under review

சுதாகரி மணிவண்ணன்

From Tamil Wiki

சுதாகரி மணிவண்ணன் (பிறப்பு: பிப்ரவரி 4, 1974) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடக நடிகர். கவிதைகள், சிறுவர் கதைகள், நாடகப் பிரதிகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுதாகரி மணிவண்ணன் இலங்கை மட்டக்களப்பில் சுப்பிரமணியம், வாலாம்பிகை இணையருக்கு பிப்ரவரி 4, 1974-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு ஏறாவூர் மகாவித்தியாலயத்தில் கற்றார். உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையில் கற்றார். போராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முது கல்விமாணிப் பட்டம் பெற்றார். கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்றார். கல்வி டிப்ளோமாவை இலங்கைத் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

ஆசிரியப்பணி

சுதாகரி மணிவண்ணன் 2001 முதல் 2015 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 2016-ல் அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். மலேசியாவில் தலைமைத்துவப் பயிற்சியைப் பெற்றார். மட்/ககு/குமாரவேலியா கிராம சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றினார். தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு நிலையத்தில் வருகைதரு விரிவுரையாளராக உள்ளார்.

அமைப்புப் பணிகள்

  • சரணி கலைக்கழகத்தின் தலைவராகவும், ஏறாவூர்ப்பற்று கலாசாரப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்தார். தலைமைப்பண்பு, நாடகப் பயிற்சிப் பட்டறை நடத்தினார்.
  • 1995-ல் சரணி கலைக்கழகத்திற்காக ”சுவடு” எனும் சஞ்சிகையை வெளியிட்டார்.

நாடக வாழ்க்கை

சுதாகரி மணிவண்ணன் நாடக விவாத அரங்குகளில் பங்கேற்றார். அகில இலங்கை அளவில் 'திருந்திய உள்ளம்' நாடகத்திற்கு சிறப்பு விருது பெற்றார். 'உயிர்ப்பு', 'வாழ்வின் நிஜம்' ஆகிய நாடகங்களில் சிறந்த நடிகை விருது பெற்றார். 'கும்பமே கோயில்' நாடகத்துக்காக சிறந்த நாடகம், சிறந்த கையழுத்துப் பிரதிக்கான இரண்டு விருதுகளையும் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சுதாகரி மணிவண்ணன் பெண்கள் இலக்கியம், கட்டுரை விமர்சனங்கள், கவிதை, சிறுகதை, சிறுவர் கதைகள் எழுதினார். 'கனல்', 'கவிதைகள் பேசட்டும்' போன்ற கவிதைத் தொகுப்புகளில் இ்வரது கவிதைகள் வெளிவந்தன.

'ஒருதுளி வாழ்வு' என்ற கவிதைத் தொகுப்பையும் 'அரங்க அலைகள்' என்ற வெற்றி பெற்ற நாடகப் பிரதிகளின் தொகுப்பையும் 'பிறந்த நாள் பரிசு', 'யார் நல்ல தலைவர்' ஆகிய சிறுவர் கதை நூல்களையும் வெளியிட்டார்.

ஆய்வுகள்

சுதாகரி மணிவண்ணன் 'தெற்காசிய நாடுகளின் கல்விநிலை', 'வாழ்வியல் மரபுகளும் நம்பிக்கைகளும் கண்ணோட்டம்', 'ஏறாவூர்ப்பற்று பாரம்பரியத் தொழில்களில் சலவைத் தொழில்', 'மட்டக்களப்புக் கல்வி வலயத்தின் தரம் 5', 'புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் கிராம நகரப் புறங்களின் தாக்கம்', ஏ'றாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்தில் க.பெ.த. (ச/த) கணிதப் பாட அடைவில் எதிர்நோக்கும் சாவல்கள்' போன்ற தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

விருதுகள்

  • அகில இலங்கை அளவில் சிறந்த இளம் கலைஞர், எழுத்தாளர் ஆகிய இரு விருதையும் 1999-ல் பெற்றார்.
  • 2013-ள் சிறந்த ஆசிரியருக்கான குரு பிரதீபா பிரபா விருது.
  • 2015-ல் 'யார் நல்ல தலைவர்' என்ற சிறுவர் கதைக்கு முதலாம் இடம் மற்றும் விருது கிடைத்தது.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • ஒருதுளி வாழ்வு
நாடகம்
  • அரங்க அலைகள்
சிறுவர் நூலகள்
  • பிறந்த நாள் பரிசு
  • யார் நல்ல தலைவர்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2024, 20:30:26 IST