under review

சூட்சுமபுரீஸ்வரர் கோயில்

From Tamil Wiki
சூட்சுமபுரீஸ்வரர் கோயில்
சூட்சுமபுரீஸ்வரர் கோயில்

சூட்சுமபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் சிறுகுடியில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

சூட்சுமபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டம் சிறுகுடியில் உள்ளது. சிறுகுடி இன்று மருவி செருகுடி என்று வழங்குகிறது. சிறுகுடி கற்கத்தியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் இருபத்தியெட்டு கிலோமீட்டர் தொலைவில் கற்கத்தி உள்ளது. பேரளம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது.

வரலாறு

இந்த இடத்தின் வரலாற்றுப் பெயர் சூட்சமாபுரி. இது சோழ மன்னன் கிள்ளி வளவனின் நண்பனும் நிலப்பிரபுவும் ஆன பண்ணன் பிறந்த இடம். பண்ணன் தனது வள்ளல் தன்மைக்கு பிரபலமானவர். சங்க கால இலக்கியப் படைப்புகளான அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் பாராட்டப்பட்டுள்ளார்.

தொன்மம்

  • சிவபெருமானும் பார்வதி தேவியும் கைலாச மலையில் பகடை விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த விளையாட்டில் பார்வதி தேவி வெற்றி பெற்றதாகவும், இறைவன் உடனடியாக மறைந்ததாகவும் நம்பப்படுகிறது. அவர் எங்கிருக்கிறார் என்று கவலைப்பட்ட பார்வதி தேவி இத்தலத்திற்குச் சென்று மங்கள தீர்த்தத்தை உருவாக்கி ஒரு பிடி மண்ணால் லிங்கத்தை உருவாக்கி அதை இங்கு நிறுவி வழிபட்டார். சிவன் பார்வதிக்கு தரிசனம் செய்து மீண்டும் கைலாசத்திற்கு அழைத்துச் சென்றார். மாயமாக மறைந்தவர் என்பதால் இங்குள்ள இறைவன் 'ஸ்ரீ சூட்சமபுரீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.
  • கருடன், கந்தர்வர்கள், விஸ்வாமித்திர முனிவர், அங்காரகன் (செவ்வாய் கிரகம்) இக்கோயிலில் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
அங்ககாரன் சன்னதி

கோயில் பற்றி

  • மூலவர்: சூட்சமபுரீஸ்வரர், மங்களநாதர், சிறுகுடீசர், கல்யாணசுந்தரேசர்
  • அம்பாள்: மங்களநாயகி
  • தீர்த்தம்: சூரிய தீர்த்தம்/மங்கள தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: வில்வம் மரம்
  • பதிகம் வழங்கியவர்: திருஞான சம்பந்தர்
  • இது இருநூற்று எழுபத்தியாறு தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று மற்றும் காவிரியின் தென்கரையில் சோழநாட்டில் உள்ள அறுபதாவது சிவஸ்தலம்.
  • இக்கோவிலில் கடைசியாக கும்பாபிஷேகம் மே 22, 2013 அன்று நடந்தது.

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இந்தக் கோவிலின் ராஜகோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இக்கோயிலில் கொடிமரம் (த்வஜஸ்தம்பம்) இல்லை. இக்கோயிலில் உள்ள சிவபெருமான் தெய்வீக (திவ்ய) லிங்கம். லிங்கம் மண்ணால் ஆனது என்பதால் ஆவுடைக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்தின் மீது எப்போதாவது ஒருமுறை புனுகு மட்டும் பூசப்படும். லிங்கம் எப்போதும் உலோகக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும். பார்வதி ஒரு பிடி மண்ணைக் கொண்டு லிங்கத்தை உருவாக்கியதால், இந்த இடம் சிறுபிடி என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது சிறுகுடி என மாற்றப்பட்டுள்ளது. கற்பூர ஆரத்தியின் வெளிச்சத்தில் லிங்கத்தின் மீது பார்வதி தேவியின் கைப் பதிவைக் காணலாம்.

சூட்சுமபுரீஸ்வரர் கோயில் சிற்பங்கள்

சிற்பங்கள்

மாடவீதிகளில் மங்களவிநாயகர், முருகன், அவரது துணைவியருடன் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், நவக்கிரகம், திருஞானசம்பந்தர், சூரியன், பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் சிலைகள் உள்ளன. இக்கோயிலில் அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது. சிவபெருமானின் ஊர்வலச் சிலை சந்தோஷ ஆலிங்கனமூர்த்தி (அன்புடன் தேவியைத் தழுவிய இறைவன்) என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலில், நவக்கிரகத்துடன், திருஞான சம்பந்தர், பைரவர், விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

சிறப்புகள்

  • இங்குள்ள இறைவனை வழிபடுபவர்கள் முக்தி அடைந்து இறைவனின் திருவருளத்தில் இடம் பெறுவர் என்று திருஞானசம்பந்தர் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.
  • திருஞானசம்பந்தர் தனது 11-ஆவது பாடலில் இந்த ஆலயம் தேனீக்களை அதிகம் ஈர்க்கிறது என்று குறிப்பிடுகிறார் (தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய மானமர் கரமுடை யீரே) இந்தக் கோவிலின் மண்டபத்தில் இன்றும் தேன்கூடுகளைக் காணலாம்.
  • இது செவ்வாய் கிரகம் தொடர்பான தோஷங்களுக்கான பரிகார ஸ்தலம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர் என்பதும் நம்பிக்கை.
  • சம்பந்தர் இங்கு சிவனை வணங்கி கிரகங்களின் பாதகமான அம்சங்களில் இருந்து நிவாரணம் வேண்டி கோளறு பதிகம் பாடினார்.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 6.30-11.30 வரை
  • மாலை 04.30 - 7.30 வரை

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி.
  • கார்த்திகையில் திருக்கார்த்திகை
  • மார்கழியில் திருவாதிரை
  • மாசியில் மாசி மகம், மகா சிவராத்திரி
  • பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Nov-2023, 10:23:21 IST