under review

செல்லப்பன்

From Tamil Wiki
செல்லப்பன்

செல்லப்பன் (பிறப்பு: 1941) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார். நத்தம்பேடு கனகரசு நாடக சபாவின் வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

செல்லப்பன் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் பவானி அம்மாபேட்டையில் ராமசாமி, அங்கம்மாள் இணையருக்கு 1941-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் பெருமாள், கணேசன், சுப்பிரமணி, கிருஷ்ணன். தாத்தா நரசிம்மன் தோல்பொம்மை கூத்துக் கலைஞர். தந்தையும், மனைவி ஜெயாவும் கூத்துக் கலைஞர்கள். அம்மா அங்கம்மாளும் பிரபலமான கூத்துக் கலைஞர்.

கலை வாழ்க்கை

செல்லப்பன் ஆறு வயது முதல் கூத்து ஆடினார். செல்லப்பனின் வாத்தியார் இராமசாமி. செல்லப்பன் பதினைந்து வயதில் பெரும்பாளையம் சின்னப்பட்டி காளி குழுவில் இணைந்தார். பெங்களூர், ஓசூர், காரிமங்களம், காவெரிப் பட்டிணம், பாலக்காடு, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் ஆரம்ப காலங்களில் 'டெண்ட்' போட்டு நாடகம் நடத்தினார். அதன்பின்னர் டெண்ட் போடாமல் பண்டிகையின் போது நாடகம், கூத்துகள் ஆடினார். நத்தம்பேடு கனகரசு நாடக சபா, மேச்சேரி சடையன் சபா ஆகிய குழுக்களில் தெருக்கூத்து ஆடினார். குழல்(முகவீணை), மிருதங்கம், ஆர்மோனியம் ஆகியவை இவர் குழுக்களில் வாசிக்கப்படும் இசைக்கருவிகள். செல்லப்பன் மிருதங்கம் வாசிப்பார்.

மகாபாரதம், ராமாயணம், நாவல்ஸ் ஆகியவை ஆடினார். வாழப்பாடி, ஆத்தூர், தம்மபட்டி, செந்தாரப்பட்டி, சமயபுரம், பாதிரிபேட்டை, துறையூர், சென்னை ஆகிய இடங்களில் தோல்பொம்மைக்கூத்து ஆடினார். சேலம் மாவட்டத்திலுள்ள பல இடங்களில் தெருக்கூத்து ஆடியுள்ளார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மாற்றாந்தாய் கொடுமை
  • நல்லதங்காள்
  • கணவன் உயிரைக் காத்த கற்பகவள்ளி
  • ஆயிரம்பேரை அடிமை கொண்ட அபூர்வ கனகவள்ளி
  • மகாபாரதக் கூத்துகள்
  • நாவல்ஸ்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 13:07:56 IST