under review

தீவக அணி

From Tamil Wiki

ஒரு குணத்தையோ, தொழிலையோ, இனத்தையோ, பொருளையோ குறிக்கும் ஒரு சொல், செய்யுளின் ஓர் இடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவக அணியாகும். தீவகச் சொல் (அல்லது சொற்றொடர்) செய்யுளில் வரும் இடத்தைப் பொருத்து முதல் நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடை நிலைத் தீவகம் என மூன்று வகைப்படும்.

குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்
ஒருவயின் நின்றும் பலவயின் பொருள் தரின்
தீவகம்; செய்யுள் மூவிடத்து இயலும் --(தண்டியலங்காரம், 39)

தீவக அணி-பெயர்க்காரணம்

தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள். ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போலச் செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

தீவக அணியின் வகைகள்

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அஃது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், சாதி, தொழில், பொருள் ஆகிய நான்கு வகைப்படும். ஒவ்வொரு மூன்று நிலைகளும், ஒவ்வொரு நிலையிலும் நான்கு பொருள்களுமாக மொத்தம் பன்னிரண்டு வகைகளாக விரியும். அவையாவன

  • முதல் நிலைக் குணத் தீவகம்
  • முதல் நிலைத் தொழில் தீவகம்
  • முதல் நிலைச் சாதித் தீவகம்
  • முதல் நிலைப் பொருள் தீவகம்
  • இடைநிலைக் குணத் தீவகம்
  • இடைநிலைத் தொழில் தீவகம்
  • இடைநிலைச் சாதித் தீவகம்
  • இடைநிலைப் பொருள் தீவகம்
  • கடைநிலைக் குணத் தீவகம்
  • கடைநிலைத் தொழில் தீவகம்
  • கடைநிலைச் சாதித் தீவகம்
  • கடைநிலைப் பொருள் தீவகம்

எடுத்துக்காட்டுகள்

முதல் நிலைத் தீவகம்-எடுத்துக்காட்டு

தென்றல் அநங்கன் துணையாம், சிலகொம்பர்
மன்றல் தலைமகனாம், வான்பொருள்மேல் - சென்றவர்க்குச்
சாற்றவிடும் தூதாகும், தங்கும் பெரும்புலவி
மாற்ற வருவிருந்தும் ஆம்.’

அணிப்பொருத்தம்

தென்றல் காற்று மன்மதனுக்குத் துணையாகவும்,பூங் கொம்புகளுக்கு அவை தளிர்க்கக் காரணமாதலின் மணமகன் ஆகவும், பிரிந்து சென்றுள்ள தலைவர்க்குத் தலைவி விடும் தூதும் ஆகும்; ஊடலைத் தணிவிக்க வரும் வாயிலும் ஆகும் - என்ற பொரு ள் படும் பாடலில் தென்றல் என்ற சொல், பாட்டின் முதற்கண் நின்று இறுதி வரை எல்லா இடங்களிலும் சென்று இணைந்து பொருள் பயந்தமையால், இது முதல்நிலைத் தீவக அணி. தென்றல் அநங்கன் துணை தென்றல்-சில கொம்பர் மன்றல் தலைமகன் தென்றல்-வான்பொருள்மேல் சென்றவர்க்குச் சாற்றவிடும் தூதாகும் தென்றல்- தங்கும் பெரும்புலவி மாற்ற வருவிருந்து

இடைநிலைத் தீவகம்-எடுத்துக்காட்டு

மான்அமரும் கண்ணாள் மணிவயிற்றில் வந்துதித்தான்;
தானவரை என்றும் தலைஅழித்தான்; - யானைமுகன்
ஓட்டினான் வெங்கலியை; உள்ளத்(து) இனிதமர்ந்து
வீட்டினான் நம்மேல் வினை

அணிப்பொருத்தம்

யானை முகனாம் பெருமான், மான்போன்ற கண்ணியாகிய உமாதேவியின் அழகிய வயிற்றில் தோன்றினான்; யானை முகன் - போர் செய்து அசுரர்களின் தலைமையை அழித்தான். யானை முகன் -கொடிய வறுமையைப் போக்கினான். யானை முகன் -; நம் மனத்தில் அமைந்து நம் தீவினையைஅகற்றினான் என்று பொருள்படும் இப்பாடலில் யானை முகன்’ என்ற பெயர் நடுவே நின்று உதித்தான், அழித்தான், ஓட்டினான், வீட்டினான் என்பவற்றொடு இயைந்து பொருள் தந்ததால் இது இடை நிலை தீவக அணியாகும். யானை முகன் இப்படலின் தீவகமாகிறது

கடை நிலைத் தீவகம்-எடுத்துக்காட்டு

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

அணிப் பொருத்தம்

கருமமே கண்ணாயினார் (தன் செயலில் முனைப்பாக இருப்பவர்கள்) என்ற சொற்றொடர் இப்பாடலில் கடைசியில் தீவகமாக அமைந்து

கருமமே கண்ணாயினார் உடல் வருத்ததைப் பொருட்படுத்த மாட்டார்கள்

கருமமே கண்ணாயினார் அதிகம் தூங்க மாட்டார்கள், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-எவர் கொடுக்கும் துன்பத்தையும் பொருட்படுத்த மாட்டார்கள்

செவ்வி அருமையும் பாரார்- காலம் கழிவதை பொருட்படுத்த மாட்டார்கள்

அவமதிப்பும் கொள்ளார்-எவர் அவமதிப்பதையும் பொருட்படுத்த மாட்டார்கள் என்று இயைந்து பொருள் தருவதால் இது கடை நிலை தீவக அணியாகும்.

எடுத்துக்காட்டு-2

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

அணிப்பொருத்தம்

'அபிராமி கடைக்கண்களே' இப்பாடலில் தீவகமாக அமைகின்றது.

அபிராமியின் கடைக்கண்கள்-தனம் தரும், கல்வி தரும் ,ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவற்கே என்று இயந்து பொருள் தருவதால் இது கடை நிலை தீவக அணியாகிறது.

உசாத்துணை


✅Finalised Page