under review

ஜெயந்த் காய்கினி

From Tamil Wiki
ஜெயந்த்
ஜெயந்த் காய்கினி

ஜெயந்த் காய்கினி (பிறப்பு: ஜனவரி 24, 1955) கன்னட எழுத்தாளர், கவிஞர், திரைப்பாடலாசிரியர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் என்னும் களங்களில் புகழ்பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஜெயந்த் காய்கினி கர்நாடக மாநிலத்தில் தெற்கு கனரா மாவட்டம்) கோகர்ணம் பகுதியில், எழுத்தாளரான கௌரீஷ் காய்கினிக்கும் சமூகப்பணியாளரான சாந்தாவுக்கும் ஜனவரி 24, 1955-ல் பிறந்தார்.

ஜெயந்த் காய்கினி தார்வாட் நகரில் கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜெயந்த் காய்கினி மும்பையில் பல்வேறு மருந்து நிறுவனங்களில் வேதியியலாளராக பணியாற்றினார். பின்னர் மும்பை விளம்பர நிறுவனங்களின் எழுத்தாளராக இருபத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார். அங்கே ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.

ஜெயந்த் காய்கினியின் மனைவி ஸ்மிதா. மகள் ஸ்ரஜனா கைகினி தத்துவப் பேராசிரியர், மகன் ரித்விக் கைகினி ஓவியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர். ஜெயந்த் காய்கினியின் தாய்மொழி கொங்கணி. மராத்தி, இந்தி ஆகியமொழிகளையும் அறிந்தவர் ஜெயந்த் காய்கினி.

ஊடக வாழ்க்கை

ஜெயந்த் காய்கினி கன்னடத் தொலைக்காட்சி சேனல்களான Etv கன்னடம், ஜீ கன்னடம் ஆகியவற்றின் நிறுவனர். கன்னடத்தின் புகழ்பெற்ற விவாதமேடையான நமஸ்காராவை தொகுத்து வழங்கினார். இது குவெம்பு, பேந்த்ரே, சிவராம காரந்த் உள்ளிட்ட படைப்பாளிகளைப் பற்றிய விவாதமேடை. கன்னட இலக்கியச் சூழலில் மிகப்புகழ்பெற்ற ஒன்று.

இதழியல்

ஜெயந்த் காய்கினி பாவனா (கற்பனை) என்னும் இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

திரை வாழ்க்கை

ஜெயந்த் காய்கினி கன்னடத்தின் திரையுலகுடன் பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் என்னும் நிலைகளில் இணைந்து பணியாற்றினார். கிரீஷ் காசரவள்ளியின் த்வீபா படத்ததின் பாடலாசிரியராக 2002ல் அறிமுகமானார். 2003ல் வெளிவந்த சிரிகுட கனசு என்னும் படத்திற்காக கன்னட நடிகர் ராஜ்குமார் பாடிய பந்துவே ஓ பந்துவே என்ற பாடல்[1] அவருக்கு பெரும்புகழைப் பெற்றுத்தந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கன்னடப் பாடல்களையும் வசனங்களையும் எழுதியவர் அவர்தான்.

இலக்கிய வாழ்க்கை

ஜெயந்த் காய்கினி மிக இளம்வயதிலேயே கவிஞராக அறிமுகமானவர். தன் 19-வது வயதில் அவர் வெளியிட்ட ரங்கடிந்தோஷிது தூரா (1974) அவருடைய முதல் கவிதைத் தொகுதி. அதற்கு கன்னட சாகித்ய அகாதமி விருதைப் பெற்று புகழ்பெற்றார். ஏழு கவிதைத் தொகுதிகளும் திரைப்பாடல்களின் தொகுப்பாகிய எல்லோ மாலையாகிதே ஆகியவையும் வெளியாகியுள்ளன.

ஜெயந்த் காய்கினி மெல்லிய நகைச்சுவை ஓடும் யதார்த்தவாதச் சிறுகதைகளுக்காக புகழ்பெற்றவர். அவருடைய பத்து சிறுகதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன. ஐந்து கட்டுரைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. அவற்றில் இலக்கியம், சமூகவியல் சிக்கல்கள் ஆகியவற்றை விவாதித்துள்ளார்.

ஜெயந்த் காய்கினி குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியரும்கூட. அவருடைய நான்கு நாடகங்கள் வெளியாகியுள்ளன.

விருதுகள்

திரை விருதுகள்

திரைப்படப் பாடலாசிரியராக ஜெயந்த் காய்கினி 2009, 2010, 2015, 2016, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். 2003-ல் சிரிகுடெ கனசுகளு திரைப்படப் பாடல்களுக்காக கர்நாடக அரசு வழங்கும் சிறந்த எழுத்தாளர் விருதைப் பெற்றார். 2007-ல் சிறந்த பாடலாசிரியருக்காகவும், 2019-ல் சிறந்த கதாசிரியருக்காகவும் கர்நாடக அரசின் திரை விருதுகளைப் பெற்றார்.

இலக்கியவிருதுகள்
  • கர்நாடக சாகித்ய அக்காதமி விருது 1974, 1982, 1989, 1996 ஆகிய ஆண்டுகளில்
  • பி.எச்.ஶ்ரீதர விருது 1997
  • குசுமஹக்ராஜ் தேசியவிருது கவிதைக்காக 2010
  • தும்கூர் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் 2011
  • தினகர் தேசாய் கவிதை விருது 2004
  • DSC Prize for South Asian Literature 2018 (No Presents Please...)

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • ரங்கடிந்தோஷிது தூரா (1974)
  • கோடிதீர்த்தா (1982)
  • ஷ்ரவண மாத்யானா (1987)
  • நீலமலே (1997)
  • ஜெயந்த் காய்கினி கவிதேகளு (2003)
  • ஒந்து ஜிலேபி (2008)
  • விசித்ரசேனேய வைகாரி (2021)
திரைப்பாடல் தொகுப்பு
  • எல்லோ மாலையாகிதே (2012)
நாடகம்
  • செவந்தி பிரசங்கா (1997)
  • இது நின்ன அம்ருதா (1999)
  • ஜடேகிருவானு சண்டீரா (2004)
  • ரூபாந்தர நாடககளு (2018)
மொழியாக்கங்களில்
  • No Presents Please: Mumbai Stories by Jayant Kaikini; Translated by Tejaswini Niranjana
  • Mithun Number Two and Other Mumbai Stories by Jayant Kaikini; Translated by Tejaswini Niranjana
  • பால்மீசை- (கன்னடச் சிறுகதைகள். மொழியாகம் நஞ்சுண்டன்) தொகுதியில் கதைகள் இடம்பெற்றுள்ளன. (காலச்சுவடு)
  • மகிழம்பூ மணம் (மொழிபெயர்ப்பாளர்: கே. நல்லதம்பி)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Nov-2025, 19:56:33 IST