக்கியம், சமயம், நிதி நிர்வாகம், கல்விப் பணிகளில் அவர்கள் ஆற்றிய தொண்டுகள், நகரத்தார்களின் வாழ்வியல் முறை எனப் பல்வேறு செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.

இதழ் நிறுத்தம்

1969 முதல் வெளிவந்த நகரத்தார் இதழ், 1979-ல் நின்றுபோனது.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-May-2024, 08:51:34 IST