under review

ச. ஆரோக்கியநாதன்

From Tamil Wiki
ச. ஆரோக்கியநாதன்

ச. ஆரோக்கியநாதன் (பிறப்பு: ஜூலை 13, 1948) மொழியியல் அறிஞர், பேராசிரியர். மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றை ஆய்வுகள் செய்தார். அசாம், நாகாலாந்து பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் மொழி குறித்த அகராதியை உருவாக்கினார். அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

ச. ஆரோக்கியநாதன் புதுச்சேரியில் சந்தனசாமி, செயமேரி இணையருக்கு ஜூலை 13, 1948-ல் பிறந்தார். புதுச்சேரியில் உள்ள பாத்திமா பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் இளம்-அறிவியல் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பயின்றார். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆசியவியல் மொழியியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். ச. ஆரோக்கியநாதன் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தங்கூல், இந்தி, பிரெஞ்சு முதலிய மொழிகளை அறிந்தவர்.

ஆசிரியப்பணி

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், புல முதன்மையராகவும், தேர்வுநெறியாளராகவும் பணியாற்றினார். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார். அயல்நாட்டு மாணவர்களுக்கும் புதுவை அரசுப்பணியில் உள்ள பிறமொழியை தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகளுக்கும் தமிழைப் பயிற்றுவித்தார். இவர் மேற்பார்வையில் பதினொரு பேர் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர். நாற்பது பேர் இளம் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர்.

பொறுப்புகள்

  • புதுவைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார்.
  • புதுவை அரசிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் கல்வித்துறைப் பணிகளில் ஈடுபட்டு, பணியாற்றினார்.
  • மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (CIIL) ஆய்வு உதவியாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார்(1972-1977).

ஆய்வு வாழ்க்கை

நாகாலாந்து, அசாம் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் பேசும் தங்கூல் (Tangkhul) மொழியை ஆராய்ந்து, அம்மக்களின் மொழிக்கு இலக்கணமும், அகராதியும் எழுதினார். பண்பாட்டுத் தளத்திலும் பல ஆய்வுகள் செய்தார்.

ச. ஆரோக்கியநாதன் பல்வேறு ஆய்வு நிறுவனங்களிலிருந்து நிதிநல்கைகள் பெற்று ஆய்வறிஞராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார். அவ்வகையில் ஜெர்மன் நாட்டின் ம்யூனிக்(Munich) நகரில் உள்ள பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கலந்துகொண்டு வழங்கினார்.

மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றை ஆய்வுகள் செய்தார். அது தொடர்பான நூல்களை எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

ச. ஆரோக்கியநாதன் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபத்து மூன்று நூல்களையும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அசாம், நாகாலாந்து பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் மொழி குறித்த அகராதியை உருவாக்கினார்.

விருது

தொல்காப்பியப் புலமை, ஆய்வு ஆளுமையைப் போற்றும் வகையில் 2025-ல் புதுச்சேரியில் "தொல்காப்பிய ஆய்வறிஞர்" என்னும் விருதை உலகத் தொல்காப்பிய மன்றம் வழங்கியது.

நூல் பட்டியல்

தமிழ்
  • நெஞ்சின் அலைகள் (Author's Publication, Pondicherry) (2024)
  • பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி (Author's Publication, Pondicherry) (2024)
  • புதுச்சேரி மாவட்டத் தேவாலயங்கள்) (2014)
  • மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள் (2009)
  • மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் (Oriental Longmans) (2001)
  • தகவல் தொடர்பியல் (1993)
  • மொழியியல் சிந்தனைகள் (1993)
  • இலக்கியச் சாரல் (1992)
  • காரைக்கால் புதுச்சேரி தெருப்பெயர் ஆய்வுகள் (1990)
  • விண்ணைத் தொடும் விழுதுகள் (1989)
  • சமூக மொழியியல் அகராதி) (1988)
  • இருமொழிய ஆய்வுகள் (1987)
  • கிளை மொழியியல் (1987)
  • மொழியியில் இரட்டை வழக்கு (1986)
ஆங்கிலம்
  • Le Tour De Pondy (Pondicherry Tourist Guide book) (Author's Publication) (2025)
  • Spoken Tamil for Foreigners (A-Team Info Media Publishers) (2012)
  • Tangkhul Naga Dictionary (Central Institute of Indian Languages (CIIL), Mysore) (1996)
  • Language Use in Mass Media (Creative Publishers, New Delhi) (1988)
  • Tangkhul Grammar (CIIL, Mysore) (1987)
  • Seminar on Dialectology (edited) (Tamil University, Thanjavur) (1986)

Tangkhul Folk Literature (CIIL, Mysore) (1982)

  • Tamil clitics (Dravidian Linguistics Association, Trivandrum) (1981)
  • (Tangkhul Phonetic Reader: CIIL, Mysore) (1980)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:24:27 IST