under review

தே. அ. ஞானாபரணம் பண்டிதர்

From Tamil Wiki

தே. அ. ஞானாபரணம் பண்டிதர் (1885-1955) கவிஞர், எழுத்தாளர். தமிழாசிரியராகப் பணியாற்றினார். கிறிஸ்தவ மத போதகராகப் பணிபுரிந்தார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எளிய தமிழில், ‘இரட்சகராகிய இயேசுநாதர்' என்ற தலைப்பில் நூலாக எழுதி வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

தே. அ. ஞானாபரணம் பண்டிதர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சேனம்விளையில், 1885-ல், தேவவரம் அருமைநாயகம் உபதேசியாருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வியை நாகர்கோவிலில் கற்றார். வித்வான் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

தே. அ. ஞானாபரணம் பண்டிதர், தான் பயின்ற பள்ளியில் ஆசிரியராகச் சில வருடங்கள் பணியாற்றினார். பின் நாகர்கோவிலிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பாளையங்கோட்டையிலுள்ள சாராள் தக்கர் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தே. அ. ஞானாபரணம் பண்டிதர், தன் பணியிலிருந்து விலகினார். இல்லத்திலிருந்தவாறே மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். மணமானவர். மனவி: ஞானம்மாள். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாததால், தனது தம்பியின் மகளான ஆக்னஸை வளர்த்தார்.

இலக்கிய வாழ்க்கை

தே. அ. ஞானாபரணம் பண்டிதர், கீர்த்தனைகள் பலவற்றை இயற்றினார். கிறிஸ்தவம் மற்றும் விவிலியம் சார்ந்து பல நூல்களை எழுதினார்.

மதப் பணிகள்

தே. அ. ஞானாபரணம் பண்டிதர் இலண்டன் மிஷன், லுத்தரன் மிஷன், இரட்சணிய சேனை ஆகிய பிரிவுகளிலுள்ள மிஷனெரிமார்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். வடக்கன்குளம் வரை சென்று மிஷனெரிகளுக்குத் தமிழ் போதித்தார். நெய்யூர் மருத்துவமனையிலுள்ள மிஷனெரிகளுக்குத் தமிழ் கற்பித்தார். நாகர்கோவிலிலுள்ள ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் முதல்வராக இருந்த மார்ஸ்டன் துரைக்கு தமிழை முழுமையாகக் கற்றுக்கொடுத்தார்.

வேதாகமத்தைத் திருத்தியமைப்பதற்காக வேதாகமச் சங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட குழுவின் அங்கத்தினராகச் செயல்பட்டார். கிறிஸ்தவ இலக்கிய சங்கம், 1947-ல், கீர்த்தனை நூலின் புதிய திருந்திய பதிப்பை உருவாக்க ஒரு குழுவை அமைத்தது. எச் . ஏ. பாப்லி தலைமையில் இயங்கிய அக்குழுவில், தே.அ. ஞானாபரணமும் இணைந்து பணியாற்றினார். சேனம்விளை சபையின் செயலாளராக இருபத்தி ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். தென்சேகரத்துக் கவுன்சிலில் 25 ஆண்டுகள் உறுப்பினராகப் பல பணிகளை மேற்கொண்டார்.

மறைவு

கால் பெருவிரலில் முள் குத்தியதால் ஏற்பட்ட காயத்தால் நோயுற்று, மார்ச் 28, 1955-ல், தே. அ. ஞானாபரணம் பண்டிதர் காலமானார்.

மதிப்பீடு

தே. அ. ஞானாபரணம் பண்டிதர் மிஷனரிகள் பலருக்குத் தமிழ் கற்பித்தார். கீர்த்தனைகள் பலவற்றை எழுதினார். தே. அ. ஞானாபரணம் பண்டிதர் எழுதிய, ‘இரட்சகராகிய இயேசுநாதர்' என்ற காப்பிய நூல் எளிய தமிழில் இயற்றப்பட்ட சிறந்த கிறிஸ்தவக் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நூல்கள்

  • இரட்சணியப் பாமாலை (கிறித்தவக் கீர்த்தனைகள்)
  • இரட்சகராகிய இயேசுநாதர் - இயேசுநாதர் வாழ்க்கை வரலாறு - மூன்று பாகங்கள்
  • குடிவெறியின்கெடுதி
  • அமிழ்தினும் இனிய தமிழ்மொழி
  • குணபதி - தளபதி
  • ஆகாத மகன் அப்சலோமின் வரலாறு (நாடகம்)

உசாத்துணை

  • கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு.


✅Finalised Page