under review

சின்னம்மா

From Tamil Wiki
சின்னம்மா குமுதம்

சின்னம்மா (1971) எஸ்.ஏ.பி.அண்ணாமலை எழுதிய நாவல். குமுதம் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. செட்டிநாட்டுப் பின்புலம் கொண்ட படைப்பு

எழுத்து, பிரசுரம்

சின்னம்மா எஸ்.ஏ.பி.அண்ணாமலை எஸ்.ஏ.பி என்னும் பெயரில் 1971-ல் குமுதம் வார இதழில் எழுதிய தொடர்கதை

கதைச்சுருக்கம்.

செட்டிநாட்டுப் பின்னணியில் அமைந்த நாவல் இது. மெய்யப்பன் ,குழந்தையன் என்னும் இரு சிறுவர்களின் பார்வையில் விரிகிறது கதை. அவர்களின் தாய் இளமையில் இறக்க தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார். சிற்றன்னையாகிய நளினி குழந்தைகள்மேல் அன்பாக இருக்கிறாள். ஆனால் கணக்கப்பிள்ளை உலகநாதன் உறவினர் சிலர் உதவியுடன் நளினிக்கு அவள் முறைமாப்பிள்ளை காப்டன் தட்சிணாமூர்த்திக்கும் உறவு இருந்தது என்றும் அதனால் அவள் கணவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கதைகட்டி மெய்யப்பனை நம்பச் செய்கிறான். சொத்துக்கள் களவுபோகத் தொடங்குகின்றன. மெய்யப்பனின் தந்தையின் நண்பரான சாரங்கபாணி நளினியை தன் தோழர் மணம் செய்ததை விரும்பாதவர். ஆனால் நண்பரின் சொத்துக்கள் மறைவதை அறிந்து அந்த விவகாரத்தில் ஈடுபட்டு சதியை கண்டறிந்து குழந்தைகளை மீட்டு நளினியிடமே ஒப்படைக்கிறார்

கதைமாந்தர்

  • மெய்யப்பன் -வயதுக்கு மீறிய வளர்ச்சி கொண்ட சிறுவன்
  • குழந்தையன்- குழந்தைத்தனம் மாறாத சிறுவன்
  • நளினி- சிற்றன்னை
  • உலகநாதன்- கணக்குப்பிள்ளை, சதிகாரன்
  • தட்சிணாமூர்த்தி -நளினியின் முறைப்பையன்
  • சாரங்கபாணி- குழந்தையனின் தந்தையின் தோழர்

இலக்கிய இடம்

சின்னம்மா வழக்கமான பொதுவாசிப்புக் கதை. சதி, சதிவெளிப்படுதல், மர்மம் ஆகியவை கொண்டது. ஆனால் அதன் செட்டிநாட்டு பின்னணி அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. குழந்தையன். மெய்யப்பன் போன்ற கதைமாந்தரும் தெளிவாக வடிவமைக்கப்பட்டவர்கள். செட்டிநாட்டுப் புலத்தில் எழுதப்பட்ட முதல் கதை என குறிப்பிடத்தக்கது

உசாத்துணை


✅Finalised Page