under review

சித்திலெப்பை மரைக்காயர்

From Tamil Wiki
சித்திலெப்பை மரைக்காயர்

சித்திலெப்பை மரைக்காயர் (முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர்) (சித்தி லெவ்வை) (ஜூன் 11, 1838 - பிப்ரவரி 5, 1898) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், கல்வியியலாளர், சமூக செயல்பாட்டாளர். ஈழத்தின் முதல் நாவலான 'அசன்பே சரித்திரம்' எழுதியவர். முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பல முன்னெடுப்புகள் செய்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சித்திலெப்பை மரைக்காயரின் இயற்பெயர் முகம்மது காசிம். இலங்கை கண்டியில் முல்க் ரஹ்மதுல்லாவின் மகனாக ஜூன் 11, 1838-ல் பிறந்தார். முஸ்லிம்களின் இறங்கு துறையின் முக்கிய தளங்களிலொன்றான அளுத்காமம் பகுதியில் குடியேறி அங்கேயே திருமணம் புரிந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட அரேபியாவைச் சேர்ந்த முல்க் ரஹ்மதுல்லாவின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கண்டியை ஆண்டு வந்த காலகட்டத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக முல்க் ரஹ்மதுல்லா கண்டியில் குடியேறினார். தந்தை வழக்கறிஞர்.

முகம்மது காசிம் சித்திலெப்பை திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார். குர்ஆன் ஓதல், மார்க்க சட்ட திட்டங்கள் பற்றி கற்றார். அரபு, தமிழ், ஆங்கிலம் பயின்றார்.

சித்தி லெவ்வை (நன்றி: விடிவெள்ளி)

தனிவாழ்க்கை

சித்திலெப்பை மரைக்காயர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் 1862-ல் வழக்கறிஞராக நியமனம் பெற்றார். 1864-ல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். நொத்தாரிசாகவும் பணிபுரிந்தார். கண்டி மாநகர சபை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். சிறிது காலம் மாநகர சபை உறுப்பினராக பணிபுரிந்தார். பின்னர் சமூகச்செயல்பாடுகளுக்காக அனைத்துக் கடமைகளிலிருந்தும் விலகிக் கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

சித்திலெப்பை மரைக்காயர் இலங்கை சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று போராடினார். இதனால் 1889-ம் ஆண்டில் இஸ்லாமியர் இருவர் நியமன உறுப்பினராக நியமனம் பெற்றனர். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை சித்தி லெப்பை வரவேற்று தன் முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு வழங்கினார்.

சமூகப் பணி

சித்திலெப்பை மரைக்காயர் இலங்கை முஸ்லிம்களைக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்வதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்தார். பாடசாலைகளை நிறுவினார். பாடநூல்களை எழுதினார். எகிப்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கண்டியில் வாழ்ந்த ஒறாபி பாஷா இவரின் சமூகப் பணிகளுக்கு துணைபுரிந்தார். 1884-ல் கொழும்பு, புதிய சோனகத் தெருவில் முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை தோற்றுவித்தார். இதற்கு ஒறாபி பாஷா நூறு ரூபாவை நன்கொடையாக வழங்கினார். இப்பாடசாலை ஏழு வருடங்களுக்கு பின்னர், 'அல்-மதரசதுல் கைரியா' என மாற்றம் பெற்றது. இது பின்னர் கொழும்பு சாஹிரா கல்லூரியாக ஆனது. இவரது கல்விக் கூடங்களில் இஸ்லாமியப் பெண்களும் கல்வி பயின்றனர். பெண்கள் தலைமை ஆசிரியர்களாகப் பதவி வகித்தனர்.

இதழாசிரியர்

முஸ்லிம் நேசன்

சித்திலெப்பை மரைக்காயர் இலங்கையின் முதல் முஸ்லிம் பத்திரிகையாளர். டிசம்பர் 21, 1882-ல் ’முஸ்லிம் நேசன்’ என்ற அரபு-தமிழ் வார இதழைத் தொடங்கினார். ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் குரலாக இதழ் அமைந்தது. முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் எழுதினார். தத்துவம், அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் போன்றவற்றைத் தமது பத்திரிகையில் வெளியிட்டார்.

ஞான தீபம்

1892-ல் 'ஞானதீபம்' பத்திரிக்கையைத் தொடங்கினார். இதில் ஆன்மீகம் தொடர்பான பல கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

சித்திலெப்பை மரைக்காயர் அசன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதினார். அசன்பே சரித்திரம் தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவல், ஈழத்தில் வெளிவந்த முதல் நாவல் என்ற வகையில் முக்கியமானது. முஸ்லீம் மாணவர்களுக்கென அரபு இலக்கணம், இஸ்லாம் சமயம் தொடர்பான நூல்களையும் எழுதினார்.

இலக்கிய இடம்

‘அசன்பே சரித்திரம்’ தமிழின் முதல் கட்ட நாவல்களில் ஒன்று என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சித்திலெப்பை மரைக்காயர் நவீன உரைநடை இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

நினைவு

சித்திலெப்பை மரைக்காயரின் நினைவாக ஜூன் 11, 1977-ல் மத்திய அரசு ஒரு ரூபாய் அஞ்சல் தலை வெளியிட்டது

மறைவு

சித்திலெப்பை மரைக்காயர் பிப்ரவரி 5, 1898-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • துருக்கி கிரேக்க சரித்திரம்
  • உமறுபாஷா
  • யுத்த சரித்திரம்
  • இலங்கை சோனகர் சரித்திரம்
  • அபூநவாஸ் கதைகள்
நாவல்
  • அசன்பே சரித்திரம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Mar-2023, 11:01:22 IST