under review

சுபாஜினி சக்கரவர்த்தி

From Tamil Wiki
சுபாஜினி சக்கரவர்த்தி (நன்றி: செங்கதிர்)

சுபாஜினி சக்கரவர்த்தி (பிறப்பு: பிப்ரவரி 7, 1954) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கல்வியாளர், நாட்டுக்கூத்துக் கலைஞர், நாடக ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுபாஜினி சக்கரவர்த்தி இலங்கை மட்டக்களப்பில் சுப்பிரமணியம், முத்துரெட்ணம் இணையருக்கு பிப்ரவரி 7, 1954-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ராமகிருஷ்ணா மிஷன் மகளிர் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலை, உயர்கல்வியை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசியப் பாடசாலையில் கற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வர்த்தகப் பட்டதாரி. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவை முடித்து இலங்கை நிர்வாக சேவைப் (S.L.E.A.S) பரீட்சையில் தேர்ச்சி பெற்றார்.

ஆசிரியப்பணி

  • மட்டு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
  • மட்டக்களப்பு மாவட்ட கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக(திட்டமிடல்) இருந்தார்.
  • மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றினார்.
  • வலயக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

அமைப்புப் பணிகள்

  • மட்டு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபராக இருந்த காலத்தில் முதலாவது ஜனாதிபதி சாரணியத்தை உருவாக்கினார்.
  • சுபாஜினி BUDS என்ற அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் செயலாளராகவும் உள்ளார்.

நாடக வாழ்க்கை

சுபாஜினி சக்கரவர்த்தி நாட்டுக்கூத்தில் ஆர்வமுடையவர். நாடகம், நாடகப் பிரதி எழுதுதல், நாடகம் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார். இவர் எழுதித் தயாரித்த 'சுபத்ரா கல்யாணம்', நாட்டுக்கூத்து தமிழ்த்தினப் போட்டியில் தேசியமட்ட விருதினைப் பெற்றது. தொடர்ந்து 'கர்ணன்', 'பாதுகை', 'வாலிவதம்', 'பாசுபதம்', 'அபிமன்யு', 'அல்லி' போன்ற வடமோடிக் கூத்துக்களையும் 'காத்தவராயன்', போன்ற தென்மோடிக் கூத்துக்களையும் எழுதி அண்ணாவியாரின் உதவியுடன் தயாரித்து பாடசாலை தமிழ்த்தினப் போட்டியில் மேடையேற்றியுள்ளார் சுபாஜினி. பல கூத்துக்கள் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. 'சிலைகள்', 'இராவணேசன்', 'அம்பை வென்ற அன்பு', ஆகிய இவர் பிரதி எழுதித் தயாரித்த நாடகங்கள் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றன.

அரங்காற்றுகை செய்த நாடகங்கள்
  • சுபத்ரா கல்யாணம்
  • கர்ணன்
  • பாதுகை
  • வாலிவதம்
  • பாசுபதம்
  • அபிமன்யு
  • அல்லி
  • சிலைகள்
  • இராவணேசன்
  • அம்பை வென்ற அன்பு

இலக்கிய வாழ்க்கை

சுபாஜினி சக்கரவர்த்தி கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். செங்கதிர், மனிதம், வின்சன்ட் பாடசாலையின் பேழை, பூபாளம் ஆகிய இதழ்களிலும் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • சிறந்த இலக்கியவாதிக்கான விருது 2018-ம் ஆண்டு தமிழ் ஓசை பத்திரிகை
  • சிறந்த இலக்கியவாதிக்கான விருது 2019-ம் ஆண்டு தமிழ் ஓசை பத்திரிகை
  • 2007-ம்ஆண்டுக்கான சிறந்த நிர்வாகி(WSO நிறுவனம் )

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jun-2024, 09:29:48 IST