under review

திருச்செந்தூர் அகவல்

From Tamil Wiki
திருச்செந்தூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருச்செந்தூர் (பெயர் பட்டியல்)

திருச்செந்தூர் அகவல் (பொ.யு. 14-16-ம் நூற்றாண்டு) திருச்செந்தூர் முருகனைக் குறித்து எழுதப்பட்ட அகவல் என்னும் சிற்றிலக்கியம். தோத்திரமும்(துதி), சாத்திரமும்(சித்தாந்தம்) இணைந்த நூலாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர்

திருச்செந்தூர் அகவலை இயற்றியவர் சிற்றம்பல நாடிகள் எனக் கூறப்படுகிறது. மொழி நடையை நோக்கினால் சிற்றம்பல நாடிகள் காலத்தில் எழுதப்பட்டது அல்ல என்றும் பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது எனவும் சிலர் கருதுவர்.

உத்தமர் ஆவீர் .. உண்மையீ (து) என்று
சிற்றம் பலவன் செய்யுளால் புகன்றான்.

என்ற நூலின் இறுதி வரிகள் ஆசிரியர் சிற்றம்பல முனிவர் எனக் கருத இடம் தருகின்றன.

இதன் ஆசிரியர் 'துகளறு போதம் இயற்றிய சிற்றம்பல நாடிகள் அல்லர், மற்றொரு சிற்றம்பல நாடிகள் எனவும் கூறப்படுகிறது.

நூல் அமைப்பு

இந்த நூல் 426 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது. முருகப்பெருமான் ஆசிரியருக்கு மெய்ஞானமளித்தமை கூறப்படுகிறது. முதல் 24 அடிகளில் முருகனின் பல நாமங்கள் கூறப்படுகின்றன. அடுத்த 45 அடிகளில் முருகனின் அடி முதல் முடி வரையான உருவ அழகு வர்ணனை இடம்பெறுகிறது. முருகனிடம் ஆசிரியர் முக்திக்கான வழியைக் கேட்க, முருகன் அவருக்கு ஐந்தெழுத்தை உபதேசித்து, வழிபாட்டிற்கான சரியை, கிரியைகள், அறங்கள், மும்மலங்களை அகற்றல், குண்டலினியை எழுப்பும் முறை ஆகியவற்றை உபதேசித்தமை சொல்லப்படுகிறது. மெய்ஞ்ஞானம் பெற வேண்டுமெனில் தன்னைப்போல் திருச்செந்தூர் முருகனைச் சரணடைக என உலகத்தவர்க்கு உபதேசிக்கிறார்.

நூற்பயனில் திருச்செந்தூர் அகவலை ஓதுபவர் பெறும் பலன்கள் கூறப்படுகின்றன.

திருச்செந்தூர் அகவல் முருகன் துதியுடன், சுத்தாத்துவித முத்தி உள்ளிட்ட பல சைவ சித்தாந்தக் கருத்துகளைக் கொண்டுள்ளது. சாத்திரம் நிறைந்த தோத்திர நூலாக அறியப்படுகிறது. முருக பக்தர்களுக்கான பாராயண நூலாக விளங்குகிறது.

பாடல் நடை

உருவ அழகு

நேசர்க் (கு) இன்ப நிறையொளி பரப்பித்
திருவளர் செலும்பொன் செந்தா மரைக்கு
மருவும்ஓர் சான்றாய் மலர்ந்தபொற் பதமும் ..
நினைப்பொடு மறப்பு நீங்கிடும் அதீதம்
அனைப்பர நாத மறையொலி அலம்பும் ... 30
பாந்தள்அம் கடிகைப் பன்மணி இழைத்த
காந்துசெஞ் சுடர்க்கால் கழல்பரி புரமும் ..
கண்குளிர் கனகக் கவின்கிடந் (து) இலங்கும்
கிண்கிணி இசைக்கும் கிளர்திரு அரையும் ..
வட்டுடை வரிந்து தொட்டகூர் வாளும் .. ... 35
கட்டுறு யோகப் பட்டிகைச் சிறப்பும் ..
இந்திரவில் இரண்டு எதிர்பொருத் துவபோல்
சுந்தர ஆழி சூட்டும் அங் குலியும் ..
மன்இரு முகிலால் மணிதரு நிதிசேர்
பன்னிரு கமல பாணியும் .. அவற்றிற் ... 40
சூலமும், வேலும், துரோணமும், சரமும்,

முருகன் உபதேசம் அளித்தல்

அருளெனும் தலத்தில் அறிந்துகால் மடக்கி
இருளற இருக்கும் இயற்கையும் விண்டான் .. ... 160
பன்னிரண் (டு) அங்குலம் பறிந்துடும் பிராணன்,
பின்னதின் நான்கும் பிரிந்துபோம் .. அதனால்
ஆயுளும் குறைந்திட் (டு), ஆக்கையும் தளர்ந்து
சாயும்என் (று) உரைத்துச் சாகா (து) இருக்க,
நாடிஓர் பத்தும் நாடி, நா டிகள்புக் (கு) ... 165
ஓடிய வாயு ஒருபதும் தேர்ந்து,
சொன்ன நாடிகளிற், சுழுமுனை நடுவாம்
இன்னதின் பக்கத் (து), இடைபிங் கலையாம்
அக்கினி திங்கள் ஆதவன் கலைகள்
புக்கமுச் சரமும் போய்மீண் (டு) இயங்கும், ... 170
மூலகுண் டலியாம் உரகம் மூச்செறித்து,
வாலது மேல்கீழ் மண்டலம் இட்டுப்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jul-2024, 21:52:29 IST