under review

சிவநேசன் (இதழ்)

From Tamil Wiki
சிவநேசன் இதழ்

சிவநேசன் (1927-1937) சைவ சமயம் சார்ந்த இதழ். ராம. ராமசாமிச் செட்டியார் சிவநேசன் இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர். சிவநேசன் இதழ், சைவ சமயம் சார்ந்த பல கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டது.

பிரசுரம், வெளியீடு

சிவநேசன் இதழ், செட்டிநாட்டைச் சேர்ந்த பலவான்குடியிலிருந்து 1927 முதல் வெளிவந்தது. பலவான்குடி ராம. ராமசாமிச் செட்டியார் தனது சொந்த அச்சகமான சிவநேசன் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு இவ்விதழை வெளியிட்டார். சிவநேசன் இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டார். சிவநேசன் இதழ், 1927 முதல் மாத இதழாக வெளிவந்தது. பின்னர் வார இதழாகச் சில காலம் வெளியானது. பின் மீண்டும் மாத இதழாக வெளிவந்தது. சிவநேசன் இதழ், புத்தக வடிவில், டெம்மி அளவில், 40 பக்கங்களுடன் வெளியானது. தனி இதழின் விலை 3 அணா. அஞ்சல் மூலம் பெற 4 அணா. ஆண்டுச் சந்தா: இரண்டு ரூபாய், நான்கணா.

முதலில் பலவான்குடியிலிருந்தே வெளிவந்த சிவநேசன் இதழ், பின்னர் சிலகாலம் தஞ்சை அருகே உள்ள திருத்தென்குடித் திட்டையிலிருந்து வெளிவந்தது.

நோக்கம்

சிவநேசன் இதழ், தனது நோக்கமாக ”தக்கார் பலர் தமிழ் வளங்கருதி, சைவநலம் கருதி எழுதிய கட்டுரைகளைக் கொண்டு தரணி முழுவதும் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கச் செய்யும் தொண்டு சிவநேசன் தொண்டு” என்று குறிப்பிட்டது.

உள்ளடக்கம்

இதழின் முகப்பில் ‘சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக” என்ற வாசகம் இடம் பெற்றது. ’செந்தமிழ்த் திங்கள் வெளியீடு” என்ற குறிப்பு இடம்பெற்றது. சைவம் சார்ந்த கட்டுரைகள், சைவ சமய விளக்கங்கள், சாத்திரக் குறிப்புகள், இலக்கிய நூல்களின் உரைகள், சைவசித்தாந்த சமாஜத் தலைமையுரைகள், மணிவாசகர் சங்கத் தலைமையுரைகள், நூல் மதிப்புரைகள் ஆகியன சிவநேசன் இதழில் இடம்பெற்றன. தென்குடித் திட்டை திருவிழாச் சிறப்பு, வேதாகம உண்மை, திருவெம்பாவை பாடலின் கருத்து, சிவபாரம்யம், உண்மைத் துறவறம், சைவத் திருமுறை விளக்கம், திருக்குறள் சிறப்பு போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகின. ‘மதிப்புரை மஞ்சரி’ என்ற தலைப்பில் நூல் விமர்சனங்கள் இடம் பெற்றன. சைவசித்தாந்தச் சான்றோர்கள் பலரும் இவ்விதழுக்குப் பங்களித்தனர்.

இதழ் நிறுத்தம்

1927 முதல் வெளிவந்த சிவநேசன் இதழ் பத்தாண்டுகள் வரை வெளிவந்து 1937-ல் நின்றுபோனது.

ஆவணம்

சிவநேசன் இதழ்களில் சில தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

சைவம் சார்ந்து நகரத்தார் வெளியிட்ட இதழ்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று சிவநேசன். தரமான தாள். தெளிவான அச்சு, சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்த இதழாக சிவநேசன் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 12:53:50 IST