கொடை(வெட்சித்திணை)
கொடை வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சி மறவர் கவர்ந்த ஆநிரைகளை வேண்டுபவர்களுக்கு கொடையாக அளிப்பது கொடை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஊர்ப் பொது மன்றில் தந்து நிறுத்திய ஆநிரைகளில் ஒன்றேனும் எஞ்சாதபடியும், வேண்டிவந்தவர்கள் ஒருவரும் விடுபடாதபடியும், தமக்குப் பின்னொரு காலத்து வேண்டுமென்று எண்ணாமல், பசுக்களை விரும்பி விரைந்து கொடுப்பது கொடை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஈண்டிய நிரை ஒழிவின்றி
வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று (கொளு 1.19)
வெண்பா
அங்கட்கு இணையன் துடியன் விறலி பாண்
வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட்
செருச் சிலையா மன்னர் செரு முனையில் சீறி
வரிச் சிலையால் தந்த வளம் (16)
பொருள்: சிவந்த கண்ணினராகப் போர்க்குப் பின்னிடாத மன்னர், போர் முனையிலே சீற்றங்கொண்டு கொணர்ந்த ஆநிரையாகிய வளமெல்லாம், அழகிய கண்ணாற் சிறந்த கிணைப்பறையினை உடையவனும், துடிப்பறையினைக் கொட்டுபவனும், விறலியும், பாண்மகனும், தாம் உண்ட வெவ்விய கள்ளுக்கு வீசியெறியும் விலையாக அமையும். . . . . (விறலியர் கொடையாக ஆநிரைகளைப் பெற்றனர்).
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 18:22:51 IST