தமிழ் சூடி (நீதி நூல்)
தமிழ் சூடி, ஔவையாரின் ஆத்திசூடி, பாரதியாரின் புதிய ஆத்திசூடியை அடியொற்றி டாக்டர் வ.சுப. மாணிக்கம் இயற்றிய குழந்தைகளுக்கான நீதி நூல்.
வெளியீடு
தமிழ் சூடியின் முதல் பதிப்பு பிற கவிதை நூல்களுடன் இணைந்து, 'மாமலர்கள்' என்ற தலைப்பில் 1969-ல் வெளியானது. பாரி நிலையம் அந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டது. தமிழ் சூடி நூலின் மறுபதிப்பு 1978-ல் வெளியானது. தமிழ் சூடியின் புதிய மறுபதிப்பு, 2017-ல், 'மாணிக்க விழுமியங்கள் - 13' என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றது. தமிழ் மண் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.
ஆசிரியர்
தமிழ் சூடி நூலை எழுதியவர் டாக்டர் வ.சுப. மாணிக்கம்.
நூல் அமைப்பு
தமிழ் சூடி, ஒரடியால் அமைந்த 118 பாடல்களைக் கொண்டது. இந்நூலின் காப்புச் செய்யுள், குழந்தையை முன்னிலையாகக் கொண்டு தமிழ் வாழ்த்தாக அமைந்துள்ளது. 'த' வரிசை எழுத்துக்களால் நிரல்பட இக்காப்புச் செய்யுள் உள்ளது.
உள்ளடக்கம்
தமிழ் சூடி நூல், அகத்தமிழ் படி, ஆழ்வார் நெறிநில், இந்தியனா யிரு, ஈட்டுக பொருள் என்று அகர வரிசையில் தொடங்கி நகத்தைக் கடியேல், நாட்டை நினை, நீளப்பேசேல், நுகத்தொழில் சிறப்பு எனத் தொடர்ந்து விவிலியம் படி, வீண்மை விடு, வெட்கப்படு, வேலையை நிறுத்தேல், வைவதை விடு, வௌவியாய் இரேல் என 118 நீதி மொழிகளில் சிறார்களுக்கு அறிவுரை கூறும் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளது.
பாடல் நடை
காப்புச் செய்யுள்
தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்
தாய்மொழி தவறாது கற்பாய் குழந்தாய்
திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய்
தீமைகள் மனத்தினும் தீண்டாய் குழந்தாய்
துடிபோலப் பள்ளிக்குத் தொடர்வாய் குழந்தாய்
தூயதமிழ் எங்குமே சொல்வாய் குழந்தாய்
தென்றலில் நன்றாகத் திளைப்பாய் குழந்தாய்
தேனினிய நூலகம் செல்வாய் குழந்தாய்
தைத்திங்கள் பொங்கலில் தளிர்ப்பாய் குழந்தாய்
தொண்டுகள் பலசெய்யத் துடிப்பாய் குழந்தாய்
தோலாத தமிழ்நூல்கள் தொகுப்பாய் குழந்தாய்
தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்
நீதி மொழிகள்
- அகத்தமிழ் படி
- ஆழ்வார் நெறிநில்
- இந்தியனா யிரு
- ஈட்டுக பொருள்
- உடலை வளை
- ஊழையும் வெல்க
- எழுச்சி பெறுக
- ஏனென்று கேள்
- ஐ.நா. நன்று
- ஒருமை வழிபடு
- ஓசி கேளேல்
- ஒளவையைப் போற்று
- செந்தமிழ் பயில்
- தேவாரம் பாடு
- குறுந்தொகை படி
- யாப்புப் பழகு
- சேமிப்புப் பழகு
- மொழிபல கல்
- நகத்தைக் கடியேல்
- நை நை என்றிரேல்
- கையூட்டு மறு
- இந்தியை விலக்கு
- எச்சில் துப்பேல்
- வைவதை விடு
- யோகம் பயில்
மதிப்பீடு
தமிழ் சூடி, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணையானது. கால மாற்றத்திற்கேற்பப் பல புதுமைக் கருத்துக்களைக் கொண்டமைந்தது. சிறார்களுக்காகப் பாடப்பட்ட நூலாக அறியப்பட்டாலும் பெரியோர்களுக்கான பல நீதிமொழிகளையும் கொண்டுள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டின் நீதி நெறி நூல்களுள் ஒன்றாக தமிழ் சூடி நூல் அறியப்படுகிறது.
உசாத்துணை
- தமிழ் சூடி: மாணிக்க விழுமியங்கள்-13: தமிழ் மண் பதிப்பக மறுபதிப்பு: 2017: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- வ.சுப.மாணிக்கனாரின் 'மாமலர்கள்' வீசும் மணம் - 2: முனைவர் ச.அருள்: வல்லமை இணைய இதழ் கட்டுரை
- தமிழ் சூடியில் சமுதாய நெறிகள்: சு. ஜெனிபர்: பதிவுகள் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-Jul-2024, 21:50:23 IST